முனைவர் அ. இந்துமதி எழுதிய "நாடக ‘வெளி’ முதல் இதழும் – நாடகவெளியும்" கட்டுரை | வெளி - நாடக இதழ் | வெளி ரங்கராஜன் | www.bookday.in

நாடக ‘வெளி’ முதல் இதழும் – நாடகவெளியும் :- முனைவர் அ. இந்துமதி

நாடக ‘வெளி’ முதல் இதழும் – நாடகவெளியும்

– முனைவர் அ. இந்துமதி

வெளியின் ஆசிரியர்

ரங்கராஜன் 18.3.1950-ல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். அன்னை ஜெயலக்ஷ்மி, தந்தை ஜெயராமன். ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்தார். திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் முதுகலை கணித பட்டம் பெற்று சென்னையில் பேங் ஆஃப் பரோடாவில் வங்கிப்பணியில் சேர்ந்தார். மனைவி தேன்மொழி. மகன் அரவிந்தன். ரங்கராஜன் தற்போது சென்னையில் வசிக்கிறார்.

ரங்கராஜன் எழுத்தாளர், இதழாளர், நாடக விமர்சகர், நாடக இயக்குனர். தமிழில் நவீன நாடகங்கள் உருவாகிவந்தபோது அவற்றிற்காக தனி இதழ் நடத்தியவர் ரங்கராஜன். தமிழின் முதல் நாடகத்திற்கான இதழ் அவர் நடத்திய ‘வெளி’ என்னும் இதழின் பெயராலேயே ‘வெளி ரங்கராஜன்’ என்று அடையாளப்படுத்தப்படுபவர்.

வெளி முதல் இதழின் ஆசிரியர் பக்கம்

வெளி நாடக இதழின் முன்னுரையையே மிகவும் காத்திரமாகவும், சுருக்கமும் சுவையும் குன்றாது அமைத்திருக்கிறார். “நாடகம் என்பது ஒரு அற்புதமான விஷயமாகத் தோன்றுகிறது. மோதல்களும், சிக்கல்களுமான மனித வாழ்க்கை துவங்கிய போதே நாடகமும் துவங்கி விட்டதாகத் தோன்றுகிறது. காலம் காலமாக மனிதனின் படைப்புணர்வுடன் மிகவும் நெருங்கிய விஷயமாக நாடகம் இருந்திருக்கிறது. நம்முடைய சிற்பங்களும், ஓவியங்களும், நடனங்களும் நாடக வடிவங்களாகத்தான் தோன்றுகின்றன. காலத்தின் வளர்ச்சிகளையும் நாடகம் பதிவு செய்யத் தவறவில்லை. இந்த உலகம் ஒரு நாடக மேடை என்று ஷேக்ஸ்பியர் சொன்னது அந்த வார்த்தைகளை விடவும் அதிகப் பரிமாணங்கள் கொண்டதாகத் தோன்றுகிறது. என்ற வார்த்தையில் கூட அதிகப் பரிமாணங்களை அடக்கி கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

ந. முத்துசாமி பேட்டி

ந. முத்துசாமி 1936 ம் ஆண்டு பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை கிராமம். புஞ்சை அவருடைய இலக்கியத்துக்கும், நாடகங்களுக்கும் பெரும் களனாக இருந்து வருகிறது. அவர் 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 8 நாடகங்களையும் எழுதி இருக்கிறார். அவருடைய நாடகங்கள்: காலம் காலமாக, அப்பாவும் பிள்ளையும், நாற்காலிக்கார், சுவரொட்டிகள், கட்டியங்காரன், உந்திச்சுழி, நற்றுணையப்பன், இங்கிலாந்து முதலியவை. கூத்துப்பட்டறை என்கிற அமைப்பின் மூலம் நம்முடைய மரபுக் கலைகளுக்கும், நவீன நாடகங்களுக்குமிடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறார். சென்னை சிற்றரங்கத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கூத்துப்பட்றை நாடகங்களை நிகழ்த்தி வருகிறது. என்ற ந. முத்துசாமி என்னும் தமிழக கலைஞனை அடையாளம் காட்டுகிறது முதல் வெளி இதழ்.

ந. முத்துசாமியை இந்த பேட்டி கண்டவர் வெளி ரங்கராஜன் அவர்களே. மிகச் சிறப்பான பகுதியாக இது அமைந்திருப்பதை விளக்க ஒரு வினாவும் அதற்கான விடையும் மட்டும் காணலாம்.

கேள்வி: இந்தியாவின் மற்ற பகுதிகளில் நாடகங்கள் எப்படி இருக்கின்றன?

பதில்: சங்கீத நாடக அக்காடமியின் மண்டல நாடக விழாக்களுக்குப் பிறகு மற்ற மாநில நாடகங்களைப் பற்றி நல்ல exposure கிடைத்திருக்கிறது. கேரளத்தில் நாராயண பணிக்கர், கர்நாடகத்தில் கராந்த், பிரசன்னா, மணிபுரியில் ரதன் தய்யாம் டில்லியில் ஹபீப் தன்வீர், பம்பாயில் சத்யதேவ்துபே போன்றவர்கள் இது போன்ற தொடர்ந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ரதன் தய்யாமும், ஹபீப் தன்வீரும் நம்முடைய traditional கலை, வெளிப்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்.  கூத்துப்பட்டறை நாடகங்களும் இந்தியாவின் மற்ற பகுதி நாடகங்களுக்கு குறைந்தவை அல்ல. இவை இன்னும் நவீன தளத்தில் இயங்குகினறன. ஆனால் அகில இந்திய நாடக விழாக்களில் நமக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. அதற்கு பிரச்சாரம் தேவைப்படுகிறது. என்கிறார் ந. முத்துசாமி

 சப்தர்ஹஸ்மி கட்டுரை தமிழாக்கம் – ராமசந்திர வைத்தியநாத்

அடுத்ததாக வீதி நாடகத்தின் மகத்தான மக்கள் கலைஞன் சப்தர் ஹஸ்மியின் கட்டுரையை தமிழாக்கம் செய்த நூலின் வழி சப்தரின் கருத்தை அறியச் செய்கிறது வெளி. “நமது சகாபத்தின் கலை வடிவம் வீதி நாடகம். மற்ற கலை வடிவங்களோடு பொறுத்திப் பார்க்கையில், இது சமகால மக்களிடம் நேரிடையாகச் சென்று தடைகளைத் தகர்த்து நாடகமாடிக்கும் பார்வையாளனுக்கும் இடையில் உள்ள பிளவை உடைத்தெறியும் மகத்தான மக்கள் இயக்கம் ஆகும்” என்கிறார் சப்தர்.

மேலும் அவர் “நாடகத்தின் மூலம் நாங்கள் சொல்கிற விஷயம் மிகத் தெளிவானது. திட்டவட்டமானது. கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் எல்லா இடங்களிலும் தோற்றுப் போனார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஆதரவு தருகிற விதத்தில் அங்கே அடிமட்டத்தில் எந்தவித இயக்கமும் கிடையாது. இளைஞர் அமைப்புகளோ விவசாய சங்கமோ எதுவுமே கிடையாது என்றால் எப்படியிருக்கும்? என்பது இயக்கத்தின் தேவையையும் கலைவழி அதனை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதை அறிய முடிகிறது.

ஜோகுமாரசாமி – கி.அ. சச்சிதானந்தம்

அடுத்தும் நூல் அறிமுகமே “தற்காலத்திய நாடகத்தில் மிக முக்கியமான குணமாற்றம் நிகழ்ந்திருப்பது அறியப்பட வேண்டியது. நாடக நிகழ்வு கலைஞர் பலரின் கூட்டு முயற்சியாக இருந்தபோதிலும் தற்காலத்தில் இயக்குநரின் கலாபடைப்பாகவே கருதப்படுகிறது. இன்றைய நாடகம் இயக்குநரின் கலாவாற்றலைச்சார்ந்திருப்பதே. எழுத்து வடிவில் நாடகத்தை படித்துவிட்டு அதை மதிப்பீடு செய்ய முடியாது. அதற்கு உடலும் உயிரும் கொடுப்பவன் இயக்குனனே ஆவான். அவனின் கலாகற்பனையின் வார்ப்படத்தில்தான் நாடகத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் நிர்மாணிக்கப்படுகிறார்கள். நவீன நாடகத்தின் உயிர்மையம் இயக்குநன்.” என்கிறார் கி.அ. சச்சிதானந்தன்.  மேலும் அவர் “இத்துடன் இந்நாடகம் பல கேள்விகளை படிப்பவனின்/பார்ப்பவனின் மனதில் எழச் செய்கிறது. எது எது எவற்றின் குறியீடு? இது வெறும் பிரச்சார நாடகமா? அல்லது காலந்தோறும் வரும் மனிதப் பண்புகளின் மதிப்பீடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறதா? சுரண்டும் வர்க்கம், அதன் போக்குகளைச் சாடுகிறதா? ஆதலால் சமூகப் பிரக்ஞை நாடகமா?  கௌடனைத் தவிர, மற்றுமுள்ள பாத்திரங்கள் ஒவவொரும் ஒரே சமயத்தில் முகங்கள் பலவற்றைக் கொண்டு இருக்கிறார்கள்். அல்லது மாற்றிக் கொண்டார்களா? இதை எப்படி புரிந்து, கலாபூர்வமாக எதிர்ப்படுவது? அதில்தான் நாடகமே இருக்கிறது. எப்படி ரசிப்பது என்று கூறமாட்டேன். ஏனதனில் ரசனை தன் இறுதி கட்டத்தில் அறிவின் தாக்கத்தைத் தவிர்த்து விடுவது.

தமிழ் நாடகம் ‘ஜோகுமாரசாமி’ யால் பாதிக்கப்படுவது நல்லத்திற்கே அறிகுறியாகும். ” என்று நிறைவு செய்கிறார்.

நாடக வடிவம்: கலை அனுபவமும் மக்கள் பங்கேற்பும்: எஸ் ஆல்பர்ட்

நாடக வடிவமும் கலை அனுபவமும் மக்கள் பங்கேற்பும் குறித்த விரிவான கட்டுரை சிறார்களின் விளையாட்டுடன் ஒப்பிட்டு நாடகத்தை விளக்கியுள்ள பாங்கு மிகவும் சிறப்பு. “விளையாட்டைப் போலத்தான் நாடகமும்,சொல்லப்போனால் நாடகமும் ஒரு விளையாட்டுதான். நாடகம் அழகியல் அடிப்படையில் செம்மைப் படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு. வாழ்விலிருந்து விளையாட்டு பெறப்பட்டது போல் நாடகமும் பெறப்படுகிறது. விளையாட்டு வாழ்க்கைக்கு சிறுவர்களை தயாரிப்பது போல் நாடகமும் மனிதர்களை வாழ்க்கைக்குத் தயாரிக்க வேண்டும். சிறுவர்களின் விளையாட்டு யதேச்சையாக நிகழ்வது. அதற்கு பயிற்சியோ ஒத்திகையோ கிடையாது. பெரியவர்களின் விளையாட்டு நாடகமும் பயிற்சியும் ஒத்திகையும் இன்றி திருப்திகரமாக நடக்க முடியாது.”  என்கிறது.

“வாழ்வியல் சிந்தனையில் மார்க்ஸை தவிர்க்க முடியாததுபோல் உலக நாடகம் எங்கிலும் பிரெக்ட் நாடகச் சிந்தனைகளின் பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியிருக்கிறது.” என்று பிரெக்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்

இந்நிலையில் நாடகமானது “மக்களுடன் தொடர்பு கொள்ள, மக்கள் குரலை வெளிப்படுத்த, விழிப்புணர்வைத் தட்டியெழுப்ப, ஜனநாயகத்தையும், மனித விடுதலைக்கான செயல்பாடுகளையும் பராமரிக்க, மாற்றுத்தொடர்பு சாதனங்களைக் கண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் விடுதலைச் செயல்வாதிகளுக்கு நேர்ந்திருக்கிறது.” என்கிறார். அதாவது நாடகச் செயற்பாட்டாளர்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துகிறார்.

தமிழ் நாடகக்கலை மேடை மொழியாக்கம் – சே.இராமானுஜம்

நவீன நாடக முன்னோடிப் பேராசிரியர் சே.இராமானுசம். இவர் கேரளத்திலும் தமிழகத்திலும் நவீன நாடகத்தில் தவிர்க்க படமுடியாத நாடக ஆளுமையாளர். தமிழ் நவீன நாடக இயக்கத்தின் தந்தை எனப் புகழப்படுகிறார்.  இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி என்னும் சிற்றூரில் 1936 ம் ஆண்டில் பிறந்தார். எஸ்.பி. சீனிவாசன், ஜி.சங்கரப்பிள்ளை ஆகியோர் இவரது நாடக ஆர்வத்தைக் கண்டு ஊக்கம் தந்தனர். இதனால் சே.இராமானுசம் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் 1963 ம் ஆண்டில் ‘குழந்தைகள் நாடகம்’ என்ற பிரிவில் இப்ராகிம் அல்ஹாசியின் மாணவராய்ப் பயிற்சிப் பெற்று வந்தார்.  இவரோ மேடை மொழியாக்கம் பற்றிய சிறப்பான கட்டுரையை கொடுத்திருக்கிறார். “மேடை மொழியின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தமிழகம் இது வரை புரிந்துகொள்ளவில்லை என்பது ஓரளவு உண்மைதான். நாடகத்தின் உயிர்க்கூறுகளாகிய நாடகப் பேச்சு, நடிப்பு, காட்சி, அமைப்பு, இசை என்னும் இவைகளைப் பற்றிய நுட்ப அறிவினை நம்மவர்கள் இன்னமும் பெறவில்லை என்பது வருந்துதற்குரியதாகவே உள்ளது.

நாடகப் பேச்சு என்பது ஆசிரியர் ஒருவரின் ஆளுமையையோ, அவரின் தனியான நடைப்போக்கையோ, கதாபாத்திரங்களின் பேச்சு மொழிகளில் தோற்றமளிக்கச் செய்வதில்லை. நாடகத்தில் பேச்சு என்பது கதையோட்டம், கட்டமைப்பு, நாடக வளர்ச்சிக்கு ஆசிரியர் பின்பற்றும் அணுகுமுறை என்னும் இவைகளின் உயிர்துடிப்பினை உணர்த்தப் பயன்படும் பேச்சாகிய செயல் நிலையாகும்.

நடிப்பு என்பது ஒரு நடிகன் தனது தனித்தன்மையை நாடகத்தின் மேடைத்தனம் முழுவதையும் சமதனமான தரையிலிருந்து, செங்குத்தான வெளிமுழுவதையும் இணைத்து ஊடாடும் தளமாகவும் நாடகத்தின் உட்கருத்தினை தூலமாக்கும் சூழலாகவும் அமைதல் வேண்டும்.

நாடக இசையிலிருந்து பிறப்பது நாடகப் பாங்கான கருக்கள். இவை படிமங்களாக வளர்ச்சியடைந்து வாக்கு, சுருதி என்னும் இவைகளின் மூலமாக நாடகமாக மலர்கின்றன. இந்த நாடகம் காட்சிகளாக இயக்குநரிடம் புலனாகி நடிகர், சிற்பப் பின்னணி, ஒளி, முருகியல் கோலங்களுடன் காட்சிக் காவியமாகிறது. இவ்வாறு அமைவதன் பேச்சுக்களாகவோ, இசை தழுவியதாகவோ அமைந்த கூத்தாகும்.  என்று நாடகத்தின் கூறுகளை விளக்குகிறார்.

நடுக்கடலில்- ஸ்லாவோமிர் மிரோஜெக் (பொலிஷ் மொழி நாடகம் – மொழிபெயர்ப்பு)

மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்க கூடியதாகவும் ஓரங்க நாடகமாகவும் அமைந்துள்ளது இந்த நடுக்கடலில். படிக்கும் பொழுதே நாடகத்தை நிகழ்த்தி பார்க்க மனம் ஏங்குகிறது. அதிலிருந்து ஒரு உரையாடலின் சிறுபகுதி இப்படி அமைகிறது.“’சுதந்திரம்’ என்பதற்கு ஒரு அர்த்தமும் கிடையாது. ஒரு வேளை இருந்தால் உண்மையான சுநந்திரத்திற்குத்தான் ஏதாவது அர்க்கம் இருக்கும். ஏன்? எனெனில் அது உண்மையான சுதந்திரம், அதனால் அதுதான் சிறந்த சுதந்திரம், அப்படியானால் உண்மையான சுதந்திரத்தை நாம் எங்கு தேடுவது? தர்க்கரீதியாக யோசிப்போம். சாதாரண சுதந்திரமும் உண்மையான சுதந்திரமும் இரண்டும் ஒன்றல்ல என்றால் உண்மையான சுதந்திரம் எங்கே இருக்கும்? இதற்கான விடை மிக எளிமையானது. எங்கே சாதாரண சுதந்திரம் இல்லையோ அங்கேதான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது” என்கிறது.

கோணிக்காரன் – நாடக விமர்சனம் அம்ஷன் குமார்

கோணிக்காரன் நாடகத்தின் விமர்சனம் மிகவும் நேரடியாக குறையை சுட்டும் வகையில் அமைந்திருப்பதை காண முடிகிறது. ”நாற்காலிக்காரரில் அரசியல் மாயமாலங்களைப்பற்றிய விசேஷத் தெளிவு தரப்பட்டிருந்தது. சாதாரண செய்திப் பத்திரிகையில் கிடைக்கப் பெறாத தெளிவு அது. கோணிக்காரனில் அது இல்லை. குற்றங்களும் மோசடிகளும் நாம் நினைப்பதைப்போன்று எளிமையாக இருப்பதில்லை. அவற்றை சாதாரணமாக சித்தரிப்பதன் மூலம் நமது எதிரிகளை நாம் சரியாகக் கண்டு கொள்ள மறுப்பவர்களாகிறோம். சமீபத்தில் நடந்த போபர்ஸ் ஊழல் – அதனை வெறும் ஊழல் என்று வர்ணிப்பது எவ்வளவு பேதமை! அந்த ஊழலைப் புரித்து கொள்ளவே அசாத்திய அறிவு வேண்டுமே! பாப்ரி மஸ்ஜித்- ராமஜன்ம பூமி விவகாரம் வெறுமென இரு மதங்களின் பூசல் மட்டுந்தானா? சரித்திரம், புராணம், அரசியல் என்று எத்தனை இழைகளால் அது உண்மை சொரூபம் தெரியாமல் பின்னப்பட்டுள்ளது? சமூக அரசியல் பிரச்னைகளை விவாதிக்கும் அல்லது அவற்றின் பாசாங்குகளைக் களையும் கலைஞன் விசேஷப் புரிதலைத் தர வேண்டும். ஊழல், ஏமாற்று என்று பெயர்களை மட்டும் உதிர்த்தால் போதாது.

நாடகத்தில் சூத்ரதாரி நம்மைப்பார்த்து இவ்வாறு சொல்கிறான்.

“ஆலாப் பறக்கற இவங்களும்
உங்களைப் போலத்தான்
சுரண்டலும் சோம்பலும்
சுகவாசமுமாய் வாழ்கிற
இவனும் உங்க ஆளேதான்
உங்க முன்னாலொரு கண்ணாடி போல?”

மன்னிக்கவும், கூத்துப் பட்டறையினரே! எங்களைக் கண்ணாடி போன்று கோணிக்காரன்’ பிரதிபலிக்கவில்லை. என்று முடிக்கிறார் அம்ஷன் குமார்.

நாடக வெளி முதல் இதழின் வழி நாடகத்தின் வெளி பரவலாய் வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருப்பதை இக்கட்டுரை வழி காண முடிகிறது.

📚 எழுதியவர் : 

✍🏻 – முனைவர் அ. இந்துமதி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
அக்சிலியம் கல்லூரி (தன்னாட்சி)
வேலூர் -6

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. Ramachandra vaidhyanath

    ஒரு தகவல் மட்டுமே,
    சப்தர்ஹஸ்மி கட்டுரை தமிழாக்கம் – ராமசந்திர வைத்தியநாத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    தமிழாக்கம் செய்யப்பட்டு சவுத் விஷனால் வெளியிடப்பட்ட அவரது புத்தகத்திற்கான விமரிசனம் அது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *