நின்காதல் நிழல்தன்னில் நின்று மகிழ்வோம்
மின்னி மறையும் கண்ணிமைப் பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப் பிறந்தானோ?
இவான் துர்கேனெவ் –இன் கவிதையுடன் தொடங்குகிறது இச்சிறுகதை. கதை முடிகிற வரையிலும் இம்மூன்று வரிகளில்தான் தன் மூச்சினை வைத்திருக்கிறது.
தஸ்தய்வ்ஸ்கி காதலின் மொத்த ருசியையும் இந்தக் கதையின் கோப்பையில் தேநீராக ஊற்றுகிறார். பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் இரவுகள் என்னும் மண்ணையும், இடைவிடாது தோன்றிக் கொண்டேயிருக்கும் கனவுகள் என்னும் நீரையும் சேர்த்துப் பிசைந்து செய்த தேநீர்க் கோப்பை. விதவிதமான சொற்களால் தேநீர்க் கோப்பையின் மீது தீட்டப்பட்ட சித்திரங்கள். குடித்தாலும் தீராத தேநீர்தான் இந்தச் சிறுகதை.
ஓர் அழகிய தேவதை காதலி. கனவுலகவாசி காதலன். போதாதா? பீட்டர்ஸ்பர்க் நகரமே விக்கித்து வேடிக்கை பார்க்காதா?
வேறுவிதமான பீட்டர்ஸ்பர்க் உருவங் கொள்கிறது. பீட்டர்ஸ்பர்க்கில் விசித்திரமான சில முடுக்குகள் இருக்கின்றன. நகரின் ஏனைய எல்லாப் பகுதிகளிலும் பிரகாசிக்கும் கதிரவன் அவ்விடங்களில் எட்டிப் பார்ப்பதாகவே தெரியாது. வேறொரு கதிரவன், ஒரு புது வகைக் கதிரவன்….அங்கு ஒளி விடுகிறான்…… நம்மைச் சுற்றிலும் அலைமோதும் இந்த வாழ்க்கையை எவ்வகையிலும் ஒத்ததாக இல்லை. முற்றிலும் வேறான ஒரு தனி உலகுக்குரியதாய்த் தோன்றுகிறது. காவியக் கதைக்குரிய ஓர் அதிசய உலகில் காணத்தக்கதே அன்றி, நமது புவிக் கோளத்தில் நாம் வாழும் மெத்தக் கடினமான இக்காலத்தில் காணக்கூடிய வாழ்க்கை அல்லவே அல்ல அது. இது தஸ்தயேவ்ஸ்கியின் பீட்டர்ஸ்பர்க். ஓர் இலக்கியவாதியின் தனித்துவமான வரைபடம். குடும்பம் குடும்பமாகக் கோடை காலத்தில் கிராமங்களுக்கு நகரும் வண்டிகளையும் மனிதர்களையும் அடையாளம் காட்டியபடியே இவரது இதயமும் பாட்டியுடன் வசிக்கும் காதலியின் வீட்டிற்குப் பெயர்ந்து போகப் போவதை முன் அறிவிக்கிறது.
கதையின் நாயகனை ஏன் கனவுலகவாசி என்கிறோம்?
வீடுகளும்கூட என் நண்பர்கள்தான். தெருவிலே நான் போகும்போது அவை யாவும் என்னை நோக்கி முன்னால் ஒரு அடியெடுத்து வைப்பது போலிருக்கம். சன்னல்கள் யாவற்றாலும் என்னை உற்றுநோக்கியவாறு அவை வாய்திறந்து என்னுடன் பேசுவது போலவே தோன்றும். என்ன சேதி? சுகம்தானே? நானும் நல்லபடியாகத்தான் இருக்கேன். மே மாதத்தில் எனக்கு இன்னொரு மாடி கட்டப் போகிறார்கள் என்றோ, என்னைப் பழுது பார்க்கப் போகிறார்கள். நாளைக்கு வேலை தொடங்குவார்கள் என்றோ சொல்வது போலிருக்கும்.// இப்போது சொல்லுங்கள் இவன் கனவுலகவாசிதானே?
கனவுலகவாசியின் கையெழுத்தில் காதலின் ஆவணங்கள் எழுதிவைக்கப் படுகிறது. பீட்டர்ஸ்பர்க்கின் சின்னச் சின்ன அசைவுகள் கூட கனவுலவாசியின் கண்களுக்குத் தப்புவதில்லை.
பீட்டர்ஸ்பர்க்கைச் சுற்றிலுமுள்ள இயற்கையானது தனக்கு விண்ணுலகம் வழங்கியிருக்கும் முழு வலிவையும் முழு சக்தியையும் வசந்தம் பிறந்ததும் திடுதிப்பென வெளிப்படுத்தி வண்ண மலர்கள் சூடி எழிற்கோலம் பூண்டெழும் அக்காட்சியில் விவரிக்க இயலாதபடி உள்ளமுருகச் செய்யும் ஏதோ ஒன்று இருக்கிறது. எக்காரணமோ தெரியவில்லை அக்காட்சி எனக்குக் காச நோயால் நலிவுற்று நலமிழந்த நங்கையை நினைவூட்டுவதாயுள்ளது. இந்நங்கையை நாம் சில நேரங்களில் பரிதாபத்துடன் பார்க்கிறோம். வேறு சில நேரங்களில் ஏக்கம் நிறைந்த பாசத்துடன் பார்க்கிறோம். சில நேரங்களில் அவளைக் கவனியாமலும் இருந்து விடுகிறோம். ஆனால் திடுமெனக் கணப் பொழுதுக்கு அவள் அதிவினோதமாய் வியத்தகு எழிலுடையவளாய் மாறுகின்றாள்…….
ஆனால் அதற்குள் அக்கணம் போய்விடுகிறது. மறுநாள் திரும்பவும் அதே சோகச் சிந்தனை படர்ந்த, சோர்வுற்ற தோற்றத்தைக் காண்கிறீர்கள். அதே வாடிய முகத்தை அடக்கமும் ஒடுக்கமும் வாய்ந்த அச்சம் கொண்ட அதே போக்கினைப் பார்க்கிறீர்கள்…. நிலையற்ற இந்த அழகு மலர் சடுதியில் இப்படி வதங்கிவிட்டதே, தவிர்க்க முடியாதபடி இப்படி உலர்ந்துவிட்டதே என்று கணப் பொழுதுக்கு மின்னிப் பளிச்சிட்ட ஒளி இப்படி ஓர் ஏமாற்றாய், பயனற்ற வெற்று மினுக்காய் மாறிவிட்டதே என்று வருந்துகிறீர்கள். அதை நன்றாய்ப் பார்த்து அதன்மீது பாசம் கொள்வதற்குக்கூட நேரமில்லாமற் போயிற்றே என்று துயருறுகிறீர்கள்….
எழுபது பக்க முழுக் கதையும் எப்படி இருக்கப் போகிறது என்பதன் முன்னோட்டமாக இவ்வரிகள் போலும். இதை எழுதுகிற இந்தக் கணத்தில்தான் இதை என்னால் உணர முடிகிறது.
கணத்துக்குக் கணம் மாறும் கனவுகளின் வண்ணங்களை எவ்வளவு வேகமாய் வரைந்தால் கோடிக் கணக்கான மின்னல்களைக் காட்ட முடியும்? ஒரு மின்னலில் எத்தனை வெட்டுக்கள்? இப்படித்தான் தஸ்தயேவ்ஸ்கியின் அடர்த்தியான விவரணைகள். ஒரு காட்டுக்குள் நுழைந்த வனவிலங்கின் சந்தோஷம் கிட்டிவிடும். காட்டு இலைகளுக்குக் கைரேகை பார்க்கிற மாதிரி ஒவ்வொரு இலையாக ஊடுருவிப் பார்க்கலாம்.
கித்தானை விட்டு நகர முடியாத ஓவியத்தைப் போல காட்சியை விட்டு நகர முடியாத கண்கள்.
காதலை ருசி சொட்டச் சொட்ட இதற்குமுன் இப்படி யாரும் விவரித்தது இல்லை. சொர்க்கத்தின் கடற்கரை பெஞ்சுகளில் சொக்கிப் போய்க் கிடக்கும் காதலர்கள் போல கனவுலகவாசியும் நாஸ்தென்காவும் ஒன்றிப் போய்க் கிடப்பார்கள். ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடைவெளி இருப்பதுண்டா? அப்படியோர் ஐக்கியம்.
இத்தனைக்கும் அவள் வேறொருவனைக் காதலிக்கிறாள். இத்தனைக்கும் கனவுலகவாசி, தன்னைக் காதலிக்க வேண்டாம் நட்பு போதும் என்றுதான் சொல்கிறான். தனது காதலனைக் கைப்பிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று அவனைக் கேட்டுக் கொள்கிறாள் அவள்.
கடைசியில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதல்ல சுவாரசியம். அவரவர்களும் அந்தச் சூழலை எதிர்கொள்ளும் நேர்த்திதான் அழிவில்லாத இலக்கியமாகிறது.
எழுதாமல் இருக்க முடியடிவில்லை. காதலின் உயிரெழுத்துகள் கசிந்திருக்கும் கடைசி வரிகள்….
என் தெய்வமே முழுதாய் ஒரு கணப் பொழுதுக்கல்லவா ஆனந்த இன்பம் கிட்டிற்று போதாதா அது, ஓர் ஆயுட்காலம் முழுமைக்கும் போதாதா?….
இந்தப் புத்தகம் பாரதி புத்தகாலயத்தின் நேர்த்தியான தயாரிப்பு. ரா.கிருஷ்ணையா வின் மூலத்தைச் சிதைக்காத மொழிபெயர்ப்பு.
– நா.வே.அருள்