வேள்பாரி – பெருங்கனவு, பேரனுபவம் *** நிச்சயமாக இது விமர்சனம் அல்ல ***  – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் 

வேள்பாரி – பெருங்கனவு, பேரனுபவம் *** நிச்சயமாக இது விமர்சனம் அல்ல ***  – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் 

விடாப்பிடியாய் வேள்பாரியை வாசித்து முடித்தாயிற்று. சர்வ நிச்சயமாக வேள்பாரி எனக்குக் கொடுத்தது மிகச்சிறந்த வாசிப்பனுபவம். பெருங்கனவு ஒன்றின் வழியாய் வந்துவிழுந்த எழுத்துக்கள் கொடுத்த பேரனுபவம். நிச்சயமாக விரிவாக எழுத வேண்டிய ஒன்று. அதற்குமுன் சில விஷயங்கள்.
சுமார் 1500 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை இதற்குமுன் வாசித்திருக்கிறேனா? என்றால் அது நிச்சயமாக பொன்னியின் செல்வன்தான் அதனை ஐந்து நாட்களில் வாசித்து முடித்திருந்தேன். அதன்பின் அதே போன்றதொரு வாசிப்பு வேகத்துடன் முடித்த புத்தகம் நிச்சயமாக வேள்பாரியே. பொன்னியின் செல்வனை வாசித்தே ஆக வேண்டும் என்ற சமூக அழுத்தம் இருந்தது எனக்கு; எப்படி இதற்குமுன் ஒரு கூட்டம் மாய்ந்து மாய்ந்து GOT-யையும் இப்போது மணி ஹெய்ஸ்டையும் ப்ரோமோட் செய்கிறதோ அப்படி ஒரு அழுத்தம். ஆனால் வேள்பாரியை நான் வாசிப்பதற்கு அப்படி
                                                          சிந்தனைப்பூக்கள்: வீரயுக நாயகன்
எந்தவொரு காரணமும் இல்லை. வாசிக்க வேண்டும் என்ற பட்டியலிலும் அது இல்லை.
வேள்பாரி நிறைவு விழா நிகழ்வில் நண்பன் விவேக் எடுத்துக்கொண்ட புகைப்படம் மூலமே வேள்பாரி என்று ஒரு தொடர் வெளியானதும் அதன் நிறைவு விழாவிற்கு அவன் சென்றுள்ளான் என்பதுமே தெரியவந்தது. இது ஒரு காரணம் என்றால் அதனைக் கடந்த சில வாரங்களில் பலரும் வேள்பாரியைப் பொன்னியின் செல்வனை மிஞ்சிய மிகச்சிறந்த வரலாற்று நாவல் என்று புகழ்ந்து எழுதுவதைக் கடக்க நேரிட்டது. ஒரு கதை ஒப்பீட்டளவில் ஒன்றுகொன்று இணையான தளத்தில் நிகழாதபொழுது அதனை ஒப்பிடுவதே தவறு. ஒப்பீடு தவறு அல்ல.
எதனை எதனுடன் ஒப்பிடுகிறோம் என்ற அளவுகோல் இருக்கிறது. இங்கே அவர்களுக்கான அளவுகோல் இவ்விரண்டுமே சரித்திரப் புதினங்கள் என்றளவில் நின்று விடுகிறது. அதைத்தான் தவறு என்கிறேன். அதேசமயம் அந்த ஒப்பீடுதான் இந்த நாவல் குறித்தான வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டியது. வாசிக்க வாசிக்க எத்தனை அபத்தமான ஒப்பீட்டை தமிழ் வாசகப்பரப்பு முன் வைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. அப்படி எதில் என்னதான் வேள்பாரியில் இருக்கிறது என்ற ஆர்வம் எழுந்தாலும், என் பட்டியலில் சேர்த்திருக்கவில்லை.
இந்நிலையில் கடந்தவாரத்தில் தற்செயலாக அருண் என்னிடம் கேட்டார் “சீனு வேள்பாரி, படிச்சிட்டீங்களா? படிக்கிறீங்களா?” ஒருவேளை அவரிடம் இருப்பது மின்னூல் என்றால் வேண்டாம் என்று சொல்ல இருந்தேன், நல்லவேளையாக அவரிடம் இருந்தது புத்தகமே. கிண்டிலில் வாசித்து வாசித்து கண்கள் ஓய்ந்துவிட்டன. இன்னும் என்னிடம் மீதம் இருப்பது பத்துக்கும் குறைவான அச்சுப் புத்தகங்களே. அவற்றையும் முடித்துவிட்டேன் என்றால் கிண்டில் ஒன்றே கதி. அதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. அதற்காகவே அச்சுப்புத்தகங்கள் வாசிக்கும் நாட்களை தள்ளிப்போட்டு வருகிறேன்.
இங்கேதான் வேள்பாரியின் புத்தக வடிவமைப்பைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஏற்கனவே பத்திரிகையில் வெளிவந்த ஒன்று, வெற்றிகரமாக நூறு வாரங்களைக் கடந்த ஒன்று என்றபோதிலும், மிக உயர்ந்த தரத்தில் கண்ணுக்குக் குளுமையான ஓவியங்களுடன் பளபளவென கைகளில் புத்தகம் வந்து இறங்கியபோது அப்படியே ஒத்திக்கொள்ளலாம் போல் இருந்தது. தண்ணியில்லாக் காட்டில் இருப்பவன் குத்தாலத்தின் அருமையை உணரும் கணம். அதற்காகவே அவருக்கொரு தனி நன்றி. வாங்கி வந்த அன்றே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இன்றைக்கு முடித்தாயிற்று.
வேள்பாரி இப்போது எனக்குச் சொல்வது சில உண்மைகளை.
ஒரு கதையை சுவாரசியமாக எழுதினால் எத்தனைப் பக்கங்களாக அவை புரண்டாலும் அலுப்பில்லாமல் வாசிக்கலாம். நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் வாசித்தபோதிலும், காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இரண்டு மணியோடு நிறுத்திக்கொள்வேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் அத்தனை சுவாரசியமாக எழுதியுள்ளார்.
தொடராக வெளியான கதை என்றபோதிலும் ஒரு அத்தியாத்தில் இருந்து மற்றுமொரு அத்தியாயத்திற்குத் தாவிச்செல்லும்போது கதையோட்டத்திற்காகப் பெரிதும் மெனக்கெடவில்லை, இயல்பாக அடுத்தடுத்துப் பறக்கிறது.
ஒருவேளை ஒருவார இடைவெளியில் படித்தவர்களுக்கு வாசிப்புச் சிக்கல் இருந்திருக்குமா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும். பல தருணங்களில் கடைசி அத்தியாயத்தை வாசித்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. இறுதி கட்டத்தில் என்ன நடக்கும்? பாரி ஜெயிப்பானா? என்றெல்லாம் பெரும்படபடப்பாய் இருந்தது. எப்போதுமே எனக்கு முன்னுரையை முதலில் வாசிக்கும் பழக்கம் இருந்ததில்லை. இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரையில் முன்னுரையே ஸ்பாய்லர்தான். நல்லவேளையாக அதனை கடைசியில் வாசித்தேன்.
கதையின் உண்மைத்தன்மையை விடுங்கள், அந்தத் தளத்திற்குள் செல்ல எனக்குப் போதுமான ஆய்வாராய்ச்சி இல்லை. இதனை ஒரு புனைவுக்கதை அல்லது சிறிது புனைவு கலந்த உண்மைக்கதை அல்லது சிறிது உண்மை கலந்த புனைவுக் கதை என்று ஏதோ ஒன்றாக எடுத்துக்கொண்டால் நிச்சயமாக வேள்பாரி எனக்குக் கொடுத்தது பேரனுபவமே. மிக நுட்பமாக கதையை வளர்த்துள்ளார். கணக்கில்லாமல் வந்து செல்லும் கதாப்பாத்திரங்களைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார். நுட்பம் என்பதை விளக்குவதற்கு பல காட்சிகளைக் கூறமுடியும் அதனை விமர்சனத்தில் எழுதுகிறேன். நம்புங்கள் நிச்சயமாக இது விமர்சனம் இல்லை. அதே நேரம் நுட்பக் குறைபாடுகளும் இல்லாமல் இல்லை. நான் அறிந்து ஒரேயொரு இடத்தில் தவறி இருந்தார். அதை மட்டும் கூறுகிறேன்.
                                                    mcube: வேள்பாரி – 103
பாரி ஆட்சி புரியும் பறம்பு நிலத்தவர்கள் உப்பு என்ற ஒருபொருளைத் தவிர வேறு எந்த பொருளையும் பண்டமாற்றம் செய்ய மாட்டார்கள் என்று முதலில் ஒரு குறிப்பு வருகிறது. இதுவே இறுதிப் போர்க்களக் காட்சியில் கபிலருக்குக் கரும்பு கலந்த பழச்சாறு கொடுக்கும் உரையாடலில், பறம்பில் கரும்பு விளையவில்லை என்றபோதிலும் பறம்புக்குடியினர் அதனை மான் மாமிசத்திற்குப் பண்டமாற்றாகப் பெறுகின்றனர் என்று குறிப்பிடுவார். இந்த ஒரேயொரு காட்சியைத் தவிர வேறு எதுவும் என் கண்ணில் சிக்கவில்லை.
சுவாரசியம் பரபரப்பு என்பதையும் கடந்து காட்சிகள் இயல்பாகக் கண்களில் இருந்ததாலோ அல்லது காட்சிகளுக்கு இணையான ஓவியங்கள் கொடுத்த தத்ரூபங்களினாலோ இந்த மொத்த நாவலும் மிகக்கச்சிதமாக மனதில் ஒட்டிக்கொண்டது. முதல் வாசிப்பிலேயே ஒரு புத்தகம் இந்தளவிற்கு என்னுள் பதிந்ததில்லை என்பதை நானறிவேன். விமர்சனம் எழுத வேண்டும் என்றால் நிச்சயமாக எனக்கு மறுவாசிப்பு தேவை. வேள்பாரி அப்படி இருக்கப்போவதில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
                                                                 வேள்பாரி
சாருவின் புத்தக வெளியீட்டில் வாங்கியதோடும் ஓரிரு முறை புதிய எக்ஸைலைப் புரட்டியதொடும் சரி அதன் பக்க எண்ணிக்கை என்னை மலைப்படையச் செய்துகொண்டே இருந்தது. அதன் காரணமாகவே அதனை ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தேன். வேள்பாரி உள்ளுக்குள் புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது என் கண்முன் இருக்கும் புத்தகம் புதிய எக்ஸைலே. அதற்குமுன் வாசுமுருகவேல் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார் அதையும் முடிக்க வேண்டும்.
ஆக சர்வ நிச்சயமாக வேள்பாரி ஒரு பெருங்கனவு ஏற்படுத்தியப் பேரனுபவமாகவே என்னுள் இறங்கி இருக்கிறது என்பதே உண்மை.
Srinivasan Balakrishnan முகநூல் பதிவு
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *