கனவுலக வாசியின் நினைவுகளிலிருந்து இப்புத்தகத்தை நாம் வாசிக்கத் தொடங்கலாம். உணர்ச்சிமிக்க உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமலும், வெளிப்படுத்த இயலாமலும் கனவுகளை தனதாக்கிக் கொண்டவனின் கதையிது..
கனவு காணாதவர் யார்? யாரேனும் உண்டோ இங்கே? எவருமில்லை. கனவுகளே நம்மை இயக்குகின்றன. அவையே நம்மை ஆட்டுவிக்கின்றன. நனவில் நடைபெறாததை (நடந்திருந்தாலும்) கனவில் கற்பனை செய்து கொள்வதே இன்புறச் செய்வதாகும். நனவையும் நடத்திக்காட்டும். எனது அருமை வாசகர்களே! உங்களை கனவு காணச் சொல்வேன் நான் எல்லைகளற்று, பரந்து, விரிந்து..
காடு மலை கடந்து, கடல்களை எல்லாம் கடந்து, பாலைவன மணல் தரையில் நடந்து, களைத்து ஓய்ந்து, பறம்பு திரும்பி வேள்பாரி உடன் விருந்துண்டு முடித்து விட்டு, கீழே இறங்கினால் எதிர்பாராத சம்பவங்கள்…. மரத்தின் கிளையில் ஆழ்வார்க்கடியான் ஒளிந்திருக்கிறான். பார்த்தவுடன் ‘பக்’கென்றானது. அவனை பின்தொடர்ந்தே செல்கையில் நந்தினியையும், பெரிய பழுவேட்டரையாரையும் காண கிடைத்துவிட்டது பாதாள சாலையில்… ஒரு கணம் திகைத்து விட்டது நான்தான் வந்தியத்தேவனோ?! இல்லை நான் தான் கபிலரோ? திடுக்கிட்டு திரும்புகிறேன் இயக்கச் சூழ்நிலைக்கு….
இப்படியான ‘லாஜிக்’ இல்லா கனவுகளை நாம் கண்டிருப்போம், இனிமேலும் காண்போம்.. ஆகவே வாசகர்களே கனவு காணுங்கள், நனவாக்குங்கள்..
சரி நாம் கதைக்கு வருவோம்! இப்படியான கனவுலகை வாழ்ந்துகொண்டு இன்புற்றிருப்பவன் நம் கதாநாயகன் வீடு சன்னல், மரம், கொடி ஆகியவற்றை நண்பர்களாகக் கொண்டு கனவில் லயித்திருப்பவன்.. குறிப்பாக பெண்களிடம் பேச கூச்ச சுபாவமுடையவன். இப்படியாக ஒரு நாள் இரவு இன்பமாக ஒரு பாடலை பாடிக்கொண்டு (அவன் மகிழ்ச்சியாய் இருக்கும் போது பாடுவது வழக்கம்) வீதியில் சென்று கொண்டிருக்கிறான்.. ஒரு பாலத்தை கடந்து போகையில் பெண்ணொருத்தி அமைதியாக அசைவற்று நின்றிருந்தாள். தலைவனுக்கு அவளிடம் நெருங்க ஆசை. ஆனால் தலைவர் கூச்ச சுபாவம் உடையவர்யாயிற்றே.
அவளைக் கடந்து சென்றுவிட்டார். நாலடி முன்னே சென்று விட்டு திரும்பி அவளை உற்றுப் பார்க்கிறார். அவள் அழுவது போல் தெரிகிறது. உடனே நம்மாள் அவளிடம் நெருங்கி வந்து பேச ஒத்திகை செய்து கொண்டிருக்க அவள் விருட்டென அவனை கடந்து சாலையின் எதிர் புறத்திற்கு சென்றுவிட்டாள். யாரோ ஒருவன் அவளை பின்தொடர்ந்து ஓடி எட்டிப் பிடிக்க முயன்றான்.
உடனடியாக நமது நாயகன் அவனை அடித்து விரட்டிவிட்டு இவளுடன் நடக்க ஆரம்பிக்கின்றான். முதல்முறையாக பெண்ணிடம் பேச ஆரம்பிக்கின்றான். ஆதரவான, அன்பான வார்த்தைகளை பேசுகின்றான். அவளும் பதிலுரைக்கின்றாள்.. கைகோர்த்து நடக்கிறார்கள். ஒரு திருப்பத்தில் “நாளை மீண்டும் சந்திப்போம்” என கூறி செல்கிறாள் அவள். அடுத்த நாள் சந்திக்கும் வரை இவன் கனவுகளில் கொடிகட்டி பறக்கிறான். தனிமையில் இருக்கும் ஒருவனுக்கு, கனவுகளில் மட்டுமே காதல் செய்து கொண்டிருந்தவனுக்கு, நனவில் ஒரு துணை கிடைத்து இருக்கிறது. அதுவும் பெண் துணை. இவனின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள தோழமையான ஒரு உறவு கிட்டியிருக்கிறது. இன்பத்தில் லயித்திருந்தான் அவன்.
எதிர்பார்த்திருந்த அடுத்த நாள் இரவு வந்தது. இருவரும் தங்கள் கதைகளை பகிர்ந்து கொண்டனர்.. எண்ணற்ற எண்ணற்ற சொல்லப்படாத எண்ணற்ற தங்கள் கதைகளை பகிர்ந்து கொண்டனர்..”கண் தெரியாத பாட்டியுடன் பெற்றோரின்றி வாழ்ந்து வந்த என் வாழ்க்கையில் அவர் வந்தார்.. என்னிடம் பேசினார், அன்பை காட்டினார். ஒரு வருடம் கழித்து என்னை மணந்து கொள்வதாக வாக்களித்திருந்தார்” என அவளின் விருப்பத்திற்குரியவரை பற்றி கூறி தேம்பி அழுதாள்..”ஒரு வருடமாகிவிட்டது இன்னும் அவர் திரும்பி வரவில்லை.. அவருக்கு என் மேல் அன்பில்லை, அக்கறையில்லை.. என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டு சென்று விட்டார்” என அவள் மீது நம்பிக்கையிழந்து பேசிக்கொண்டிருந்தாள்..
நமது நாயகன் அவளுக்கு அவரை கண்டுபிடித்து தந்து உதவுதாக வாக்களிக்கவும், தினமும் இரவு இவர்களது சந்திப்பு நடந்தது.. தோழர்களாக அன்பு பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவளின் விருப்பத்திற்குரியவர் வந்து சேரவில்லை..
நம் நாயகன் கட்டுபடுத்த இயலா உணர்ச்சிகளை தட்டுதடுமாறி “நாதென்கா நான் உங்களை காதலிக்கின்றேன். ஆனால் இது நடக்காது என்பதை அறிவேன்” எனக்கூறவும், பதறி போன அவள் அழ ஆரம்பிக்கின்றாள்.. அடுத்த நாள் நாயகனுக்கொரு கடிதம் வருகிறது. ஏதுமற்ற நிலையிலும் கனவில் மகிழ்ந்து கொண்டிருக்கிறான் இவன். அவள் என்னானாள்?! அவள் காதலரின் நிலை என்ன?! நம் நாயகனுக்கு சொல்ல போகும் பதிலென்ன?! படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
நாடகக்காதல், பொய்க்காதல் என்றெல்லாம் வார்த்தைகள் உலவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஆண், பெண் நடத்தைகளை கேலிக்குள்ளாக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் இங்கே.. தனக்கு பிடித்த பெண் வேறொருவரை காதலிக்கிறார் என்றோ, தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றோ ஆசிட்வீச்சு, அரிவாள் வெட்டு, பாலியல் பலாத்காரம் போன்றவை நடைபெறும் சூழலில் இக்கதையை படிக்க வேண்டியது மிக அவசியம். காதல் விவரிக்க முடியாதது.. உணரப்பட வேண்டியது.. கட்டாயத்தினால் வரவழைக்க இயலாதது.. காதலுக்கான இலக்கணங்கள் என்று தனியாக எதுவும் இல்லை.. உணரப்பட வேண்டியதே.. அன்பு தான் எல்லாமே. அன்பு செய்வோம் மனமே பரந்து விரிந்து எல்லைகளற்று!
என் அன்பு வாசகர்களே, உணர்ச்சிவயப்பட்ட காதற்கதையை அறிமுகமாக படைக்க முயன்றிருக்கிறேன். வரிகளை வாசிக்கும் பொழுது உணர்ச்சிவயப்பட்ட தருணங்கள் எண்ணற்றவை.. நான் கண்ட கனவுகளும் எண்ணற்றவை.. அவைற்றை உணர்ந்து கொள்ள நான் உங்களுக்கே விட்டு விடுகிறேன் என் வார்த்தைகளை முடித்து…
வெண்ணிற இரவுகள்
Vennira Iravugal
எழுத்தாளர் :ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் :95
விலை:₹80
பதிப்பு :1
Published on :2007