வேகம் நடனம் – நூல் அறிமுகம்
ஒருவரின் வளர்ச்சிக்கு கல்வி சார்ந்த அனுபவம் எந்த வகையில் முக்கியமோ அதைவிட இரட்டிப்பு முக்கியம் அவர்களுக்கு வாசிப்பு சார்ந்தும் , அனுபவம் சார்ந்த அறிவும் இருப்பது. அதனை சாத்தியப்படுத்துவது குழந்தைகளின் தாத்தா பாட்டிகள் சொல்லும் கதைகளும் அவர்களின் அனுபவ பகிர்வுகளும் என்று கூட சொல்லலாம். எந்த கல்லூரியிலும் , பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெறாமலே அனுபவப் பாடத்தை விடுமுறை காலங்களில் கற்றுக் கொடுத்த காலங்கள் எல்லாம் மலையேறிப் போய்விட்டது என்றாலும் , இன்றைய காணொளிப் பதிவுகள் மாணவர்களுக்கு விரிந்த அறிவை தந்தாலும் அனுபவ அறிவை தருவதில்லை.
இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கதைகளும் அதனை எடுத்தியம்பும் வகையில் அமைந்திருக்கிறது. அறிவியல் நோக்கோடு ஒரு செய்தியை தெரிந்து கொள்வதை கதை சொல்லும் முறையில் கூறியிருப்பது மனதில் பசுமரத்தாணியாய் பதிகின்றது.
உதாரணமாக மின்மினிப் பூச்சி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதன் வயிற்றுக்குள் ஒளிரும் விளக்கு எதனால் என்பது அறிவியல் படித்தவருக்கு விளங்கும் . ஆனால் குழந்தைகளுக்கு அதனை சொல்லும் பொழுது ஒரு குரங்கு, தூக்கணாங்குருவி, மின்மினிப்பூச்சி, நாவல் மரம் என அழகான சூழலை உருவாக்கி ….
எதனால் ஒளிர்கிறது..? அதற்கு காரணமான என்சைம் என்ன..? அழகு இருக்கக் கூடிய இடத்தில் ஆபத்து எப்படி எல்லாம் வருகிறது…? என்பதை விளக்கும் இக்கதை அறிவியலை அறிந்து கொள்ளும் ஆவலை மேலும் தூண்டுகிறது.
சாதாரணமாக எறும்பைப் பற்றி சொல்லப் போனால் குழந்தைகள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதனைப் பற்றி தெரியாத சில விஷயங்களை …
ஒரு எறும்பு 50 மடங்கு தன் எடையை விட அதிகமான எடை தூக்கும் சக்தி வாய்ந்தது , எறும்புகள் விவசாயம் செய்கின்றன , அவைகள் தகவல்களை எப்படி பரிமாறிக் கொள்கின்றன போன்றவற்றை சொல்லும் பொழுது எறும்புகள் மீது ஒரு ஈர்ப்பும் இரக்கமும் ஏற்படுகிறது.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கதைகளை வாசிக்கும் பொழுது நாமும் தாத்தா பாட்டியோடு சேர்ந்து கதைகளை கேட்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றோம். கொள்ளிவாய்ப்பிசாசு என்று ஊர் புறங்களில் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதற்கு காரணமான வாயு என்ன…? அந்த வாயு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது…? எப்படிப்பட்ட நிலங்களில் , எந்த காலங்களில் அவை கொள்ளிவாய்ப் பிசாசாக மாறியது என்ற தகவலும்….மனக்கணக்கிட்டு பல கணக்குகளுக்கு விடைகளைக் கண்டறியும் கணக்குத் தாத்தா கதையும் , கொசுவை உருவாக்கும் கடவுளாக ஆறறிவு படைத்த மனிதனே இருக்கிறான் என்ற தகவலும் அருமை.
சின்ன வயது முதலே நாம் ஆமை முயல் கதையை கேட்டிருப்போம். மணிக்கு எழுவது மீட்டர் நடக்கும் ஆமையும் , மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் முயலும் போட்டியில் சந்திக்கும் பொழுது முயலாமையால் முயல் தோற்று விடுகிறது. இப்படி தோற்றுப் போன முயல் ஆமையிடம் உன்னிடம் போய் தோற்று விட்டேனே என்று கூறும் பொழுது…
ஆமையைத் தரம் குறைவாக நினைக்காமல் ஆமை பற்றின பல அறிய தகவல்களைத் தந்து முயலைக் காட்டிலும் ஆமையை உயர்வாக காட்டி கதையை வேறு கோணத்தில் மாற்றி இருக்கிறார் ஆசிரியர் ஸ்டாலின்.
இப்படி கற்பகவிருட்சமான பனையைக் குறித்தும், இப்புத்தகத்தின் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிற “வேகல் நடனம்” பற்றின கதையும், இறுதியாக புத்தகத்தின் சிறப்பு அம்சமாய் “கேள்வி” என்னும் குறுங்கதையும் அனைவராலும் வாசித்து தெரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயங்களை உள்ளடக்கியது.
இந்த நூல் குறித்த முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்நூலின் ஆசிரியர் திரு .ஸ்டாலின் அவர்கள் இந்த நூலை உருவாக்கம் செய்ய , இதனுடைய ஆங்கில மொழிப்பெயர்ப்பை அவரின் மகள் செய்திருக்கிறார். இந்த புத்தகத்தில் இரு மொழிகளிலும் கருத்துக்கள் தரப்பட்டிருப்பது கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நல்ல ஒரு முன்மாதிரியான நூல். இரு மொழிகளிலும் புலமை பெறுவதற்கும் அரிய பல தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பைத் தந்தது.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : வேகம் நடனம்
ஆசிரியர் : ஸ்டாலின்
பக்கங்கள் : 80
தலைப்பு : அறிவியல்
நூல் அறிமுகம் எழுதியவர் :
பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.