எழுத்தாளர் பெ.மகேந்திரன் "வெள்ளாமை" நாவல் Vellamai Novel

கரிசல் மண்ணின் கறுப்பு நிறத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று முன்னுரையில் அதற்கான காரணம் சொல்லும் ஆசிரியர் புதினத்தின் முதல் பக்கத்தில் ஆரம்பித்து அதன் கடைசிப்  பக்கம் வரை கரிசல் மண்ணை, அதன் இயல்பை,  அந்த மண்ணோடு பின்னிப் பிணைந்த மனிதர்களின் வாழ்வை, மண்ணுக்கும் சம்சாரிக்குமான நேசப்பிணைப்பை  நூல் முழுக்க சொல்லிச் செல்கிறார். வாசித்து முடித்ததும் கரிசல் மண்ணின் வாசனையை நுகர முடிகிறது. முடிவில் அதன் ஈரம் நம் கண்களிலும் அதன் பாரம் நம் நெஞ்சிலும் ஏறி விடுகிறது.

சம்சாரிக்கென்று தனிப்பட்ட வாசம் உண்டு. அது எப்படி இருக்கும் தெரியுமா? அது மண்ணில் இருந்து வருவதா? எருவின் வாசனையா? சாணத்தின் மணமா? மாட்டு மூத்திரமா? மருந்தா? உளுந்து செடியில் ஊறுகின்ற பூச்சியா? மண்வெட்டி, கடப்பாறையில் உள்ள துருவா? நாட்டுச் சோள பயிரில் வருகின்ற பால் வாசமா? சம்சாரியின் வேட்டியில் வழிந்த கம்பங்கஞ்சியா? கேப்பைக் கூழா? இல்லை விவசாயியின் வேர்வையாஇதெல்லாம் மொத்தமாக கலந்த கலவைதான் சம்சாரி வாசம்.

பத்து மணிக்கு அலுவலகத்திற்குப் போய் நாற்காலியை ஆக்கிரமித்து மாலை ஐந்து  மணிக்கு கோப்புகளோடு சேர்த்து அலுவலக நினைப்பையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வீடு வரும் பணியா சம்சாரியினுடையது? கண் விழித்திருக்கும் போதும் காரியமாற்றும் போதும் கண் துஞ்சும் போதும், கனவிலும் காட்சி தந்து, ஏன் அவனது உயிர் மூச்சாகி நிற்பது அந்த கரிசல் நிலம் தானே

அவ்வப்போது வானம் கருணை காட்டி நீர் தந்தால் போதும். தன் மடி நிறைய விளைச்சலை அள்ளித் தரும் கரிசல் மண்ணின் தாராள குணத்திற்கு ஈடு எது? தன் ஜீவனை மண்ணின் மீது வைத்து வாழும் இந்த புதினத்தின் நாயகன் பெரியவர் போல பல சம்சாரி நாயகன்கள் 70, 80களில் நம் கிராமங்களில் ரத்தமும் சதையுமாக உயிர்ப்பும் உடலும் ஆக, ஈர மனதும் மண் மீது நேசமும் கொண்டவர்களாக இருந்தனர் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே மனம் பரவசத்தில் ஆழ்கிறது.

அரும்பாடு பட்டு அதிகாலைப் பனியில் ஒரு மணி நேரம் இடுப்பு நோகக் குனிந்து போடப்பட்ட அழகிய மார்கழிக் கோலத்தை, ஒரு நொடியில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி சிதைத்துக் கலைப்பது எத்தனை இரக்கமற்ற செயல். தன் மடிநிறைய பச்சைப் பயிர்களை ஏந்தி அதில் பருத்தி, மிளகாய், கம்பு, சோளம், விதவிதமாய் காய்த்திருக்க, கண்குளிர பார்த்திருந்த கரிசல் காட்டுக்காரியின் மேனி முழுவதும்  சிமெண்ட் துகள்களின் தூசியும், தீப்பெட்டி மருந்தின் நெடியும் தீண்டித் தீண்டி அவள் அழகு குலைந்து அழிக்கப்பட்ட கோலமாக காட்சியளிக்கிறாள். அதைப் பார்க்கும் பெரியவரின் மனம் கலங்குகிறது. 

இந்த நூலில் ஆசிரியர், சம்சாரியின் வாழ்வியலை தத்ரூபமாக சித்தரிக்கிறார். சம்சாரியின் வாழ்வு மாடுகளோடும் காடுகளோடும் தான். அவர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. எப்போதும் வேலைசெய்துகொண்டே இருப்பது தான் அவர்களின் வேலை. 

‘’வீடுகளில் கைக்குழந்தை தவிர்த்து, ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அலைந்தார்கள்’’ என்ற வரிகளே அதற்கு சாட்சி.  

மாடுகளை அவர்கள் வெறும் பால் கறக்கும், உழவடிக்கும் இயந்திரங்களாகவா நினைத்தார்கள்? ‘மாடுகளுக்கு பிந்தி தான் மனுஷன். குழந்தைகளோடு குழந்தையாக தான் அவையும் வளரும். அவைகள் சரியாக சாப்பிடாத போது சம்சாரிக்கும் சாப்பாடு இறங்காது. அதற்கு ஒரு நோவு என்றால் மடியில் படுக்க வைத்தே மூங்கில் குடுக்கை மூலம் உணவையும் மருந்தையோ ஊற்றி தேற்றுவார்கள். ஒரு மாடு உயிர் விட்டால் ஊரெல்லாம் துக்கம் விசாரிக்கும். 

கரிசல் தேசத்து சம்சாரிகளுக்கு மாடுகளோடு உள்ள உறவு கொஞ்சம் உசத்தி தான். மாட்டின் காலில் கானை வந்திருந்தால் அதை குறிப்பால் சம்சாரிக்கு உணர்த்தி காலைக் காட்டும். தண்ணீரில் உப்பு கரைத்து எடுத்து வந்து கழுவி அதன் வலியை தீர்க்கும் வித்தை தெரிந்தவன் சம்சாரி. அதிலும் சுப்பனாசாரி போன்ற மாட்டுக்கு கை வைத்தியம் பார்க்கக்கூடிய, மாடுகளின் பால் தனிப்பட்ட வாஞ்சை கொண்ட மனிதர்கள் இருந்த காலம் அது என்கிறார் ஆசிரியர். கூப்பிடாமலேயே மாடு கண்ணுப் போடும் நாள் அன்று வருகை தந்து, சுளுவாய் பிரசவம் பார்த்து, ஏதும் நோய் நொடி என்றால் பார்த்து பார்த்து அதைக் கவனிப்பதும் வெறும் டீ தண்ணியை மட்டும் கூலியாக பெற்றுக் கொண்டு காரியமாற்றும் அற்புத மனிதர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்தப் புதினம். 

இந்த ‘வெள்ளாமை’ புதினத்தில் ஒரே ஒரு எதிர்மறை சிந்தனை கொண்ட ஆளைக் கூட பார்க்க முடியவில்லை என்பது மிகச் சிறப்பு எந்த ஒரு இடத்திலும் எதிர்மறைச் சொற்களோ, வஞ்சம், பொறாமை, ஆணவம், ஆத்திரம் மிக்க சொற்களைக் கையாளும் மனிதர்களோ இன்றி படைக்கப்பட்டிருக்கும். ஆசிரியரின் கைவண்ணத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. என்ன ஒரு நேர்மறை சிந்தனை உள்ள மனது அவருக்கு? வில்லன் இல்லாத ஒரே ஒரு நாவல் இந்த வெள்ளாமை தான். கரிசல் மண்ணின் தாராள குணம் போலவே அந்த மண்ணின் மைந்தர்களும் கருணை உள்ளமும் பெருந்தன்மையும் மிக்கவர்கள். 

சுவாரஸ்யமான கதாபாத்திரங்களுக்கு பஞ்சமே இல்லை. பூனைக் குட்டி வாத்தியார், குருஷேவ் பிட்டர், ரங்கசாமி ஆசாரி, மாரிமுத்து ஆசாரி போன்ற துணை கதாபாத்திரங்களும் கதைக்கு வலு சேர்க்கின்றனர். பெரியவர் தன் பேரன் ராஜாராமனுக்கு சொல்லும் கதைகளில் வரும் விட்ல பட்டர், தோராவழக்கனும் கூட நம் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். 

இந்த மனித வாழ்வில் மாற்றங்கள் என்றும் மாறாதது. ஒன்றை அழித்துவிட்டு தான் புதிதாக மற்றொன்று வரும். ஒன்றின் மறைவில் தான் புதியது மலரும். ஆனால் மோட்டார் வந்து கமலை இறைப்பு காணாமல் போவதும், சைக்கிள் வந்து மாட்டு வண்டி வழக்கொழிவதும், தீப்பெட்டி ஆபீஸ் முளைத்து தானியங்களை சேர்த்து வைக்கும் படப்பு காணாமல் போவதும், விவசாயத்துக்கு கொள்ளி வைக்க தீப்பெட்டி ஆபீஸ் மின்னும் போது அங்கே கொழுந்துவிட்டு எரிவது சம்சாரியின் நெஞ்சமல்லவா? சோறு பிசைந்து உண்ணும் சாதாரணனின் கைகளில் கூட இனி கந்தக வாசம் வீசுமோ? முன்பு எரிமலைக் குழம்பிலிருந்து உருவான கரிசல் காட்டு மண், மனிதனின் பேராசை என்னும் அக்னியில் வெந்து மீண்டும் மடிந்து கொண்டிருக்கிறது. தடுப்பதற்குத்தான் யாருக்கும் மனசு வரவில்லை என்பது சுடும் நிஜம். 

இந்தப் புதினம் எத்தனை எத்தனை விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம் என்று சுட்டும்போது எத்தனை அதிர்ஷ்டம் கெட்டவர்கள் இந்த யுகத்து மனிதர்கள் நாம் என்று புரிகிறது. பாரம்பரிய உணவு முறையை விட்டொழித்து, பூச்சிக் கொல்லியில் மலர்ந்த காய்களையும் பழங்களையும் உண்டு நோய்களின் கூடாரமாக மாறிவிட்ட மனிதர்களாகி விட்டோம். நமக்கு நாமே தேடிக் கொண்ட அழிவு தானே இது

சம்சாரி வீட்டு சாப்பாடு இப்படியா இருந்தது? கம்பங் கஞ்சியும் சீனிக்கிழங்கும், சோள தோசையும், புள்ள காரமும், அதலக்காய் புளிக்குழம்பும், நல்லெண்ணெயும் வெள்ளத்தூளும், கலந்த கம்பங்களியும் அவனது உடலை உரம் ஏற்றி எப்போதும் உழைக்க வைத்ததே. 

தீபாவளி பொங்கலுக்கு மட்டும் இட்லி, தோசைக்கு மாவு ஆட்டும் வைபவமாகட்டும், கம்புக்குத்தி பக்குவப்படுத்தி களி தயாராகும் விதமும், மொச்சைப் பயிர் மசாலா அவிக்கும் விதமும், உளுந்து வடைக்கு சீனி தொட்டு உண்ணும் பெரியவரின் ரசனையும் சேர்ந்து வாசிப்பவனின் நாசிக்கும் மனதுக்கும் சேர்த்து ஒரு விருந்து படைக்கிறது. 

முகம் பார்த்துப் பேசிக் கொள்ளாமல் ஆனால் கருத்தொருமித்த காதல் வாழ்வு வாழும் கோப்பம்மாள், பெரியவரின் அழகிய வாழ்வியல் இன்றைய இளசுகளுக்கு ஒரு பெரிய படிப்பினை. அழகும், சாமர்த்தியமும் நிறைந்த சீதாதேவி இந்தக் கால உழைக்கும் மகளிரின் பிரதிநிதியாகவும், வெள்ளாமையில் நாட்டம் இன்றி தொழில் செய்து முன்னேற நினைக்கும் கோபால் இந்தக் கால வாலிபர்களின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்கள்.

‘’இந்த மண்ணுக்கு நம்மை ஏமாத்துற குணம் இல்லையே? தாமாக மண்ணை விட்டு ஒதுங்கி நின்று வெள்ளாமை இல்லை. விளைச்சல் இல்லை என்று புலம்புதே இந்த ஜனம். இதை யார் கிட்ட சொல்லி புலம்புறது? அடுத்த தலைமுறை இதை புரிஞ்சிக்குமா? பேரன் கிட்ட சொல்லலாமா? புரிஞ்சுக்குவானா? எத்தனை விதை போட்டு பருத்தி, மிளகாய், கம்பு, சோளம் விளைய வச்சோம்? பேரன் மனசுல ஒரு விதை போட்டா முளைக்காமல் போய்விடும்? என்ற எண்ண ஓட்டம் பெரியவரின் மனதில் மட்டும் தானா எழுகிறது நம் மண்ணின் கடைசி விவசாயிகள் அத்தனை பேரின் எண்ணத்தில் எழுந்த எழும் கேள்விகள் தானே?

மிகப்பெரும் நம்பிக்கையை தன் இறுதி மூச்சு நிற்கும் முன் இந்த மண்ணுக்கு வழங்கிச் செல்கிறார் பெரியவர். வெள்ளாமை என்பது தொழிலோ வியாபாரமோ கிடையாது. அது நம் வாழ்க்கை. பூமித் தாய்க்கு தாராள மனசு. வாரிக் கொடுக்கும் தேவதை அது. ஆனா அதுக்கு கைகள் கிடையாது. நடந்து போய் தேவையான ஆள் பார்த்துக் கொடுக்க கால் கிடையாது. அதற்கு கைகளாகவும் கால்களாகவும் இருக்கிறதெல்லாம் இந்த விவசாயி தான். அவனைத்தான் பூமித்தாய் தன் மடியில் இருக்கிறதை  வாரிக் கொடுக்க பயன்படுத்திக்கிறது.’’ இந்த அரிய பாடத்தைத் தான் தன் பேரனுக்கு சொல்வதன் வாயிலாக இந்த மண்ணின் மைந்தர்களுக்கு சொல்லிச் செல்கிறார். 

ஒரு கூடை விதை மிளகாய் வைத்து விட்டு கண் மூடும் பெரியவரின் எண்ணம் ஈடேறுமா? நம்பிக்கையை விதைத்திருக்கிறார் ஆசிரியர். அவை நாற்றுக்களாகவும் பயிராகும் மாறுமா?

‘’மண்ணின் வாசத்தையே மாற்றி விடும் மாற்றங்களை வெறும் பார்வையாளனாக கடந்து  செல்ல முடியவில்லை. எழுதித்தான் ஆத்தணும்’’ என்று தன் முன்னுரையான மண்ணுரையில் பதிவு செய்யும் ஆசிரியர், தன் மன ஆதங்கத்தை  வாசிக்கும் வாசகனின் நெஞ்சில் இறக்கி வைக்கிறார். அங்கே ஆதங்கமும் ஏக்கமும் பெருத்துப் போய், மனசு கனத்துப் போய் தான் இந்த புத்தகத்தை கீழே வைக்க முடியும் அவனால்.

நூலின் தகவல்கள்: 

நூல்: வெள்ளாமை
ஆசிரியர்: பெ மகேந்திரன்
விலை: ₹.250.00
பதிப்பகம்: ராமையா பதிப்பகம்

அறிமுகம் எழுதியவர்: 

விஜி ரவி – ஈரோட்டில் வசித்து வரும் இவர் இதுவரை ஐம்பதுக்கும்
மேற்பட்ட சிறுகதைகள், எண்பது ஒரு பக்கக் கதைகள்,
நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை, பதினாறு புத்தக
விமர்சனங்கள் எழுதி பல முன்னணி வார இதழ்கள், இணைய
இதழ்களில் வெளிவந்துள்ளன. பல சிறுகதைப் போட்டிகளில்
பங்கு பெற்று, பரிசுகள் பெற்றுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

2 thoughts on “எழுத்தாளர் பெ.மகேந்திரன் எழுதிய “வெள்ளாமை” நூல் அறிமுகம்”
  1. கரிசல் காட்டில் பிறக்காத விமர்சகர் இந்த புத்தகத்திற்கு எழுதிய விமர்சனம் மிக அருமை.நன்றி அம்மா. இந்த புத்தகத்தை படிக்கும் போது பல இடங்களில் கண்ணீர் கண்ணை கட்டியது,மனம் கணத்தது. முடித்தவடன் என் மனம் ஆழ்கடலின் அமையதி போல் இருந்த்து. அந்த பெரியவர் போல நானும்…..கரிசல்காட்டுகாரன் கொடப்பாறை, சிப்பிப்பாறை கிராம்ம் கோவில்பட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *