நூல் அறிமுகம்: வீரயுக நாயகன் “வேள்பாரி” -தொகுதி 2 – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: வீரயுக நாயகன் “வேள்பாரி” -தொகுதி 2 – பா. அசோக்குமார்

முதல் தொகுதியின் பிரமிப்பு அகலவே பல வாரங்கள் ஆனது என்பதே உண்மை. முதல் தொகுதியிலிருந்து முற்றிலும் வித்தியாசமான அனுபவமே இந்த இரண்டாம் தொகுதி.
முதல் தொகுதி படித்தவுடனே இரண்டாம் தொகுதி படித்திருக்க வேண்டுமோ என்ற அங்கலாய்ப்புடனே இதனை வாசிக்கும்போது உண்டானது என்பது மறுப்பதற்கில்லை.
முதல் தொகுதி – வெறும் டிரெய்லர் தான் என்பது இதனைப் படிக்க படிக்க தோன்றிக் கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்தவரை முதற்தொகுதி முழுவதும் கதாபாத்திரங்களின் அறிமுகப் படலங்களே…
“முல்லைக் கொடிக்கு தேர் ஈந்தான் பாரி” என்ற வகையில் மட்டுமே அறிந்திருந்த பாரியின் வீரயுக பாய்ச்சலே இந்த ” வேள்பாரி”. முல்லைக்கு தேர் ஈந்த காரணமான நிகழ்வு காவியக் காதலின் நீட்சியென அறிந்து உண்டான மிரட்சி இன்னும் அகலவே இல்லை.
பாரிக்கும் ஆதினிக்கும் இடையே மலரும் காதல் அந்நோன்யத்தை குலப்பெருமையை பறைசாற்றும் வண்ணம் எடுத்தியம்பிய விதம் பரிசுத்தமானது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதோவொரு தாவரமோ, உயிரினமோ, இயற்கை நிகழ்வுகளோவென்று புத்தம் புது தகவல்களுடன் காட்சிகளைப் பரிமாறி நம்மை வியப்பின் உச்சத்தில் மிதக்கச் செய்கிறார் எழுத்தாளர்.
தோகை நாய்களின் வரவு பேரிரைச்சலாக நமது காதுகளில் ஆக்கிரமித்து நமது அச்ச உணர்வைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்து, குதிரைகளின் பலிகளில் நமது தசைகளும் கிழிப்படும் வண்ணம் கிலியை ஏற்படுத்திய எழுத்துநடை தனித்துவமானது தானே.
தோகை நாய்களை முறியடிக்கும் தந்திரமோ தேன்சுவைத் தித்திப்பு ரகமன்றோ!
வண்ண வைர, வைடூரிய விலை மதிப்பற்ற புதையலைத் தேடி பயணிக்கும் சோழப்படையுடன் கைகோர்க்கும் “காடர்கள்” (மேல், கீழ், குறு) இனக்குழுவின் இயல்புகள் மாயஜால மந்திரசக்தியை நினைவூட்டுவதாகவே அமைந்து ரணகளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மணலைப் போர்வையாக்கி மாயமாக படுத்துறங்கி பின் தாக்கும் காட்சி அதி அற்புதமன்றோ!
எதிரி யானைகளேயென்றாலும் உயிர்ப்பலி கூடாதென்று தண்ணீரில் விசேஷ குணமிக்க “சங்கு அட்டை” பூச்சிகளை அனுப்பி எதிரிப்படையைத் துவம்சம் செய்யும் காட்சியின் கற்பனாசக்தி அலாதியான தந்திரயுக்திதானே!
முதற்தொகுதியில் அறிமுகமான கதாபாத்திரங்களின் குண இயல்புகளை மறவாமல் இருந்தால் மட்டுமே பல நிகழ்வுகளின் அற்புதங்களைச் சிந்தாமல் சிதறாமல் பருக இயலுமென்பதே நிதர்சனம்.
யானையை பழக்கப்படுத்துவதே ஆச்சரியமாக பாவிக்கும் மனநிலையில் உள்ளோரை, திரையர்கள் காட்டெருமைகளை வசியப்படுத்தும் யுக்தி குறித்த தகவல்கள் நம்மை திக்கு தெரியாத காட்டில் தத்தளிக்க வைப்பதாகவே மிரட்டுகின்றன எனலாம்.
மூவேந்தர்களும் இணையும் நிகழ்வை மிக நேர்த்தியாக கோர்த்த தருணங்கள் சிந்தனையைக் கிளர்ச்சியுறச் செய்வதாகவே உள்ளன.
முதற்தொகுதியில் “காமன்விளக்கு” குறித்த தகவல்கள் பிரமாதமென  ரசித்து கிடந்த வாசகனைத் திக்குமுக்காட வைக்கும் வண்ணம் வேறோரு கோணத்தில் அதன் அழகு ரகசியத்தை மொட்டு அவிழ்க்கும் அத்தியாயம் மன்மத பாணத்தை நமது மனதில் இறங்கும் முயற்சியன்றோ….
நீலனை பயணக்கைதியாக பிடித்து வருவதற்கு எடுத்தாளப்படும்  “நாகரவண்டுகள்” குறித்த உவமைக் கதை கனக்கச்சிதமே…
முன்னதாக மயிலாவின் வளைகாப்பு வைபவ விழாவின் தொடர்ச்சியாக பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ” வள்ளிக்கானம்” சடங்கு நிகழ்வு ரம்மியமாக ஆரம்பித்து எரிமலைச் சுடராக பற்றியெரிந்து போர்க்களத்தின் ஆரம்பத் திரியாக மாறுவது சூழ்ச்சியின் முடிச்சன்றி வேறேது?. அதில் பரிமாறப்படும் பெண்கள் மட்டுமே அறிந்துள்ள அருந்தவுள்ள மதுவகைக் குறித்த தகவல்கள் மெய்யோ, பொய்யோ என மன சஞ்சலப்பட வைக்காமல் தனது போதை எழுத்துக்களால் நம்மை கிறங்கடிக்க வைத்துள்ளார் எழுத்தாளர்.
போரின் கோல்சொல்லிகளாக திசைவேழரும், கபிலரும் நியமனம் ஆகும் காட்சிகள் “விதி வலியதோ” என்ற ஐயத்தை வாரிக்கையனின் வெத்தலைப் பை முடிவு செய்வதெல்லாம் பறம்பு மலையின் இயற்கை நன்கொடையன்றி வேறேது.
போர்நிலம் தேர்ந்தெடுத்தலில் தொடங்கும் ஓட்டம் இறுதிவரை தொடரோட்டமாக ஓடுவதே இந்நூலின் மாபெரும் வெற்றி எனலாம்.
சுழலம்புகளின் நன்கொடைக்காக யானைப்போரைத் தவிர்த்தலில் பாரியின் சூழலியல் மாண்பை பளிச்சிட வைத்துள்ளார் எழுத்தாளர். காற்று, காற்றி என வளிமண்டல தேவதையை ஆண், பெண்ணாக பாவிக்கும் “கானவர்கள்” இனக்குழுவின் சக்தி பிரமிப்பின் உச்சமன்றோ!
ஒவ்வொரு நாளும்,   கருமணலும் ஈக்கிமணலும் நிறைந்த நிலமான “தட்டியங்காடு” போர்க்களத்தில் நடைபெறும் காட்சிகளை நம்கண் விரியும் வண்ணம் தத்ரூபமான எழுத்துநடையால் நம்மை போர்க்களத்தில் இறங்கி ஓட ஓட விரட்டிக் கொண்டே இருந்தாரென்றால் அது மிகையன்றே!
போர்க்களத்திற்கு வெளியே காட்டில் நுழையும் யானைப்படையை திரையர்களின் காட்டெருமை படை கொண்டு சிதறடிக்கும் காட்சி நம் கற்பனைக்கெட்டாத அதி பயங்கர தந்திர யுக்திதானே!
பொற்சுவை கதாபாத்திரம் தேவையற்றதோ என்ற முதற்தொகுதியில் தோன்றிய ஐயத்தின் தெளிவு, இரண்டாம் தொகுதியில் தியாகச்சுடராக மிளிர்ந்து கண்ணீர் சிந்த வைக்கிறதே…
மூவேந்தர்களின் போர் விதிமுறை மீறலின் விளைவாக இராவதன் படையின் மரணம் நிகழ்வது சற்றே நமக்கு  மனநெருடலை அளிப்பதாக இருப்பினும் சூழலும் சந்தர்ப்பமும் சாத்தியமாக்கக் கூடியதே என பாவித்து நமது மனதை ஆற்றுப்படுத்துவதாகவே உள்ளது எனலாம்.
விதிமீறலின் வினைப்பயனாக ‘கோல்சொல்லி’ திசைவேழர் எடுக்கும் தற்கொலை முடிவும் “பறம்பின் ஆசான்” தேக்கம் எடுக்கும் தற்கொலை முடிவும் தற்கொலை மீதான இழி பிம்பத்தை உடைத்து வீரத்தின் மானத்தின் காலக்கண்ணாடியாக காட்சிப்படுத்திய எழுத்தாளரின் யுக்தி அளப்பரியதன்றோ!
கொற்றவைக் கூத்தில் இறந்தவர்களுக்காக மேற்கொள்ளப்படும் இறுதி அஞ்சலி சடங்குகளில் பொற்சுவையும், திசைவேழரும் இருப்பது மனித மாண்பின் உச்சமன்றி வேறேது!
இங்ஙனம் ஒவ்வொரு அத்தியாயம் குறித்தும் ஓராயிரம் வார்த்தைகள் கூறிக் கொண்டே செல்லலாம். கூற வேண்டியவை ஏராளம். கூறியவையோ சொற்பம். நாளும் அசை போட்டுக் கொண்டே இருக்கலாம் நம் வாழ்நாள் வரையிலுமே…
மெய்யோ, பொய்யோ என விவாதம் ஒரு பக்கமிருப்பினும் மூவேந்தர்கள் மீதான தவறான புரிதல் என்ற தர்க்கம் மறுபுறம் இருப்பினும் புனைவு இலக்கியமாக பாவித்தால், இந்த நூற்றாண்டின் அதி அற்புத படைப்பாக நிச்சயமாக இதனைக் கருதலாம்..
அன்பையும், பரிவையும் பூசித்து பல்லுயிர் அறிவுடன் பல்லுயிர் ஓம்புதலையும் நீதிநெறி வழுவாமல் காக்கும் மாண்பை போதிக்கும் மாபெரும் காவியமாக இதனைக் கருதலாம் தானே!
இறுதியில் வரும்,
” பனையன் மகனே! பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!…”
எனத் தொடங்கும் பாடல் பாரியின் வரலாற்றைக் கூறும் கனக்கச்சிதமான பாடலே. மிக மிக அற்புதம்‌.
அற்புதமான படைப்பு.
ஓவியங்கள் ஒவ்வொன்றும் தத்ரூபமாகமாக கதையை காட்சிப்படுத்துகிறது. ஓவியர் “ம.செ” அவர்களின் திறமை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இரு தொகுதிகளையும் இடைவெளியின்றி படிக்க முயலுங்கள்.
நன்றி.
வீரயுக நாயகன் “வேள்பாரி”
சு.வெங்கடேசன்
விகடன் பிரசுரம்
இரண்டாம் தொகுதி
பக்கங்கள்: 800
₹.1350 (1&2)
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *