வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்
ஆசிரியர் : ந.கோவிந்தராஜன்
வெளியீடு : க்ரியா
விலை : ரூ . 617
நூலைப் பெற : thamizhbook.com
சம்பாஷணை நூல்கள்
அண்மையில் வெளிவந்திருக்கும் ந.கோவிந்தராஜனின் “வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்” என்ற இந்த நூல், நாம் யோசித்திராத தரவுகளை கண்டெடுத்து புதிய திறப்புகளுக்கு வழிகாட்டுகிறது.
உள்ளூர் பற்றிய காலனிய பதிவுகள் என்று யோசிக்கும்போது மிஷனரிகளும் அதிகாரிகளும் எழுதிய வரலாறு,
மொழி பெயர்ப்புகளில், அகராதிகள், கடிதங்கள, அதிகார தொடர்புக்கான ஆவணங்கள் ஆகியவற்றையே நாம் இதுவரையிலும் சந்தித்து வருகிறோம். எழுதியவர்களைப் போலவே எழுதப்பட்ட விசயங்கள் எவை என்பதையும் சார்ந்தே எந்த ஒன்றிற்கும் ‘அங்கீகாரம் ‘ கிடைத்து வந்திருக்கின்றன. இத்தகைய அங்கீகாரங்களுக்கு வெளியே இருந்த பிரதிகளை இந்நூல் முதன்முறையாக கவனப்படுத்தியிருக்கிறது.
அதாவது இலக்கணம் – இலக்கிய நூல்களைத் தாண்டி தமிழ் கற்பதற்காக ஐரோப்பியர்களுக்காக ஐரோப்பியர்களே எழுதிய நூல்களும் வந்திருக்கின்றன. உள்ளூரை காலனியப்படுத்துதல் என்பதில் இந்நூல்களுக்கு முக்கிய பங்கு இருந்திருக்கின்றன. இந்நூல் அவற்றை “சம்பாஷணை நூல்கள்”என்று குறிப்பிட்டு விரிவான ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டுள்ளது.
ஒரு ஐரோப்பியர் தன் வீட்டிலோ – அலுவலகத்திலோ பணியமர்த்திக் கொள்ளும் பணியாளர்களோடு பேச வேண்டியது எப்படி? என்பதற்காக இந்த நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்நூல்கள் அமைந்துள்ளன.
ஐரோப்பியர்கள் எழுதிய இலக்கண – இலக்கியங்கள் சொல்லாத உள்ளூர் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை – அதிகாரத் தொடர்பை – அவற்றின் தாக்கத்தை, வரையறையை இந்த நூல்கள் காட்டியிருக்கின்றன. பேச்சுத் தமிழை பயன்படுத்துவது குறித்து மிஷனரிகளிடையேயும் கூட விவாதங்கள் இருந்து வந்த நிலையில் பேச்சுத் தமிழுக்கான இடத்தினை பணியாளர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த சம்பாஷணை நூல்களே தந்திருக்கின்றன. பணியாளர்களின் உழைப்பை எதிர்நோக்கி பேசுவதற்கான கையேடுகளாக அவை இருந்தன.
அடிநிலை பணியாளர்கள் யாராக இருந்தனர்? அவர்களுக்கு எத்தகைய பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன? அதில் சாதியின் பங்கு என்ன? என்பவற்றை இவற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நூலில் பல விசயங்கள் இருந்தாலும் அவற்றில் இரண்டு விசயங்கள் முக்கியமானவை.
ஒன்று ஐரோப்பியர்களின் சமையல்காரர்களாய் தலித்துகள் இருந்தமை. அதுவரையிலும் இந்திய அதிகார வர்க்கத்தினர் கொள்ளாத நம்பிக்கையை, தலித்துகள் சமைத்த உணவின் மீது ஐரோப்பியர்கள் கொண்டார்கள் என்ற ‘புதுமை’யை இந்நூல் விவரிக்கும் விதம் நுட்பமானது. சமையற்காரர் தமிழ் என்ற ஒன்றே உருவானது என்கிறது இந்நூல்.
இரண்டு துரைச்சானிகளின் பெண் பணியாளர்களாய் இருந்த ஆயாக்கள் பற்றியது. ஆயாக்கள் கதைச் சொல்லிகளாய் இருந்ததை ஒட்டி நடந்த மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய ஆயாக்கள் தான் காலனிய நாட்டார் உலகத்தை தொடங்கி வைத்திருக்க முடியும் என்றும் இந்நூல் கருதுகிறது.மொழி ஆசிரியர்கள் குறித்த நீண்ட அத்தியாயம் பல சான்றுகளை நம்முன் விரிக்கிறது.
இச்சான்றுகள் மற்றும் விவாதங்கள் வழியாக பின் காலனியம் பற்றிய கருத்தொன்றை மறுப்பதோடு நூல் முற்று பெறுகிறது.ஐரோப்பியர்கள் வரும் வரை இந்திய அதிகார வர்க்கத்தினரால் கண்டுகொள்ளப்படாதிருத்த/ அழிக்கப்பட்டிருந்த அடிநிலை மக்களின் சுதேசியத்தை காலனியம் மீட்டெடுத்தது என்பது தான் இந்த மறுப்பின் சாரமாகும்.இவை விரிவாக விவாதிக்க வேண்டிய விசயமாகும்.ஆனால் இவ்விடத்தில் பண்பாட்டு ரீதியாக உள்ளூர்மயமான பௌத்தத்தை விளக்கினாலும்,அரசியல்ரீதியாக ஆங்கிலேயர்களை ஆதரித்த அயோத்திதாசரின் நினைவு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
ந.கோவிந்தராஜனின் மூன்றாவது நூல் இது மற்று இரண்டு நூல்களைப் போலவே எழுத்தில் வராதவற்றை மட்டுமல்ல எழுத்தாக கருதப்படாததை – ஆவணமாக பார்க்கப்படாததை இந்நூலிலும் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக நூல்களிலுள்ள ஓவியங்கள் மற்றும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றின் மீது அவர் அமைக்கும் வாசிப்பு குறிப்பிடத்தக்கது. இது விவாதிக்க வேண்டிய நூல்.இந்நிலையில் வாசிக்க வேண்டிய நூல் என்பதற்கான தொடக்கக் குறிப்பு இது.
எழுதியவர் :
ஸ்டாலின் ராஜாங்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.