நூல்: வீரப்பன் – வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (4 பாகங்கள்)
ஆசிரியர்: பெ.சிவசுப்பிரமணியம்
வெளியீடு: சிவா மீடியா.
மொத்தம் : 1734 பக்கங்கள்
விலை :  ரூ.1700/-

வரலாற்றில் இன்று வரையும் கூட அதிகம் சர்ச்சைக்குள்ளான ஒருவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதென்பது மிக சவாலான பணி. அதுவும் 1734 பக்கங்களில் , 30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் நன்கு அறிந்த ஒருவரின் வாழ்க்கையை விளக்கும் இந்நூலில் பகிரப்பட்ட கருத்துக்களின் உண்மைத்தன்மையை யார் வேண்டுமானாலும் எளிதில் குறுக்கு விசாரணை செய்து குறைகண்டுபிடிக்கலாம். தங்கள் பின்னணியில் இருந்து விமர்சனம் செய்துவிடவும் இயலும். அதேநேரம் , அவர் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளைத் தருகின்ற வாழ்க்கையையும் வாழ்ந்துவிடவில்லை. கொண்டாடத்தக்க , அதிகம் வெறுக்கத்தக்க , முடிவெடுக்க இயலாமல் பயங்கலந்து வணங்கத்தக்க , என்று கலவையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். 

இப்படிப்பட்ட வாழ்க்கையில் , ஓரங்கமாகத் திகழ்ந்த “நக்கீரன்” பெ. சிவசுப்பிரமணியம் என்கிற ஆளுமையால்தான் இப்படிப்பட்ட ஒரு படைப்பைக் கொடுக்கமுடியும் என்று நம்புகிறேன். ஆய்வின் அடிப்படையில் பலரும் , தகவல்களைத் திரட்டலாம். தொகுக்கலாம். ஆனால் , தமது சொந்தத் தலையீடு இல்லாமல், கிடைத்த தகவல்களின் பல்முனைப் பரிமாணத்தை சுவையோடு முன்வைத்து எழுதுவது என்பது தோழர் சிவா போன்றோரால்தான் முடியும். 1996 முதல் 2000 வரையில் வீரப்பனுடன் நேரடித் தொடர்பும் ,பின் 2004 ல் வீரப்பன் மறையும் வரையில் அவரையொட்டிய வலைப்பின்னலோடு மறைமுகத் தொடர்பும் கொண்டிருந்திருக்கிறார். நூலாசிரியர் ,தான் சென்று வந்த காடுகள் , நில அமைப்பு , வீரப்பன் குழுவினரின் அன்றாடச் செயல்பாடுகள் , பொதுவான காட்டு வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை நெருக்கமாகக் கண்டு அவதானித்து உள்வாங்கியுள்ளது , இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் கூர்மையாக வெளிப்படுகின்றன.

வீரப்பனை பிரதான பேசுபொருளாகத் துணைக் கொண்டு, அவரது துவக்க காலம் தொட்டு , அந்திமக் காலம் வரையிலான இரு மாநில அரசியல் போக்குகள் , அதிகார இயந்திரங்களின் குரூரமான அணுகுமுறைகள் , எளிய மக்கள் பெற்றதும் – இழந்ததும் , இதர புரட்சிகர இயக்கங்களின் செயல்பாடுகள் வீரப்பனை வளைத்துக் கொள்ள விரும்பியவை மற்றும் அந்த அமைப்புகளுக்கான காரணங்கள் , ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் , பல்துறை சாகச நாயகர்கள் , பல்துறை மனிதத் தன்மையற்ற அதிகாரிகள் , அதிகாரக் கோமாளிகள் , எளிய மனிதர்களின் சிறிய பலவீனங்களால் நிகழ்ந்த பேரழிப்புகள் , காடும் சூழலும் விலங்குகளும் பறவைகளும் என , கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் செங்கப்பாடியில் தொடங்கி , தும்கல் காட்டுப்பகுதி வரை நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று , அந்தந்த மனிதர்களோடே உரையாட வைக்கும் எழுத்து நடை , இத்தொகுப்பின் ஆகப்பெரும் பலம்.

சம்பவங்களை விவரிப்பதற்கு , நூலாசிரியர் துணைக் கொள்கின்ற சாட்சிகளின் நேரடி வாக்குமூலங்களை வைத்தும் , இரு மாநிலங்களின் ஆவணக் காப்பகங்களில் இருந்து பெறப்பட்ட வழக்கு விபரங்கள் மற்றும் பலரும் அறிந்திடாத புகைப்படங்களை வைத்தும் , இந்நூலாக்கத்தினை முன்மாதிரியான உண்மைக்கு உகந்த படைப்பாக உருவாக்கியிருக்கிறார் என்னால் உறுதியாக உணர்ந்து கொள்ள முடிந்தது.சான்றுகளைப் போலவே , வாக்குமூலங்களும் மிக முக்கியமான அம்சம். குறிப்பாக , சாட்சிகளில் பலரும் சர்ச்சைகள் அதிகம் நிறைந்த வீரப்பன் குறித்து ஆதரவாகவும் , எதிராகவும் தம் தரப்பு நியாயங்களுடன் தகவல்களை , கேட்கின்ற எல்லோரிடத்தும் பகிர்ந்துவிடுவதில்லை. தகவல்களைப் பெறவும் , பெறப்பட்ட தகவல்களை குறுக்கு விசாரணை செய்து அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் , எழுத்தாளர் , இவர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். சாமான்ய மக்கள் முதல் , பெயர் வெளியிட விரும்பா அதிகாரிகள் உட்பட அனைவரது நம்பிக்கையைப் பெற்று இருக்கும் எழுத்தாளரின் ஆளுமை என்னை வியக்க வைக்கின்றது.உத்தேசமாக இத்தொகுப்பில் நூற்றுக்கணக்கான சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 2014 ல் தொடங்கி 2020 வரை 7 ஆண்டுகாலப் பெரும் உழைப்பைக் கொட்டி , இந்நூலை உருவாக்க என்ன காரணம் ? என நானாக சில முடிவுகளுக்கு வந்தேன்.

அதிகார இயந்திரங்கள் தங்கள் கணக்கில் வராத கொடூரமான  சுமைகளையும் , வீரப்பன் மேல் ஏற்றி வைத்ததை அம்பலப்படுத்த வேண்டும்,

கட்டுக்கதைகளும் , அற்பப்புகழுரைகளும் , சார்புத்தன்மை நிறைந்த புனைவுருவாக்கத்திற்கும் இடையில் , உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்கிற ஊடகவியலாளரின் அடிப்படை அறப்பண்பு

பிரம்மாண்டமான சாகசங்களின் பேரொளிக்கு முன்பு , பொலிவிழந்து போன எளிய மனிதர்களின் வாழ்க்கை மீது இருந்த கவனமும் ஆர்வமும்

ரசனைமிக்க தகவல்கள் விற்பனைப்பண்டமாகிப் போன நிகழ்காலத்தில், வீரப்பனும் ஒரு வியாபாரமாகிப் போய்விடக்கூடாதென்கின்ற அக்கறை ,

எந்த ஒரு சீருடைச் செயல்பாடுகளுக்குப் பின்னும் நசுக்கப்பட்ட திறமையாளர்களின் கூக்குரல்களைப் பொதுத்தளத்திற்குக் கொண்டுவரவேண்டும்  என்கிற உள்ளுணர்வு 

—இவைதான் எழுத்தாளரை இந்நூல்களை எழுதத்தூண்டியிருக்கும் என நான் கருதுகின்றேன்.

புத்தகங்கள் விற்பனை என்பது குறைந்து கொண்டிருக்கின்றன என்று , ஆகப் பெரும் எழுத்தாளர்களும் , பதிப்பாளர்களும் அலறிக் கொண்டிருக்கும் சூழலில் துணிச்சலாக 1734 பக்கங்களில் இத்தொகுப்பைக் கொண்டு வருவதற்கு , எழுத்தாளருக்கு வியாபார எண்ணம் மட்டும் இருந்தால் போதாது , அதை மீறி , உண்மை ஒவ்வொருவருக்கும் சென்று சேர வேண்டும் என்கின்ற தீராதாகம் இருந்தால்தான் இதுபோன்ற துணிச்சலான படைப்புகள் தமிழுக்குக் கிடைக்கும்.அந்த வகையில் எழுத்தாளரும்-வெளியீட்டாளருமான தோழர்.பெ.சிவசுப்பிரமணியம் அவர்களின் இந்த முன்மாதிரியான நீண்ட நாள் உழைப்பு , எங்களைப் போன்ற வளரும் தலைமுறைகளுக்கு முன் உதாரணம்.

