“லிங்கவிரல்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
‘சில கவிதைகள் அர்த்தங்களை வெளிப்படுத்தும்; அர்த்தம் சப்தத்தைத் தவிர்க்கும்… சில கவிதைகள் கவிஞனின் அனுபவங்களை வெளிப்படுத்தும். சில கவிதைகள் தேடலை வெளிப்படுத்தும். புதுக்கவிதை தன்னைத் தன்னுள் தேடுகிறது.’ – தமிழ்நாடன். (புதுக்கவிதைக் கட்டமைப்பு நூலில்)
வேல் கண்ணனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தமிழ்நாடனின் மேற்சொன்ன எல்லாவற்றையும் செய்கிறது. ஆனாலும் இத்தொகுப்பில் பெரும்பாலானவை நித்தியத்துக்கும் அநித்தியத்துக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருப்பவை. ஓர் கீழைத் தேய மனதின் ஆத்ம விசாரமாகவும் இக்கவிதைகளை ஒருவர் அர்த்தம் கொள்ள சாத்தியம் உண்டு. அதே கீழைத் தேய மனதின் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கும் மனதின் வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதை அவரே தனது கவிதையிலேயே குறிப்பிடுகிறார்.
‘…நூல் ஏணிகள் அறுபட்டு
மிதக்கும் பாறைகள் நிரம்பிய
என் அந்தரத் தோட்டம்
பூமிக்கு வெளியே
சிதறியபடியே நிகழ்கிறது’
கவிதையைக் கடலாய் உருவகிக்கும் அவர் கடலை ‘எல்லாவாகவும்’ உருவகிக்கிறார். தனது புற வாழ்வனுபவங்களின் வழி எதிலும் ஒரு நிறைவின்மையைக் காண்கிறார். அதே நிறைவின்மையிலான பள்ளத்துக்கு நிரப்பியாகக் கவிதையைப் பயன்படுத்துகிறார்.
‘என்னுயிர்த் தோழிக்கு இனிப்புப் பிடிக்கும்
எனக்குக் காரம் பிடிக்கும்
மகள் உவர்ப்பைச் சப்புக்கொட்டி ருசிக்கிறாள்
நண்பர் புளிச்சா கீரையை விரும்பி உண்கிறார்
சிலர் குடித்த காஃபியின் அடி நாக்கு கசப்பு
‘அலாதி சுவை’ என்பார்கள்
எல்லாருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் நெரூதா,
உங்களின் ரொட்டிகளைப் போல..’
இந்த முதல் கவிதையிலேயே முன்னெச்சரிக்கையாக ஓர் அறைகூவலைப் போலத் தொகுப்பில் அவர் முனைந்திருக்கும் கவிதைச் செயல் பற்றிய அறிவிப்பைத் தந்து விடுகிறார். ஆனால், எல்லாருக்குமான ரொட்டிகளை அவர் தயார் செய்திருக்கிறாரா என்பது கேள்விக்குரியதுதான்.
தொகுப்பு முழுக்க இரவு என்பது கவிஞரால் கடக்க முடியாத அல்லது கடக்க விரும்பாத – நீடிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதை வாசகரால் உணர முடியும். ‘இரவை நிரப்புதல் என்பது/கொஞ்சம் கொஞ்சமாய்/நானே என்னைத் தின்னுதல்…’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். இரவின் உரிப்பொருளும் நிமித்தமும் ஆன உறக்கத்தை ‘உறக்கமென்பது நினைவுகளின் விழிப்பு’ எனப் பரிதவிக்கிறார்.
‘இரவை சுருட்டாக்கித் தலையில்
பற்ற வைத்தேன்
பகல் புகையானது’
எனும்போது இரவிலும் பகல் அவருக்குள் எரிந்து கொண்டேயிருப்பதை உணரமுடிகிறது.
இரவைப் போலவே கடலும் அவருக்குள் ஓயாமல் அலையடித்துக் கொண்டேயிருக்கிறது. நசிந்து அவலமாய் கிடக்கும் அறையிலிருந்து வெளியேற மனம் விரும்பினாலும் ‘ஒருக்களித்த கதவுக்கு அப்பால் ஆர்ப்பரிக்கும் கடலோசையே’ அவரை எத்தனை நசிவுக்குள்ளும் இருத்துகிறது. லௌகீக வெக்கையைக் கடக்கக் கடலே அவருக்கு உதவுகிறது. கடல் ஒரு விடுதலையாகவும் ஓர் ஆசுவாசமாகவும் மாறிப்போகிறது.
‘…மிதக்கும் முழுநிலவு
அலையாடும் கப்பல்
கடல் பார்ப்பது எவ்வளவு ஆனந்தம் நண்ப..
இங்கிருந்து தெரியும் கடலசைக்கும்
கப்பலுக்குள்
வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும்…’
என்று சக கவி நண்பனின் தோளாடு கை சேர்த்து புளகாங்கிதமடைகிறார்.
இத்தொகுப்பில் பல கவிதைகள் கவிதையாய் தொடங்கி றெக்கை கொண்டு பறக்க முனைந்து சட்டென்று தத்துவமாகத் தரையிறங்கி விடுகிறது.
‘எப்போதோ ஓடிய நதியின் குளுமை
என் கன்னத்தில் நான் அழுத்திக் கொண்டிருக்கும்
கூழாங்கல்லில் தங்கியிருக்கிறது
இருத்தல்
அதனின் பொருட்டே நீள்கிறது
தேவை’
இந்தப் போக்கு வாசிப்பில் ஒரு வித சலிப்புத்தன்மையைக் கொண்டுவந்து விடுகிறது. ஒட்டு மொத்தத் தொகுப்பிலுமே இந்தத் தத்துவ விசாரமானது கவித்துவத்தை சற்றே மாற்றுக் குறையச் செய்திருக்கிறது எனலாம்.
ஒரு கவிதை என்பது கவிஞனின் அனுபவம்தான். மறுக்கவியலாது. ஆனால் ஒரு கவிதையின் முழுமை அல்லது கவிதைச் செயல்பாடானது முழுமையடைவது என்பது அக்கவிதை வாசகரின் வாசிப்பில் அர்த்தம் கொள்ளும்போதுதான் என்பது என்னுடைய கருத்து. அவ்வாறு நோக்குங்கால், தொகுப்பின் சில கவிதைகள் வெற்று சுயகேவல்களாகவும், தன்னிரக்கப்பாடல்களாகவும் எனக்குத் தொனிக்கிறது.

‘புறக்கணிப்பின் சொற்கள்
முன்னிரவு கடந்தும் சொட்டுச் சொட்டாய்
எதிராலிக்கிறது
கனவுக்குள் நுழையும்
அடர்வுடன் ஊளையிடும் குரல்கள் இலகுவாகின்றன
சிறகுதிர்வின் சப்தங்கள்
வெட்டப்பட்ட நாளங்களில் வழியும் குருதி உறையவில்லை
இழப்பொன்றுமில்லை
என்னை என் பக்கம் சாய்த்திருக்கிறாய்’
அதுவும் கவிதைகளின் ஒரு வகைமை என்ற வகையில் ஏற்பதில் நமக்கு உடன்பாடுதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை மீறும்போது தொகுப்பின் அடையாளமாக அவையே மாறிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது. ஒரு வேளை அதுவே இத்தொகுப்பின் பாடுபொருளாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. காரணம், இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் சில – கசப்பின் தனிமையின் அவநம்பிக்கையின் நெடி சூழலெங்கும் வீசிய பெருந்தொற்றுக் காலத்தில் (கொரோனா) – எழுதியவை என்று கவிஞரே முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
மேலே சொன்ன சட்டகத்துக்குள் அடங்காத கவிதைகளும் தொகுப்பில் உள்ளன.
‘ரெண்டு நாளிலேயே தாலியறுத்த அத்தை புழக்கடையில்
செத்துக் கிடந்தாள்
அவள் சொன்ன கதைகள்
அத்தனை அழகானவை
அவள் கனவில் அழகிய பாம்புகள்
புழக்கடை வந்திருக்குமோ?’
தாலியறுத்த அத்தையின் கனவின் அழகிய பாம்புகள் கவிதை, குட்டிநிலா, அவளுக்கு ரோஜா பிடிக்கும், பதங்கமாதல், காலந்தவறியமைக்குக் கதை சொல்லும் கவிதை, கருப்பு வெள்ளை புகைப்படம், வளரும் புத்தர், பிரிந்த காதலியை மறக்க விழையும் கவிதை என இது போன்ற கவிதைகள் கவிஞரின் பன்மயக் கவிபுனைவு ஆற்றலைக் காட்டுகின்றன.
‘வருவதாகச் சொன்ன நேரத்திலிருந்து
ஐந்து நிமிடம் தவறியிருந்தேன்.
நேரம் தவறாமை குறித்து, தேவதைக் கதை சொன்னாய்
மேலும், தேவதையாக உருப்பெரும் உபாயம்
நேரம் தவறாமையில் இருப்பதாக விளித்தாய்
இன்று
நீ தவறிய சில மணி நேரங்களுக்கு
ராஜா கதை கேட்கக் காத்திருக்கிறேன்’
இக்கவிதைகளே தொகுப்பை கழிவிரக்க, தத்துவ விசார நெருக்கடியில் மூழ்கடித்து விடாமல் (அது தப்பில்லை என்ற போதிலும்) நெரூதாவின் ரொட்டிகளாய் வாசிப்பவரின் பசி தீர்க்கின்றன.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “லிங்கவிரல்” கவிதைத் தொகுப்பு |
| ஆசிரியர்: | கவிஞர் வேல்கண்ணன் |
| வெளியீடு: | யாவரும் பப்ளிஷர்ஸ் |
| விலை: | ₹.110 |
| அறிமுகம் எழுதியவர்: | அன்புச்செல்வன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
