டிசம்பர் : 25 வெண்மணி தியாகிகள் நினைவு தின சிறப்பு கவிதை
கவிதை : வெண்மணியில் வெந்தவர்கள்
வெந்து கொண்டிருந்த
விறகுகளுக்கு மேலே
சட்டியில் கேப்பகூழைக்
கிண்டிக் கொண்டு இருந்தாள் வீரம்மாள்
பண்ணையார் தோட்டத்துல
இன்னைக்கு முக்கியமான வேலை
வெரசா வாடி என்று குரல் கொடுத்தாள்
அஞ்சலை
என்ன முக்கியமான வேலக்கா
பக்கத்து வீட்டுக் கருப்பாயிடம்
கேட்டாள் வீரம்மாள்
அன்னைக்குச் சிவப்பு கொடிய
தூக்கிட்டுப் பத்து பேர்
வந்தாய்ங்கள்ள
அவுங்க இன்னைக்கு வாராங்களா
நமக்குக் கூலிய அதிகமா
வாங்கி தரதப் பத்திப் பேச போராங்களா
அதா நம்ப எல்லாத்தையும்
சீக்கிரமா வர சொன்னாங்க
கருத்த நிலப்பரப்பில்
சிவப்புக் கொடி அணிவகுத்துச்
சென்று கொண்டிருந்தன
களைகளைப் பறித்துக் கொண்டு
கைகளைக் கட்டிக்கொண்டு
இருந்தவர்கள்
உரிமைக்காக
சிவப்பு கொடிகளை ஏந்தி
நின்று கொண்டு இருந்தனர்
பார்த்த பண்ணையாரின் கண்கள்
சிவக்க
உழைப்பாளிகள் இரத்தத்தை
உறிஞ்சிய வயிறு துடிக்க
பேச்சு வார்த்தை முடிவு பெறாமல்
தள்ளிப் போனது
கூகை ஒன்று இடைவிடாது
கத்திகொண்டே இருந்தது
உழைத்து உழைத்து
காப்புக் காய்த்த
கைகளும் கால்களும்
அசதியில் கிடந்தன
கூகையின் குரலுக்கு
சுப்பன் மட்டும்
செவி கொடுத்தான்
ஆபத்தின் அழிவை அறிந்தவன்
அவசர அவசரமாக மற்றவர்களை
எழுப்ப முயன்றான்
அதற்குள்
நாட்டு துப்பாக்கியின் குண்டுகள்
வெடிக்க ஆரம்பித்தன
பயத்தில் அலறியடித்துச்
சிதறியோடிய
சிறுசுகளும் பெருசுகளும்
ராமையாவின்
குடிசைக்குள் புகுந்தனர்
பண்ணையாரும்
அடியாட்களும்
குடிசைக்கு தீவைத்துக் கொக்கரித்தனர்
தீயுண்ணும் குடிசையிலிருந்து
தங்கையனைத் தூக்கி எறிந்தாள்
வீரம்மாள்
வெளியில் விழுந்த தங்கையனை
மீண்டும் தூக்கி போட்டான்
அடிமை அடியாள்
பண்ணையாரின் வார்த்தைக்கு
அடங்கி
கூகையின் ஓலமும்
குழந்தைகளின் கதறலும்
அன்று வெண்மணி முழுக்க
கேட்டுக்கொண்டே இருந்தது
தஞ்சை பக்கம் சென்றால்
இன்னும் கேட்டு கொண்டு தான்
இருக்கிறது

எழுதியவர் :
பாலு ரஞ்சித்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