அதுபோலவே வீரப்பன் நல்லவரா ? கெட்டவரா ? என்பதை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய தேவை எழுத்தாளருக்கு இல்லை என்பது கூடுதல் சுதந்திரம் அளித்திருக்கின்றது. ஆனாலும் நான்கு தொகுப்பையும் வாசித்து முடிக்கையில் நாம் வீரப்பன் பக்கம் நின்றிருந்தால் , அதற்குக் காரணம் எழுத்தாளரல்ல , காரணம் யார் என்பதை நான் இங்கே விளக்க வேண்டிய தேவையுமில்லை. நடந்தவற்றிலிருந்து நாமாக ஒரு சொந்த முடிவிற்கு வருவதற்கான எண்ணற்ற வாய்ப்புகளை இத்தொகுப்பு நமக்கு அளித்து விடுகின்றது.

வீரப்பன் தரப்பிலும் சரி , அரசுத் தரப்பிலும் சரி , ஏற்பட்ட உயிர்ப்பலிகளை சம முக்கியத்துவம் கொடுத்து விவரித்திருப்பது , வன்முறை மீது வாசகனுக்கு வெறுப்பைத் தூண்டுகின்றது. சில மனிதர்களின் உண்மைக் குணத்தை , அவர்கள் நடந்து கொண்ட விதத்தை அப்படியே பதிவு செய்து இருப்பதை வைத்தும் நாமாக ஒரு முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. அந்தக் காலத்தில் அவருக்கான அரசியல் பின்புலம் குறித்து இதுவரை அடக்கியே வாசித்து வந்திருந்த சூழலில் , அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டியதில் இதன் ஆக்கம் தனித்துத் தெரிகின்றது.வாழ்க்கைப் போராட்டங்களைத் தாண்டி , இதனூடே விளிம்புநிலை மனிதர்களின் பிழைத்திருத்தலுக்காக இனக்குழு மரபில் தொடர்ச்சியாக பிரயத்தனம் செய்து கொண்டிருந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது . அவர்களின் சடங்குகள் , பிற சாதியினரோடான ஒத்திசைந்த வாழ்க்கை மற்றும் இயற்கையுடனான அவர்களின் உரையாடல்களையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அதுபோலவே இரண்டாம் பாகம் , “தர்மபுரி,சேலம் , ஈரோடு, கோவை , மைசூர் , சாம்ராஜ்நகர்” மாவட்டங்களில் வாழ்ந்த அப்பாவி மலைக் கிராம மக்களின் வாழ்க்கையை சீரழித்த அதிகார வெறியைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. 1990 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் வீரப்பனால் கொலை செய்யப்பட்டவர்கள் 42 பேர். ஆனால் இதே கால கட்டத்தில் இருமாநில அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் 62பேர். இதில் 16 பேர்களின் நிலை குறித்து இன்று வரையிலும் தகவல் இல்லை. இதைத் தவிர , வழக்குப் பதிவே இன்றி , பாலியல் அடிமைகளாக ஆண்டுக்கணக்கில் சீரழிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களையும் இவர்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அப்பாவிகளைக் கொன்று , அவர்களை வீரப்பன் கூட்டாளிகளாகக் கணக்குக் காட்டுவதில் தேவாரமும் – சங்கர் பிதிரியும்(கர்நாடகா) ஒன்றுக்கொன்று சளைத்தவர்களில்லை என்பதை பல கொலைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். அப்பாவிகளை , குடோனில் மூட்டைகளைப் போல இருப்பில் வைப்பதும் , சாதாரணத் துண்டுச் சீட்டு கொடுத்தாலே , அவர்களை என்கவுண்ட்டருக்கு அனுப்புவதும் “ கருப்பு அடிமைகள் மீதான” தாக்குதல்களை விட அதிர்ச்சியானதாக இருந்தது.

நீதியரசர் சதாசிவா மற்றும் பி.வி.நரசிம்மன் விசாரணை ஆணையத்தின் முடிவுகள் இன்னும் பல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இரு மாநிலக் கூட்டு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டதற்கான எந்த அரசாணையும் , மாநில அரசிதழ்களில் வெளியிடப்படவில்லை.வெறும் வாய்மொழி உத்தரவாகவே , பல அதிகாரப்படுகொலைகள் அரங்கேற்றியிருந்தது குறித்து , இந்த விசாரணைக் கமிஷனே வருத்தத்தைப் பதிவு செய்திருப்பது , சீருடை அதிகாரத்தின் மீதான எஞ்சியிருந்த நம்பிக்கையை ஆட்டங்காணச் செய்து விடுகிறது.

வாச்சாத்தி படுகொலைகளும் , அங்கு நடைபெற்ற பாலியல் கொடுமைகளும் தனிக்கதை என்றாலும் , இவை இரண்டுமே எளியோரை மேலும் நசுக்கித் திளைத்து அதில் சுகங்காணுகின்ற , நவீன மெத்தப்படித்த சில கழிசடைகளின் வெறிகள் மீது நமக்கும் காத்திரமான கோபத்தை வரவழைக்கின்றன.குறிப்பாக , தமிழர் மீதான வெறுப்பால் , “இயல்பாகவே இந்தப் படுகொலைகள் கர்நாடகக் காவல்துறையால் அதிகமாகவே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பொது சமூகம் இவற்றை ஏற்றுக் கொள்ளும் வகையிலான அறிக்கையைத் தயாரிப்பதில் துணைபோன சார்பு அதிகார அமைப்புகளான வருவாய்துறை , மருத்துவத்துறை, வனத்துறைகளின் மனமுவந்த ஒத்துழைப்பும் இணையான அதிர்ச்சியைத் தருகின்றன.

வீரப்பன் குழுவினருக்கும் – காவல்துறைக்கும் இடையேயான பிழைத்திருப்பதற்கான போராட்டத்தில், அப்பாவிப் பலியாடுகள் , துருப்புச் சீட்டுகள் , உளவாளிகள் , ஆசையாலும் அதிகாரத்தாலும் அழிந்தவர்கள் , தவறிக் கடத்தப்பட்ட இயற்கை ஆர்வலர்களும் அவர்கள் நடத்தப்பட்ட விதம் , கேட்ட பிணைத்தொகை கிடைக்காவிட்டாலும் மரியாதையாக நடத்தப்பட்ட பிணைக் கைதிகள், காதல் , உதவி , துரோகம் ,வஞ்சம் , பழிவாங்கல் என எல்லாவற்றையும் அத்தியாயங்களாகப் பிரித்து , காலவரிசையோடு தொகுப்பது பெரும் சவாலான ஒன்று. அதுவும் 2004 ல் முடிந்துபோன ஒன்றை , 2020ல் மீட்டு உருவாக்கம் செய்கின்ற அசாத்தியப்பணியை தமது 4 தொகுப்புகளிலுமே செவ்வனே செய்திருக்கிறார்.கடந்த 20 ஆண்டுகளாக வெளியில் தெரியாமல் இருந்த பல சங்கதிகளை இந்நூலின் வழியாகச் சொல்கிறேன் என்று கூறி , தமது மூன்றாவது தொகுப்பைத் துவக்குகிறார். அந்தப் பாகம் முழுமையும் , கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலைப் பற்றி மட்டும் துல்லியமாக அலசி ஆராய்கின்றது.அரசுகளும் வீரப்பன் போன்ற ஆட்கள் , அமைப்புகளிடம் நடக்கும் எந்தப் பேச்சு வார்த்தையிலுமே உண்மைகள் வெளியே வருவதில்லை.இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிய வேண்டியது அவசியமாகிறது என்பதன் பொருட்டு , இந்த பாகத்தை எழுதியிருப்பதாகக் கூறும் எழுத்தாளர் , அத்ற்கு நியாயம் கற்பிப்பது போலவே செம்மார்ந்த பணியாக , அதன் உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதும் நன்கு புலப்படுகின்றது.

பதினைந்து கோடி ரூபாய் பணத்தை வாங்கிய வீரப்பன் அதை எல்லாம் என்ன செய்தார் ..? சத்தியமங்கலக் காட்டிலிருந்து எதற்காகக் கோவை மாவட்டம் செம்மந்திமலைக் காட்டுக்குப் போனார்..?வீரப்பன் ஒரு கிரிமினல். ஆனால் அவரிடம் கிரிமினல்களுக்கு உள்ள எந்தக் குணமும் இல்லை. மதுப்பழக்கம் , புகைப்பழக்கம் இல்லை. பெண்களைத் தாயாகவும் , சகோதரியாகவும் பார்க்கிறார். ஏழை மக்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்கிறார். தன்னிடம் ஒரு பிரச்சனையைச் சொன்னால் அதை முடித்து வைக்கிறார். சாமானிய மக்களிடம் பணம் பிடுங்குவதும் இல்லை. இப்படிப்பட்ட ஒருவரைப் போலீசால் எளிதில் பிடிக்க முடியாது. இவரைப் போலவே குணமும் , எண்ணமும் , நோக்கமும் கொண்ட ஒருவரால்தான்நெருங்க முடியும். அப்படி என்றால் அத்தகைய தயாள குணம் நிறைந்தவரா ஏ.டி.ஜி.பி. கே.விஜயகுமார்?தனது வீரப்பன் என்கவுண்ட்டரை மையமாக வைத்து எழுதிய “சேஸிங் தே பிரிகன்ட்” நூலில் முன்வைத்த உண்மைகளும் (?) , நூலாசிரியர் தம் கள ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் , மாவோயிஸ்ட் மற்றும் இதர புரட்சிகர அமைப்புகளின் அவமானகரமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை நான்காம் பாகம் விளக்குகின்றது.

வாசகர்கள் உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்புகின்ற ஒன்று , “வீரப்பன் எப்படி கொலை செய்யப்பட்டார்?என்பதுதான்.ஏறத்தாழ நாகப்பா படுகொலைக்குப் பிறகான 350 பக்கங்களும் 2004 ன் சூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தைத்தான் துல்லியமாக விளக்குகின்றது. வீரப்பன் கொல்லப்பட்டது குறித்த உண்மையை மறைக்கவே உண்மை அறியும் குழுவை அமைத்துள்ளனர் என்பது அந்தக் குழுவிலிருந்த பலருக்குமே தெரியவில்லை என்கிற அதிர்ச்சியான தகவலாகட்டும் ,

அவருடைய இறுதிக் கால கட்டத்தை , பல பரிமாணங்களில் இருந்து அணுகியிருப்பதும் , இணையாக , காவல்துறையில் நடைபெற்ற தன்முனைப்பு பலிகளச் செயல்பாடுகள் குறித்தும் ஒரு சேர விளக்கியிருப்பது சுவாரஸ்யமாகவும் , புதிதாகவும் இருந்தது.

டி.சி.எஃப்.நிவாஸும் , துரைப்பாண்டியனும் வீரப்பனை சந்தித்து இருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்? இருவருடைய சந்திப்பிற்கும் இயற்கை போதுமான கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது. ஆனாலும் , தோல்வியில் முடிந்துபோகவே, எதிர்பாரா முடிச்சுகளையும் உடன் சேர்த்தே வழங்கி இருக்கின்ற காலக் கொடுமையை நொந்தவாறே , கனத்த இதயத்தோடு , நாம் வீரப்பனுடனான பயணத்தை நிறைவு செய்ய நேரிடுகிறது.

தமிழ் இலக்கியத்தில் , இந்நூலை எந்தப் பட்டியலின் கீழ் வகைப்படுத்துவது என்பதில் எனக்குப் பெரிய சிக்கல் இருக்கின்றது.ஏனெனில் , இந்நூல் பரவிக் கிடக்கும் தளம் மிக மிகப் பெரியது. ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து விட முடியாது. ஒட்டுமொத்தமாக இந்நூல் பல ஆய்வுத்தளங்களுக்கான நுழைவு வாயில்களையும் திறந்து விடுகின்றன.

நான் வாசித்த அளவில் , தனித்துவம் நிறைந்த பல அம்சங்களால் , இந்நூல் எனது தனிக்கவனத்திற்குரியதாகவும் , எனது நெருக்கமான நூல் பட்டியல்களுள் ஒன்றாகவும் இடம் பிடித்துவிட்டது.

ஆய்வாளர்கள் , புலனாய்வு வாசகர்கள் , சாகச விரும்பிகள் , இயற்கை ஆர்வலர்கள் , வரலாற்றில் நாட்டம் உடையோர் ,அரசியல்-சமூகப் பொருளாதார ஆய்வு மானவர்கள் , திரைத்துறை நண்பர்கள் ,விளிம்பு நிலை இலக்கிய விரும்பிகள் என , மிகப் பரந்த வாசகர்களை உள்ளடக்கிய நூலாகத் தனித்துத் தெரிகின்றது

அவசியம் வாசித்தே ஆக வேண்டிய நூல்களில் இவைகளும் ஒன்று.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *