உறங்கப் போகிறேன்
என்கிறேன்
கலைத்துப் போட்டுக்
கண்ணுறங்காது காக்க வைக்கிறது
கவிதை
தூங்கட்டுமா என்கிறேன்
தாலாட்டுப் பாடுகிறது
எப்போதோ வாசித்த
இனிய கவிதை
எழுப்பிவிடுகிறது
இன்னொரு கவிதை
அதிகாலையில்
இன்னும் தூங்கலாம்
என்ன அவசரமென்று
விழிப்பைத் தள்ளிப் போடுகிறது
கனவிலும் ஆர்ப்பரிக்கும் கவிதை
கையில் பையில்
கண்களில்
நடக்கையில் நிற்கையில்
அமர்கையில்
எங்கிருந்தும் கண் சிமிட்டிவிடுகிறது
கவிதை
எதிர்ப்படும் யாரும்
இன்னதென்று புரியாமல் பார்த்துத் திண்டாட
உதறி உதறித்
தள்ளுகிறேன்
ஊர்ந்து கொண்டே இருந்து
உபத்திரவம் செய்துவிடுகிறது
வேறொரு கவிதை
அதன் மடியில் நானும்
என் மடியில் தானும்
கிணற்றில் வேகமாக
இராட்டினத்தில் சுழலவிட்டு
மெல்ல மெல்ல
மொண்டெடுத்துக் கொண்டிருக்கையில்
கயிற்றிலிருந்தும்
விடுவித்துக் கொண்டு
தளும்பித் தளும்பி
மெல்ல மெல்லக்
கண்ணெதிரே மூழ்கிக் கொண்டிருக்கும்
மற்றுமொரு கவிதை
*எஸ் வி வேணுகோபாலன்*