அப்பா ,
காலம் என்னும் காரிகை
என் தலையை வெளுத்தாள்
நான் அப்பாவானேன் !
உங்கள் தலையை சுத்தம் செய்தாள்
நீங்கள் தாத்தாவானீர்கள் !
இருவரின் வயதும் கடந்தது
ஆனால் ,
ஏனப்பா இருவரின் பேச்சு மட்டும் குறைந்தது !
எனக்கு பேச்சு பழக்கிய உங்களிடம்
நான் என் பேச்சை குறைத்தேன் .
என் மகன் என்னோடு பேசியதாலா ?
இல்லை, என்மகன் உங்களோடு பேசாததாலா ?
இருவரும் மனதிற்குள் பேசிக்கொள்கின்றோம்
எனக்கு மணமான பிறகு
இருவரும் மனதிற்குள் பேசிக்கொள்கின்றோம்
எனக்கு மணமான பிறகு
அளந்து அளந்து பேசுகிறோமே அப்பா
அளவற்ற பாசத்தினை மனதிற்குள் வைத்துக்கொண்டு
யார் பேச ஆரம்பிப்போம்? என்று
நமக்குள் எப்போதும் போட்டிதான்
பேசாமலிருப்பேன் என்று
நீங்கள் வெற்றி பெறும்போது
நான் தோல்வியுருகின்றேன்
நான் தோல்வியுற்றால் தான்
நான் வெற்றி பெறுவேன் என்று
எனக்கு துன்பம் வரும் போது மட்டும்
வாய்திறக்கும் என் வாழ்வே !
அப்பா நீங்கள் என்றும் என் வாழ்வே !
மனைவி இல்லாத போது மட்டும் பேசிக் கொள்கின்றோம்
உங்களுக்கு மறு மகள் இல்லாததாலா ?
என் மகனோடு மட்டும் பேசுங்கள்
உங்கள் மகன் கேட்கின்றேன்
அறியாதவன் தானப்பா
உங்களை நான் அறியாதவன் தானப்பா
அறிந்தவர் நீங்கள் என் குணத்தினை அறிந்தவர்
தெரிந்துமே இப்படி இருக்கின்றோமே
இன்னும் என்னென்னவெல்லாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோமே
இருமினால் ஓடி வருவாயே அப்பா
உன் இருமலை எரிமலையாய் ஏன் பார்க்கின்றேன்
நீங்கள் பாச மலையாய் அன்று என்னை பார்த்ததற்கா
விழித்துக்கொண்டே தூங்குகின்றாயே
நான் விழித்துக்கொண்டிருக்கும் போது மட்டும்
நான் தூங்கும் போதெல்லாம்
விழித்து பார்த்த உங்களுக்கு துணை இப்போது
தூக்கம் மட்டும்
கேட்டு கேட்டு உண்ணக்கொடுத்தாயே அப்பா
நீங்கள் கேட்டால் கொடுக்கலாம் என்றிருந்தேனே தப்பா
நான் சத்தம் போடும் போதெல்லாம்
நான் போய்விடுகின்றேன் என்பாயே
அது நீ என்னை சுத்திகரிக்க கொடுத்த ஒரு நேரம்
சந்தி சிரிக்கக் கூடாதென்று
முந்தி பேசாமலிருக்கும்
தந்தையே நீங்கள் என்றும் என் தாயே
பேசாமல் இருப்பது சாதாரணம்
அப்பா நீங்கள் பேசாமல் இருப்பது ஆரா ரணம்
புரிந்து கொண்டேன் அப்பா
நீங்கள் புதிரல்ல
நான் உங்கள் புத்திரனென்று
வாருங்கள் வீட்டுக்கு போகலாம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.