இக்கற்களைப் பொறுக்கியதையும்
கருக்கலில் ஊர்ப்புற கல்திண்ணையில்
சித்தியோடு ஆடிய
கழச்சி கல் விளையாட்டையும்
கற்களில் படிந்திருந்த மண்வாசம்
அவளுக்கு நினைவுறுத்தியது
நதிதொலைத்த நெடுவாழ்வின்
நீண்ட பயணத்தில்
கால ஆழத்தில் அமிழ்ந்து போன
துயரங்களின் எச்சங்களை விழுங்க
எத்தனித்த சமயத்தில்
கைதவறி பெட்டியிலிருந்து சிதறி
கற்கள் மெள்ள உருண்டோட ஆரம்பிக்க
தாமிரபரணியின் குளிர்ந்த ஈரத்தை
தன் கால்களில்
அவள் உணரத் தொடங்கினாள்
அகல்
———
அவளுக்கான அகலை அவளிடமே
திருப்பிக் கொடுத்து விட்டேன்
எண்ணெய் வதப்பிலூறிய
மெத்தான திரிகளின் நுனிகளை திருக்கி
தீக்குச்சியைக் கொளுத்துகையில்
தன்னிலைமறந்த பதட்டம் தொற்றிக் கொள்ள
அச்செயலிலிருந்து தன்னிச்சையாக
தன்னை விடுவித்துக் கொள்கிறாள்
அக்கணத்தில் அவளறியாமல்
கண்களிலிருந்து சொட்டிய நீர்
அகலில் விழுந்து எண்ணெயோடு கலவாமல்
மிதந்து கொண்டிருக்கிறது
ஏற்றப்படாத சுடரென …
பிரிவெனும் கொடுந்தீ
——————————
நெடுநேர உரையாடலில்
மெளனம் விழுங்கியது போக
எஞ்சியிருந்த இடைவெளியில்
கொஞ்சம் வருத்தம் தெரிவித்திருக்கலாம்
விடைபெறுதலின் போதாவது

மைவிழியில் நீர் திரண்டிருக்கலாம்
அகண்ட கன்னத்து மச்சம் விரிய
புன்னகையொன்றை உதிர்த்துச்
சென்றிருக்கலாம்
திருமண நாளன்று பரிசளித்த
அழகிய ரோஸ் நிறத்திலான
அந்தக் கைக்குட்டையையாவது
ஞாபகமாய் விட்டுச் சென்றிருக்கலாம்
*************************
வேலாயுத முத்துக்குமார்