தொண்டைக் குழி தாகம்
என் உயிரின் அணுவைப் பிளக்க
நீர் கொடுயென நீளும்
என் வலிச்சொற்களுக்கு
மேலும் வலியிடுகிறது
நீ கொண்டு வந்து
நீட்டிய மலம் கலந்த
ஒரு குவளை நீர் ,
நீங்கள் ஏற்றிய
மூவர்ணக் கொடி
வீசும் காற்றுக்கு
ஏற்றவாறு அசைந்து
அசைந்து பறக்க
நான் கொடிக் கம்பத்தின்
கீழ் நின்றவாறு வணக்கம்
செலுத்த கையை மடக்கி
கண்களை மேலே நீட்டி
மனதை ஒருநிலைப்படுத்தி
என் இரு கண்களின்
பார்வையைப் பறக்கும்
கொடியின் வண்ணங்கள்
மீது நீட்டுகிறேன்
மஞ்சள் நிற
மலத்தின் நிறமாகவே ததும்புகின்றன
தேசியக் கொடியும்
நீ குடிக்கக் கொடுத்த
தண்ணீரின் நிறமும் ,
உயரமான ஒரு
கொடி கம்பத்தை நட்டு
அதில் தேசியக் கொடியை
ஏற்றி வைத்து
இந்தா இனிப்பு மிட்டாயென
ஒன்றை நீட்டி
சாப்பிடக் கொடுத்தார்கள்
நானும் வாயில்
போட்டு சப்பிக்கொண்டே தான்
தன் வீடு வந்து கொண்டிருந்தேன்
என் வாய் முழுவதும்
கசப்பாகவே தான்
கொப்பளிக்கிறது
வழியில் யாரோ
ஒருவன் கொடுத்த
குடிநீரில் யாரோ ஒருவன்
கழித்த மலத்தின் சாயம் ,
குடியரசு
தினத்தன்று
தன் கையை தூரம் நீட்டி
நம் சேரியின்
முதல் தெருவில்
பறப்பது
தேசியக்கொடியா இல்லை
தண்ணீர்த் தொட்டியின் நிழலா யென
மகள் கேட்க
சட்டென்று அப்பா
சொன்னார்
ஆண்டபரம்பறையினர்
பேண்ட பீ கலந்த
தண்ணீர்த் தொட்டி யென்று ,
குடியரசு தினமும்
தேசிய கொடியேற்றிய நிமிடமும்
மலம் நாற்றம்
தொண்டையில் நெளிய
ஊர் தெருவில் ஏற்றப் பட்டிருக்கும் தேசியகொடி கம்பத்தின்
கீழிருந்து தூரம் பார்க்கிறேன்
என் சேரியின்
முதல் தெருவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது
பீ கலந்த தண்ணீரை
குடித்துக் கொண்டிருக்கும்
ஓர் நீர்தேக்கத் தொட்டி,
நீர் ததும்பத் ததும்ப
தொட்டியின் தாகம் தீர்ந்தது
இன்னும் தீரவில்லை
அத்தொட்டியில்
மலம் கலந்தவனின்
சாதித் திமிர்,
கவிஞர்: ச. சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்