புத்தகத்தின் பெயர்:- வேலைக்காரிகளின் புத்தகம்
ஆசிரியர் :- ஷோபா சக்தி
நூல் வெளியீடு :- கருப்புப் பிரதிகள்
விலை:- 65/-
பக்கம்:- 145
பெறுவதற்கு :- 9444272500
முதற் பதிப்பு :- ஜனவரி 2007.
நண்பர்களே,
இப்படியாக எழுதுகிறார் ஆசிரியர் ஷோபா சக்தி அவர்கள்., 1978ல் தான் பேருந்து வந்தது. 1981ல் தான் மின்சாரம் வந்தது. வறுமையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்த மக்களிடையே 1984ல் முதலாவது வெடி விழுந்தது. ஆம் நண்பர்களே அது தான்,இலங்கையின் வடபகுதியில் இருக்கும் ஒரு சிறிய தீவாகிய அல்லைப்பிட்டி என்னும் கிராமம்.
எட்டுத் தலைப்புகளில் கீழ் கட்டுரையாகப் பல சம்பவங்களை இங்கே நினைவு படுத்துகிறார் ஆசிரியர். குறிப்பாகத் தமிழ் மக்கள் நிட்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள். அல்லைப்பிட்டிக் கிராமத்தின் அனைத்து விபரங்களையும் மிகக் கூர்ந்து கவனித்து, அதனைத் தரவுகள் மூலம் பதிவு செய்வதால், அக்கிராமத்தில் நிலைப்பாட்டை முற்று முழுதாக அறியக்கூடியதாக உள்ளது. ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ இன்னும் தந்திராத சபிக்கப்பட்ட கிராமமாக எங்கள் முன் கொண்டுவருவது, அதன் நிலைப்பாட்டை சிந்திக்க வைக்கிறது என்றே சொல்லலாம்.
அப்போ நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை இராணுவம் எப்படி தங்களது கிராமத்தை முற்றுகையிட்டது, அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள், இருதரப்பினரதும் கொடூர செயல்களினால் மக்கள் பட்ட துன்பங்கள், இதற்கு தூது போன குழுக்கள், அமைச்சர்கள் இன்னும் பல தெரியப்பாடத செய்திகளை ஆசிரியர் ஷோபா சக்தி அவர்கள் துணிவுடன், அப்போதைய காலகட்டங்களில் எழுத்தாக ஓங்கி எழுதியது மிகவும் பாராட்டத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்களையும், அவர்களைப் பார்த்து உனது வாழ்க்கையில் நீ ஒருபோதும் உயர்ந்த தலைமைப் பீடத்திற்கு வரவே முடியாது என்ற ஆதிக்க சாதியினரின் பலகால வழக்க முறைகளைக் கடுமையாக எதிர்க்கும் வகையில், அதற்கு இன்றும் அது எப்படி புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடர்கிறது என்பதற்கு, மிகக் கூர்ந்து கவனித்த பார்வையை இக் கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இதற்குப் பல முன் உதாரணங்களை ஆவணத்துடன் பதிவு செய்கிறார் ஷோபா சக்தி .
திருத்தியமைக்கப்பட்ட யாழ் பொது நூலகம் என்ன காரணத்தினால் குறிக்கப்பட்ட நாளில் திறக்கப்படாமல் பிற்போடப்பட்டது. இதன் சூத்திரதாரிகள் யார்? இங்கேயும் சாதி என்ற பாம்பு படமெடுத்து நின்றதன் பின்னணி. அதற்கு விடுதலைப் புலிகள் சொன்ன காரணம், இது போன்ற பல திடுக்கிடும் செய்திகளை விரிவாகத் தருகிறார் ஆசிரியர்.
சாதியும் சதியும் என்ற தலைப்பின் கீழ், ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், ஒரு பிரபல்யமான பாடசாலை அதிபரானார். அதிலிருந்து அவருக்கு ஏற்பட் இடைஞ்சல்கள், பயமுறுத்தல்கள், மற்றும் அவரது சாதி, மத பேதமற்ற முன்னெடுப்புக்களை ஏற்கமுடியாத எதிர் மனிதர்கள் , இது போக இறுதியாக அவரது உயிரைக்கூட எடுத்துவிட்ட சமுதாயம், இவை அனைத்தையும் ஆதாரத்துடன் தருகிறார் ஆசிரியர். ஒதுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களது கல்வி, தொழில், வதிவிடம் இவற்றை வாசிக்கும் போது, இப்படியான கொடுமைகளைத் தாங்கி நின்ற, பனைமரம் போல் உறுதியான, தங்களது வாழ்க்கைப் பயணத்தை எப்படித்தான் முகம் கொடுத்தார்கள் என்று வேதனைப்பட வைக்கின்றது நண்பர்களே.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து நிலைமைகளையும் விசாரிக்கச் சென்ற பிலிப் ஆல்ஸ்டன் என்பவர் 2005 நவம்பர் 28 தொடங்கி டிசம்பர் 6 திகதி வரையிலான கள ஆய்வு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பல வேறுபட்ட சிக்கல்கள் பற்றிய விரிவான கட்டுரையை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளமை, முரன்பட்ட பல கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் உள்ளது. ஐ. நா சபை யாருடைய கைப்பொம்மையாக ஆட்டப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார் ஷோபா சக்தி .
தமிழ் மக்களிடம் சொல்லப்பட்ட அடிப்படைக் கருத்துக்கள், கொள்கைகள், நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற கொள்கை காலப்போக்கில் ஏகாதிபத்தியத்துடன் கைகுலுக்குமளவுக்குச் சென்று விட்டதை பல கோணங்களில் தந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகளின் பங்கு பற்றி பதிவு செய்கிறார் ஆசிரியர்.
குறிப்பாக சி. புஷ்பராஜா அவர்கள் எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலின் பிரதியை முன்வைத்துப் பல கோணங்களில், அதுவும் இலங்கை சுதந்திரம் (1948)அடைந்த காலகட்டத்திலிருந்து (2007)இக் காலகட்டம் வரையிலான அரசியல் நகர்வுகளை வரிசைப்படுத்த அவர் தவறவில்லை.
இலங்கையில் நடைபெற்ற அரசியல் கொலைகள் மற்றும் இயக்கங்களிடையே ஏற்பட்ட மோதல்கள், ஆட்கடத்தல்கள், இலங்கை அரசால் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பு, சிறைச்சாலைக் கொலைகள் இப்படியாகப் பலவற்றை வாசித்து உள்வாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த படைப்பு என்றே சொல்லலாம்.
1947ல் வெளிவந்த, ஜோன் ஜெனே என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட Les Bones (பணிப் பெண்கள்) நாடகத்தை பார்த்த எழுத்தாளர், தனது Euro Disneyland ல் வேலை செய்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.ஆரம்ப ஐரோப்பிய அகதி வாழ்க்கையில் இப்படியான சந்தர்ப்பம் சிலருக்கு அமைவதுண்டு, ஆனால் யாருமே அதனை வெளிக் கொண்டு வருவதில்லை.
இரண்டு வேலைக்காரிகளுக்கும் எஜமானிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் எனத் தோன்றுகின்றது. இருந்தும் இதனைப் படிக்கும் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட அடக்கு முறைகளைத் தட்டி எழுப்பியதற்குப் பல நூல்கள் ஆதாரமாக இருக்கின்றன. அதேபோல் இந்த நாடக நூலும் வேலைக்காரிகளுக்கே மிகப் பொருத்தமாக இருப்பதை ஷோபா சக்தி இங்கே கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.
இறுதியாக, இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற யுத்தத்தின் பல வகைப்பட்ட, அறிந்திராத, ஒளிக்கப்பட்ட, ஒருபக்கச் சார்பு வாதங்கள், இயக்கங்களின் கட்டமைப்புகள், எதிர் வினைகள், ஆதிக்க சாதியினரின் மேலாண்மை இது போன்ற சகல விதமான தகவல்களையும் அறிய அவசியம் வாசியுங்கள் நண்பர்களே…
நன்றிகள்.