பாமயன் அவர்கள் தொடர்ச்சியாக வேளாண் தொடர்பான ஆழ்ந்த தரவுகளுடன் கூடிய புத்தகங்களை எழுதிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த கட்டுரை தொகுப்பு மிகவும் காட்டமான கருத்துக்களை, எளிமையாக, தரவுகளுடன் எடுத்துறைகின்றது. வளர்ச்சி (growth) மேம்பாடு (development), நீடித்த மேம்பாடு (sustainable development) என்கிற வரிசையில் நம்முடைய வளங்களை பாதுகாப்பது வளர்ச்சி என்கிற வார்த்தைக்கும் சுருக்க முடியாத ஒரு கட்டாயமான முயற்சி என்று தொடங்குகிறது கட்டுரை தொகுப்பு. வளர்ச்சி விழுக்காட்டை வெறும் ஜிடிபி என்கிற பணக் குறியீடாக காட்டுகின்றனர். ஆனால் உழவரின் உழைப்பும், பொருள் பரிமாற்றமும் கணக்கில் வருவதில்லை. நம் உழவு குறைவான கலோரிகளை (உழைப்பை) உட் செலுத்தி, நவீன உழவின் மூலம் ஈட்டும் அதே உற்பத்தியை (சில நேரங்களில் அதிக உற்பதியை) உருவாக்குகிறது. ஆனால், தரவுகளை சேகரிப்பவர்கள் இந்த உண்மையை கவனிக்காமல் நமது, பிற்போக்கு தனமான உழவு முறை என்கின்றனர்- போன்ற மிக நுட்பமான கண்ணோட்டங்களை முதல் கட்டமாக அவருடைய கட்டுரைகள் விவரிக்கின்றன.

பின்பு, பொருளியல் பார்வையில் உழவை நோக்கிய குமரப்பா (இந்தியாவின் மூத்த Economist), நம் உழவின் திசைக்கு எந்த வகையில் பங்காற்றியுள்ளார் என்பது குறித்த கட்டுரை இந்த தொகுப்பின் மையக் கோடாக நோக்க வேண்டிய ஒன்று. வேளாண்மையில் வேதி உரங்களின் பயன்பாட்டை அன்றே எதிர்த்தவர் குமரப்பா. பரவல் மயப்படுத்தப்பட்ட குமரப்பா பாணியிலான வேளாண்மை தான் கியூபாவை காப்பாற்றியது. தற்போதுள்ள பொருளாதாரம், முதலீட்டை அதிகப் படுத்தி, உழைப்பாளர்களை குறைக்கும் பாணியிலானது. ஆனால், குமரப்பாவின் பார்வையில் உழைப்பாளர்களை அதிகப் படுத்தி, முதலீட்டை குறைக்கும் ஈட்டல் தான் சிறந்தது. உழவுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் குமரப்பா செய்த தொண்டு அளப் பெரியது. ஆனால் அவரை இந்தியா கொண்டாடவில்லை என்று பாமயன் அவர்கள் குமரபாவின் கட்டுரையை முடிக்கிறார்.

உழவர்கள் எவ்வாறு நிதி ஒதுக்கீட்டில் ஓரம் கட்டப் படுகிறார்கள்? பெரும் கம்பெனிகளுக்கு வரி சலுகை- ஆனால் உழவனுக்கு கொடுக்கப் படும் பேரிடர் கால இன்சூரன்ஸ் கூட பழமையான முறையிலேயே கடைபிடிக்க படுகிறது. ஸ்மார்ட் சிட்டிஸ் உருவாக்குவதில் காட்டும் முனைப்பை, வேளாண் மண்டலங்கள் உருவாக்குவதில் என் காட்டுவதில்லை? உண்டி கொடுத்து உயிர் கொடுக்கும் விவசாயிக்கு கொள்முதல் விலை, கடன் சுமை, உர விலை என்று எதுவும் தோதாக இல்லை.

நிலத்தின் மீதான அரசியல் உழவர்களை மிகவும் கொடுமை படுத்தி வருகிறது. நில அபகரிப்பு சட்டங்களுக்கு முன்பாக எங்கே நிலத்திற்கான போராட்டம் தொடங்கியது? என்பது பற்றிய கட்டுரை அவசியமான வாசிப்பாகும். ரேபரேலி, தஞ்சை, ஒடியா போன்ற இந்தியாவின் உழவு மையமான இடங்களில் நடத்தப் பட்ட போராட்டங்களை இக்கட்டுரை விவரிக்கிறது. விவசாயிகள் கடனில் பிறந்து, கடனில் வளர்ந்து கடனில் மடிகிறார்கள். தமிழகத்தில் 82.5% உழவர்கள் கடன் பட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி இது குறித்த எந்த அறிவும் அற்றவர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.அடுத்த கட்டுரை, விதையின் மீதான அரசியல் பற்றியது. பாரம்பரிய விதைகளை எதிர்க்கும் கம்பெனிகள் எவ்வாறு தங்களுடைய விதையை அதிக விலை கொடுத்து வாங்க உழவர்களை வற்புறுத்துகின்றனர் என்பது குறித்த கட்டுரை இது. கம்பெனிகளின் விதை ஒரு பெருமழையை கூட தாங்க முடியாமல் நட்டத்தில் விடுகிறது. அவற்றின் நீர் தேவையும், உரத் தேவையும் மாளாக கடனில் உழவனை தள்ளி விடுகிறது. நீரின் தேவை அதிகரிப்பதால் இயற்கையின் நீர் ஆதாரத்தை உறிஞ்சும் நிலைக்கும் நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்.

இதற்கு அடுத்த படியாக அறிவியலுக்கும், அறிவியல் தொழில்நுட்பங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் கட்டுரை என் மனதிற்கு மிக நெருக்கமானதாக மாறி விட்டது. பாமயன் விளக்கும் அறிவியல் வகைப்பாடுகள் இங்கு பல மேம்போக்கு அறிவியல் பார்வையாளர்களின் கண்ணில் பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அறிவியல் தொழில்நுட்பத்தின் பார்வையில் இயற்கைக்கும், நீடித்த மேம்பாட்டுக்கும் எதிரான திட்டங்களை நாம் தவிர்க்க வேண்டிய அவசியத்தை இந்த கட்டுரை உணர்த்துகிறது.

ஒரு சமூகம் வேளாண்மையை எப்படி தாங்குகிறது? நம் சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளை மீறி உழவு எப்படி சமூகத்தை தாங்குகிறது என்கிற அடுத்த கட்டுரை மிகவும் வசீகரமான விசாலமான பார்வை கொண்டுள்ளது. பசுமை புரட்சிக்கு அடுத்ததான தற்கால உழவு முறையை இந்த நாடு தூக்கிப் பிடித்து கொண்டாடுகிறது. ஆனால், இயற்கை முறையிலான உயிர்ம வேளாண்மைக்கு எந்த நிதி ஒதுக்கீடும், தேசிய மாநில அளவிலான அங்கீகாரமும், சான்றிதழும் என எந்த வகையான ஆதரவும் இல்லை. ஆதலால் உழவர்கள் இயற்கை முறைக்கு திரும்ப தயங்கும் நிதர்சன நிலையை அடுத்த கட்டுரை விளக்குகிறது.

இயற்கை வழி வேளாண்மையின் வெற்றி தரவுகளால் நிறுவப் படவில்லை என்று வருந்தும் நேரத்தில், ecologicial agriculture in இந்தியா என்கிற ஆய்வு புத்தகம் எவ்வாறு இயற்கை வேளாண்மையின் மூலம் எட்டப் படும் விளைச்சல், தற்போதுள்ள இயற்கைக்கு எதிரான விளைச்சலை காட்டிலும் அதிகமாக உள்ளது என்கிற நல்ல செய்தியை அறிவிக்கிற கட்டுரையாக அடுத்த கட்டுரை பாராட்டுகிறது.பருத்தி சாகுபடியில் பாரம்பரிய விதைகளுக்கு மாற்றாக, ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகான விதைகளும் அவற்றின் விளைச்சலும் பட்டினிக்கு வித்திட்ட கதை துயரம் கலந்து அடுத்து சொல்லப் படுகிறது. உழவர்களுக்கு கடன் அளிப்பதை காட்டிலும் மேலான ஒரு திட்டம் இங்கே இல்லை என்று குறிப்பிடும் இப்புத்தகம், உழவர்களின் தேவைகளை நிறைவு செய்ய ஆணையமும், உழவர் வருவாய் உறுதித் திட்டமும் வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

மண், நீர், வளி ஆகிய மூன்று வளங்களின் மேல் காட்டப் படும் அக்கறை, மரபின வளம் (genetic resources) குறித்த எந்த கவனமும் செலுத்தப் படாமல் உள்ளது. இவற்றை அழிக்கும் போது அதை கேட்க ஆளில்லாமல் நமது விதை வளங்கள் அழிந்து வருகின்றன. வெளிநாடுகளில் பெரு நிறுவனங்களின் மூலம் அரிய விதையை சேமித்தாலும், அதில் விளைச்சல் கொடுக்கக் கூடிய விதைகள் 28% மட்டுமே எனும் போது, நாம் இன்னும் சேமிக்கும் முயற்சியை கூட எடுக்காமல் இருப்பதன் வேதனையை பாமயன் தெரிவிக்கின்றார்.

பூச்சிக் கொல்லிகள் உண்மையில் பலன் அளிப்பதில்லை என்கிற தகவல் மக்களுக்கு கடத்தப் படுவதில்லை. அவற்றினால் பாதிக்க படுபவர்கள் அணுக முகாந்திரம் இல்லை. மாற்று வழிகளை தேட முயற்சியும் இல்லை. இது போன்ற குறைபாடுகளை போக்க வழி சொல்லுங்கள் என்று கேட்டு கட்டுரை தொகுப்பு முடிவு பெறுகிறது.

இந்தத் தொகுப்பில் வேளாண் சார்ந்த எந்த தலைப்பும் கை விடப் படவில்லை. ஆனால் புத்தகத்தின் பக்கங்கள் என்னவோ 96 தான். வேளாண் சார்ந்த அக்கறை உள்ளவர்கள் அனைவரும் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம். படிக்க வேண்டிய புத்தகம்!

– ராமசாமி விஸ்வநாதன்
TNSF திருவள்ளூர்

இப்புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள். தொடர்பு கொள்ள 9566148769.
விலை 70 ரூ.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *