வேறு ஒரு பாரதி..
– ஆயிஷா இரா.நடராசன்
மகாகவியை வேறு ஒருவனாக நான் அறிந்த தருணம் என்றென்றும் மறக்கமுடியாதது. என்னுடைய ஆயிஷா நூலின் வங்காள மொழி பெயர்ப்புக்காக.. சமீபத்தில் வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ய நேர்ந்தது. அங்கே எங்கும் தாகூர் எதிலும் தாகூர்.. என்கிற நிலையை பார்க்க முடிந்தது.. ஆனால் ஒரு இடத்தில் நோபல் அறிஞர் தாகூர்.. தன்னை கவர்ந்த கவி என்று நஸ்ரூல் என்கிற ஒரு மாமனிதரைப் பற்றி எழுதிய குறிப்புகளை அங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள்.. இன்று வங்காளத்தில் தாகூரின் பாடல்களை விட நசுருலின் பாடல்களை இசையோடு பாடுகிறார்கள்.. இவரைப் பற்றி அதிகம் அறியாமல் போய்விட்டேனே என்று நினைத்தபடி.. இப்படி கலவையாக அறிந்து கொண்டு தமிழகத்திற்கு திரும்பிய பிறகு நஸ்ரூல் என்கிற அந்த மாமனிதரை பாரதியார் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் என்கிற செய்தியை படித்து நான் பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தேன்.
எங்கோ வங்காளத்தில் இருக்கின்ற ஒரு கவிஞனை தேடி எடுத்து வாசித்து அவன் சிறப்பை அறிந்து சுப்ரமணிய பாரதி தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் என்றால் உண்மையிலேயே வேறு ஒரு பாரதியை அன்று நான் அறிந்தேன்.. நான் எப்படி அதை தெரிந்து கொண்டேன். 1932 ஆம் ஆண்டு பாரதியை பற்றி கல்கி என்கிற நாம் அறிந்த எழுத்தாளர் தமிழில் பாரதி .. மகாகவி அல்ல.. தாகூர் அளவிற்கு அவனை போற்ற முடியாது என்பது போல ஒரு கருத்தை தெரிவிக்கிறார்.. பாரதி ஒரு கவிஞன் என்கிற வகையில் மட்டுமே நாம் பார்க்க வேண்டும் என்கிற வகையில் ஒரு கட்டுரையை அவர் எழுதுகிறார்..
தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பு ஏற்படுகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை வீரகேசரி இதழின் ஆசிரியராக இருக்கும் வ.ரா காந்தி இதழில் சுப்ரமணிய பாரதியார் சரித்திரம் என்கிற ஒன்றை எழுதுகிறார். அது ஒரு புத்தகமாக வெளி வந்திருக்கிறது என்றாலும் தற்போதைய நவீன காலத்தில் அந்த புத்தகத்தை மறுபடியும் நாம் பதிப்பு செய்து வெளியிட வேண்டும் என்று பாரதி புத்தகாலயம் கருதிய பொழுது அதன் மெய்ப்பு திருத்தும் பணி என்னிடம் ஒப்படைக்கப் பட்டது..1933-34 ஆண்டில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் உடைய தொகுப்பை வாசித்த பொழுது பல்வேறு அதிர்ச்சிகள் எனக்கு காத்திருந்தன..
நாம் யாருமே அறியாத வேறு ஒரு பாரதி இருக்கிறான்!
வ ரா எனும் வ ராமசாமி அய்யங்கார்.. ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ் எழுத்தாளர்..1910 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் பூணூல் அணிவதில்லை.. தலைகுடுமியை நீக்கிவிட்டார்.. பெற்றோர் உற்றார் சகோதரர் ஆகிய உறவுகளைத் துறந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் இறங்கினார்.. என்றெல்லாம் வாசித்துக்கொண்டு வந்தபொழுது.. அறிஞர் அண்ணா அவர்கள் வ ரா வை பற்றி அக்ரஹாரத்து அதிசய மனிதர் என்று வர்ணித்து திராவிட நாடு இதழில் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அந்த கட்டுரையில் அண்ணா குறிப்பிடுகிறார் வ.ரா வங்காளத்தின் விதவை பெண் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார்.
வங்காள மொழி உட்பட ஆறு மொழிகளை பேசும் திறம் பெற்ற வ ரா.. சுப்ரமணிய பாரதி சுதேசமித்திரன் இதழில் 1917 ஆம் ஆண்டு சக்திதாசன் என்கிற புனைப்பெயரில்.. நஜ்ருல் என்கிற அந்த கவிஞனைப் பற்றி எழுதியதோடு மட்டுமின்றி கவிஞரின் வங்காள கவிதைகள் இரண்டை மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதை பதிவு செய்கிறார்.. வங்காளமும் தமிழும் அறிந்தவாரா.. எவ்விதமான தவறும் இன்றி அற்புதமாக பாரதி .. நஜரூல் கவிதையை மொழிபெயர்த்து இருப்பதை எழுதி அசந்து போகிறார்..
அதன் தொடர்ச்சியாக நான் பாரதி வேறு யாரையெல்லாம் தமிழுக்கு அறிமுகபடுத்தி இருக்கிறார் என்பதை தேடத் தொடங்கினேன்.. எனக்கே இருக்கின்ற குதற்கமான ஆர்வம் காரணமாக பாரதி மரணம் சம்பவித்த அந்த தேதியில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை முதலில் அறிய விரும்பினேன்..1921 செப்டம்பர் மாதம் பதினோராம் தேதியா பன்னிரண்டாம் தேதியா பாரதி இறந்தது எந்த தேதியில் என்கிற ஒரு சர்ச்சை நிலவிக் கொண்டிருக்கிறது.. பாரதி கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருந்த அந்த நாளில் ஒரு பிரபல மருத்துவரை பாரதியிடம் சிகிச்சை பெறுவதற்காக சிங்காரவேலர் அழைத்து வருகிறார்.. அப்போது பாரதி எழுதிக்கொண்டிருந்தார் ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லாகானை பற்றி சுதேசமித்திரன் இதழுக்காக அந்த கட்டுரையை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.. இந்த கட்டுரையை நான் முடிக்க வேண்டும் டாக்டர் காலையில் வரட்டும் என்று உத்தரவு போல பிறப்பித்து விட்டார்.. மறுநாள் காலையில் பாரதி உயிருடன் இல்லை.. இதுதான் பாரதியின் முடிவு.. எனவே நான் அறிந்த வேறு ஒரு பாரதி உலகத்தை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கு இறுதி வரை போராடியவன்!
தன் காலத்துக்கும் சரி தனக்கு முந்தைய காலத்துக்கும் சரி.. அனைத்தையும்விட ஏன் பாரதி வேறுபட்டான்? அறிவியலையும் குழந்தை பாட்டையும் கார்ட்டூன் சிறுகதைகளையும் வசன கவிதைகளையும் அறிமுகப்படுத்துகின்ற ஒரு புதிய காற்றாக மாபெரும் புத்தம் புதிய பாதையை தமிழுக்கு அவனால் எப்படி வடிவமைத்து கொடுக்க முடிந்தது.. இந்த கேள்விகளோடு நாம் காலத்தை பின் தொடரும் பொழுது நமக்கு கிடைக்கும் பதில்.. பாரதி தேடல் மிக்கவன்.. பாரதி ஒரு தீவிரமான புத்தக வாசிப்பாளர்.. பாரதி ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்’ என்று முதலில் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்
சரித்திர புகழ்மிக்க மாபெரும் மனிதர்களை நாம் பாரதி ஆண்டுகள் என்கிற ஒரு காலத்தில் தேடி.. தமிழுக்கு புதிதாக எழுதுவோம் என்று முடிவு செய்தால் அது தோல்வியில் தான் சென்று முடியும் ஏனென்றால் பாரதி அவர்களை ஏற்கனவே அறிமுகம் செய்திருப்பான்.. அவற்றில் எனக்கு அதிர்ச்சி தரக்கூடிய சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.. மிஸ் ரிஸ் என்று ஒரு பெண் கவிஞர். அவர் தன்னுடைய கவிதைகளை கவி முத்துக்கள் என்று அழைத்துக்கொண்டார். ஆறு வரி தான் அவருடைய கவிதையில் இருக்கும் பாப்லோ நெரூதாவுக்கு இணையான கவிஞர் அவருடைய கவி முத்துக்களை ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வடிவத்தில் பாரதி வாசித்து அதை சுதேசமித்திரனில் கவி முத்துக்கள் என்கிற தலைப்பிலேயே அறிமுகம் செய்கிறார்.. உண்மையில் மிஸ்ரிஸ் எனும் அந்த பெண் கவிஞரின் கவிதைகள் பாரதியை எப்படி வந்து அடைந்திருக்கும் என்பது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது ஏனென்றால் பாரதி வாழ்ந்த கால கட்டத்தில் நூலகத்திற்கு வரும் இதழ்களைத் தவிர அவனுடைய தேடலுக்குள் ஒரு இணையமோ அல்லது இன்றைக்கு இருப்பது போன்ற தகவல் தொடர்போ இருக்கவில்லை.
அதே காலகட்டத்தில் வியானே நோகு குச்சி என்கிற ஜப்பானிய கவிஞனின் ஹைக்கூ கவிதைகள் தமிழுக்கு பாரதியால் கொண்டு வரப்பட்டன.. இதனை பாரதி 17 அசை கொண்ட ஹோகூ என்று எழுதுகிறான். திருக்குறளோடு அவற்றை ஒப்பிட்டு விவரிக்கிறான் மிஸ்ரிஸ் தன் கவிதையில் தாயில் சிறந்த தெய்வம் உண்டா என்று ஓரிடத்தில் எழுதுகிறார்.. பாரதியின் வாக்கிலே அது அற்புதமாக வேறு ஒரு இடத்தில்ம் பதிக்கப்படுகிறது ‘பெற்ற தாய் நற்றவ வானினும் நனி சிறந்தவளே’ என்பது பாரதி வாக்கு. பாரதி அவர்களை அறிந்தது போலவே பாரதியை அவனது சமகால கவிஞர்களும் அறிந்தே வைத்திருந்தனர்..

பிரிவு துயரின் பிறவிக் கவிஞன் கீட்ஸ் என்று ஜான் கீட்ஸ் பற்றி பாரதி எழுதுகிறார்.. ஜான் கீட்ஸின் கவிதைகளை பாரதி தமிழுக்கு அறிமுகம் செய்கிறார்..
பாரதிக்கும் கிட்ஸுக்கும் நடுவில் நிறைய ஒப்புமைகள் உண்டு. மிக குறைந்த ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் என்று பார்த்தால் நமக்கு கிடைக்கும் ஒப்புமை ஒரு புறம் இளம் வயதிலேயே கவிஞனாகி ஒழுங்கற்ற கற்றல்.. நிலையற்ற ஜீவிதம் இருவருக்கும் உண்டு.. ஒழுக்கவியலும் அழகியலும் ஒன்றே என்று பாரதி.. கீட்ஸ் கவிதையை அவன் தத்துவத்தை தமிழுக்கு வழங்குகின்றார்.. மகாகவி பாரதியின் முதல் கவிதை சுதேசமித்திரனில் 1908 ஆம் ஆண்டு அச்சான பொழுது அவருடைய வயது 26.. ‘யாம் சூட்டியிருக்கும் மலர்கள் மணம் அற்றவை என்பதை நன்கு அறிவேன் தேவலோகத்துப் பாரிஜாத மலர்கள் பற்றி சிலாகிப்பது மனிதர் பசிக்கு உதவுமோ’ என்பது போல எழுதிக்கொண்டு வரும் பாரதி உண்மையே வனப்பு.. வனப்பே உண்மை என்கிற விஷயத்திற்கு வரும் பொழுது கிட்ஸ் எனும் கண்ணீர் கவிஞனை நினைவு கூறுகிறார்.. ஒருவர் இன்று வாசகராக திறந்தவெளியில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு தேடலுடன் இருப்பது ஒரு பெரிய விஷயமே அல்ல.. அன்று சிறைச்சாலைக்கும் கைது வாரண்ட்க்கும் நடுவில் எழுச்சி மிக்க விடுதலைப் போராட்டத்தின் நெருப்பு சுவர்களுக்கு நடுவில் இப்படிப்பட்ட தேடலை செய்த பாரதி வேறு ஒரு பாரதி என்பதில் சந்தேகமில்லை
95 பக்கங்கள் கொண்ட புல்லின் இலைகள் வசன கவிதை தொகுப்பை வால்ட் விட்மன் வெளியிட்ட அந்த ஆண்டுகளிலேயே பாரதி வாசித்து இருக்கிறான் என்பது நமக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது.. 1917 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில் வால்ட் விட்மனின் கவி தையை மொழிபெயர்த்து வழங்குகின்றார் பாரதி..

வால்ட் விட்மன் கவிதை தொகுதியின் அட்டையில் அவனது பெயர் இருக்காது. உரிமம் கோருகின்ற பக்கத்தில் மட்டும் சின்னதாக அவனுடைய பெயர் இருக்கும் ஆனால் ..28 ஆம் பக்கத்தில் வால்ட் விட்மன் ஒரு சுய அறிமுகம் செய்து கொள்வான் ‘வால்ட் விட்மன் ஒரு அமெரிக்கன்.. கரடு முரடானவன் பேரண்டமானவன், மாமிச உணவும் உடலும் உணவு பெருக்கமும் உடையவன், ஆண்களை விட பெண்ணை விட உயர்ந்தவன் அல்ல.. அவர்களில் ஒருவன்’ என்று எழுதுவான்.. பாரதி வரிக்கு வரி அதனை தருகிறார்.. நகரம் என்கிற தலைப்பில் வால்ட் விட்மன் எழுதிய கவிதையை தமிழுக்கு வழங்குகிறார்.. வால்ட் விட்மன் ஐ போலவே பாரதி முழங்கினான் தன்னைப் பற்றி தானே அறிவித்துக் கொண்டான் ‘எமக்குத் தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ஒரு பிரகடனம் போல செய்கிறான்.. இதற்கு முன் எந்த கவிஞனும் தன்னைத் தானே தமிழில் இப்படி அறிவித்துக் கொண்டதாக சரித்திரம் இல்லை.
பாரதி அறிமுகம் செய்த மற்றொரு கவிஞன் ஷெல்லி. ஷெல்லிதாசன் என்று பாரதி மட்டுமல்ல அந்த காலகட்டத்தில் தாகூர் கூட தனக்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டார். ஷெல்லி கிளப் என்று ஒரு கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் பாரதிய முயற்சி செய்கிறார். இந்த ஷெல்லியை பாரதி எப்படி படித்தார் ஏறத்தாழ பாரதி போலவே ஷெல்லி 39 வயதிலேயே மரணம் அடைந்தார். முடி அரசை நிராகரித்து குடியரசை போற்றியவன் என்று பாரதி ஷெல்லியைப் பற்றி சிலாகிக்கிறார்.

நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து ஷெல்லியைப் போலவே பாரதியும் பாடினான் சுதந்திரம் அவர்களது லட்சியம்.. சமூக சோகத்தை பாடுவது அவர்களுடைய ரத்தத்தில் ஊறிப் போயிருந்தது சமத்துவம் சகோதரத்துவம் என்று முழங்கியவர்கள் அவர்கள்.. ஷெல்லி ODE என்று அழைக்கப்படுகின்ற கவிதை உருவத்தை கையில் எடுத்தவன் கடல் காற்று வானம்பாடி நைட்டிங்கேல் என்று விடுதலை உணர்வை தூண்டு வதற்கு பலவற்றை பயன்படுத்தி கொண்டவன்.. பாரதியைப் போலவே ஷெல்லியும் காற்றை பாடினான் ஆனால் பாரதியின் காற்று வேறு ஷெல்லியின் காற்று வேறு ‘வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.. உயிரோட உள்ள எல்லாமே காற்றின் மக்களே’ என்று சமத்துவம் பாடுவான் மகாகவி பாரதி.. ஆனால் பாரதி தானே தன்னை ஷெல்லியோடு ஒப்பிட்டுக்கொண்டு மூன்று கட்டுரைகள் எழுதுகிறார். இந்த மகா கவிஞன் எப்படி ஷெல்லியின் கவிதைகளை எங்கே வாசித்து இருப்பான் அவருடைய வாசிப்பு வெறி எவ்வளவு அற்புதமானது.. பாரதியை பொறுத்தவரை சிறைச்சாலைக்கும் வறுமை வாழ்வுக்கும் இடையே எங்கோ ஒரு இடத்தில் ஒரு திறந்தவெளி நூலகம் இருந்திருக்க வேண்டும்..
பாரதி பைரனை அறிமுகம் செய்கிறான்.. பைரன் பற்றி ஆறு கட்டுரைகளை எழுதி இருக்கிறார் பாரதி.. பைரன் ஷெல்லியின் தோழன் சமுதாய உணர்வு அதிகம் அவருடைய கவிதைகளில் இருப்பதை பார்க்கலாம்.. அவன் ஒரு ஜனநாயகவாதியாக மாறியவன்.. கிரேக்க தேசத்தின் விடுதலையை பாடியவன் அந்த மண்ணிலேயே இறந்து போனவன்.. கிரேக்கம் எப்பேர்ப்பட்ட தேசம் என்று புகழ்ந்து பாடுகிறார் பைரன்.. அந்த நெடும் பாடல் மிக பிரபலமானது அந்த நெடும் பாடலை தமிழ் க்கு தருகிறான் பாரதி.. கிரேக்கத் தீவுகளே என்று அகமகிழ்ந்து பைரன் பாடுவதைப் போலவே அவனுடைய குரலில் நாம் பாரதியின் வார்த்தைகளில் அதை உணர முடியும்.. பாரதி தேடலில்ப்படாமல் போயிருந்தால் இந்த பைரன் என்னும் கவிஞனை யார் தான் தமிழகத்தில் அறிந்திருப்பார்கள்.. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே ..கன்னியராகிய நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே’ என்று பாரதியின் முழக்கத்தின் தொடர்ச்சியை போலவே பைரனின் ஓட்டத்தை காண முடியும்.. மிக நுணுக்கமாக பைரனை பதிவு செய்கிறான் பாரதி.. எங்காவது பைரனின் கவிதைகளை கூட பாரதி படித்திருக்க முடியும்.. ஆனால் ஒரு காலை உந்தி நடப்பான் பைரன்.. என்பது போன்ற நுணுக்கமான தகவல்களை பாரதி எங்கே இருந்து பிடித்தான்.. இந்த இடத்தில் தான் பாரதி.. வேறு ஒரு பாரதி என்று நான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.
யுலிசஸ் எனும் மகா காவியத்தை வழங்கிய டென்னிசன் பற்றி பாரதி எப்படி அறிந்து கொண்டான்.. எதிர்காலத்திற்கான கால மணி ஓசை என்று ஆல்ஃபிரட் டென்னிசெனை பாரதி வர்ணிக்கிறான்.. பாரதிக்கும் டெனிசனுக்கும் இடையே நிறைய ஒப்புமைகள் உள்ளன.. விக்டோரியா மகாராணியின் அரண்மனையில் அரசவைக் கவிஞனாக இருந்தவன் டெனிசன்.. எட்டயபுரம் அரண்மனையில் ஏறக்குறைய அதே பதவியை பாரதி வகித்து இருக்கிறான்.. தனது உச்சகட்ட இலக்கிய காலங்களில் நான்கு இலக்கிய இதழ்களை ஆல்பர்ட் டென்னிசன் நடத்தினார்.. .. பாரதி யும் நான்கு இதழ்களில் ஆசிரியராக இருந்திருக்கிறார்.. இந்தியா வார இதழ், பால பாரதம் ஆங்கில இதழ், சூரியோதயம் வார இதழ்.. மற்றும் விஜயா நாளிதழ்..
இவர்கள் எல்லாருமே ஆங்கில கவிஞர்கள்.. ஆங்கிலத்தில் புலமை கொண்ட .. பாரதி இவர்களையெல்லாம் ஏதோ ஒரு தேடலின் மூலம் வாசித்து அறிமுகப்படுத்தி இருப்பதில் என்னதான் கடிது என்றாலும் கூட ஒரு நியாயம் இருக்கிறது..ஆனால் பாரதி அறிவியலை எழுதியது என்பது இந்திய மொழிகளில் இல்லாத ஒன்று. ‘சந்திர மண்டலத்தை கண்டு தெளிவோம்’ .. என்று எழுதிய ஒரு கவிஞன் இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லை.. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் பாரதியும் அறிவியலும் என்று ஒரு கட்டுரை எழுதினேன்.. அதே நான் ஆங்கிலத்தில் எழுதினேன்.. பாரதியின் சமகாலத்தில் எந்த மொழியிலாவது யாராவது அப்படி அறிவியலை எழுதியிருக்கிறார்களா என்று நான் தேடினேன்.. அந்த காலகட்டத்தில் என் தேடுதலுக்கு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எதுவுமேயாகப் படவில்லை.. நூலகங்களில் அப்படி எதுவுமில்லை..

ஆனால் சமீபத்தில் ஒரு விஷயம் குறித்து அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.. எமிலி வெர் ஹரன் (Emile Verhaeren) என்று ஒரு பெல்ஜியம் கவிஞனைக் குறித்து நான் அறிந்தேன்.. இந்த கவிஞனை பாரதி அறிமுகம் செய்திருக்கிறார்.. என்று வாசித்த பொழுது மெய்சிலிர்த்து போனேன் பெல்ஜியத்தை சேர்ந்த இந்த கவிஞர் ஜெர்மன் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் கவிதைகள் படைத்திருக்கிறார். பாரதியின் சமகாலத்தவர். இவரை அறிவியல் கவி என்றே பாரதி அறிமுகம் செய்கிறான் இயந்திரங்கள் குறித்தும் ஆலைகள் குறித்தும் பாடியவன் எமிலி.. பாரதிக்கு எமிலிய எப்படி தெரியும்.. நவீன காலத்தில் நானோ தொழில்நுட்ப யுகத்தில் என்னால் தேட முடியாத ஒரு கவிஞரைப் பற்றி பாரதி எப்படி தேடி அறிந்திருக்க முடியும் ..
எமிலி வெர் ஹரன் எப்படி இறந்து போனார் என்பதை பாரதி குறிப்பிடுகிறார்.. ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்யும்பொழுது ரூவன் என்ற ரயில் நிலையத்தில்.. அவர் இறந்து போகிறார்.. புதுவையில் வசித்து வந்த காலத்தில் பிரெஞ்சுப் பத்திரிக்கைகளின் மூலம் இது குறித்து பாரதிய அறிந்திருக்க வேண்டும்.. ரயிலைப் பற்றி அற்புதமாகக் கவிதை பாடிய அறிவியல் கவிஞன் ரயில் மோதி இறந்துவிட்டான் என்று பாரதி பதிவு செய்கிறார்.. ‘பாடிய பாட்டையே பாடிப் பாடி இளைத்து போன இரும்பு காது தமிழன்’.. என்று தன் காலத்தின் தமிழ் பாட்டு பாரம்பரியத்தை கேலி செய்த பாரதி ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே.. இயந்திரங்கள் வகுத்திடு வீரே..’ என் றும் ஆயுதம் செய்வோம் காகிதம் செய்வோம்’ என்றும்.. வானொலி பெட்டியைப் பற்றியும்.. அறிவியல் கவிதைகளை வரிசையாகப் பாடுகிறான்.
பாரதி.. எப்படிப்பட்ட புத்தக வாசிப்பு வெறியனாக தேடலின் தனித்துவமிக்க நாயகனாக விளங்கினார் என்பதற்கு வ ரா ஒரு அற்புதமான சம்பவத்தை நமக்கு எழுதுகின்றார்.. பாரதியை அவர் புதுவையில் தமிழ்நாட்டிலிருந்து சென்று தங்கியிருந்ததால் போலீஸ் க்கு பயந்து பதுங்கி இருக்கும் பயந்தேறி கோழை என்று சில முட்டாள்கள் அப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.. இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் உட்கார்ந்து கொண்டு பாரதியை ஈவிரக்கமில்லாமல் அப்படி விமர்சிக்கின்ற ஈனர்கள் இருக்கும் பொழுது அந்த காலத்தில் கேட்பானேன்.. வா வே சு அய்யர் சீமையிலிருந்து மாறு வேடம் தரித்து இந்திய போலீசாரின் கையில் சிக்கிக் கொள்ளாமல் புதுவைக்கு வந்து சேர்ந்ததை பெரிய வக்கணையுடன் வர்ணித்து இந்த மாதிரி பாரதியால் செய்ய முடியுமா என்பது போல ஒரு பேசிக் கொண்டிருந்தார் அவர் பெயர் கொடியாளம்வா ரங்காச்சாரி அய்யங்கார்.. அவரை குறைத்து மதிப்பிடமுடியாது அவரை குறைத்து மதிப்பிடமுடியாது சென்னை கவர்னர்களே திருச்சிக்கு விஜயம் செய்தால் இவர்களுடைய குடும்பத்தார்களுக்கு தான் முதல் பேட்டி அளிப்பார்கள் என்று வ ரா எழுதிச் செல்கிறார் ஆனால் அய்யங்கார் அரவிந்தரிடம் அளவுகடந்த பக்தி வைத்திருந்தார் அடிமைப்பட்டுக் கிடந்த கிரேக்கர்களை தட்டி எழுப்புவதற்காக பைரன் எழுதிய கவிதைகளை பாரதியின் மொழிபெயர்ப்பில்.. அச்சிட்டு விநியோகித்து கொண்டிருந்த அய்யங்காருக்கு பாரதியின் சொந்த கவிதைகளின் அருமை தெரியவில்லை..
அந்த கால கட்டத்தில் பாலகங்காதரத் திலகர் புதிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.. சுய ராஜ்யம்.. குறித்த மிக முக்கியமான புத்தகம் அது.. அந்த புத்தகத்தை ஆங்கிலேய அரசு உடனடியாக தடை செய்தது.. இது ஒருபுறமிருக்க பாரதியிடம் அதிகம் மதிப்பில்லாத அய்யங்கார் பிரமித்துப் போகும்படி அவர் ஒரு காரியம் செய்துவிட்டார்.. வ ரா எழுதுகிறார் தஞ்சாவூர் ஜில்லா வில் மன்னார்குடிக்கு அருகில் நாகயூர் என்னும் ஒரு சிறு கிராமம் இருக்கிறது அங்கே ரங்கசாமி அய்யங்காருக்கு ஒரு பெரிய பங்களா இருந்தது.. அங்கு அய்யங்கார் அடிக்கடி பல நாட்கள் தங்குவது வழக்கம் .. ஒரு நாள் மட்ட மத்தியானத்தில் ஒரு குதிரை வண்டி அந்த பங்களா வாசலில் வந்து நின்றது. வண்டியில் ஒருவர் மட்டும் இருந்தார் மூட்டை முடிச்சு ஒன்றுமில்லை அவர் வண்டியை விட்டு கீழே இறங்கினார்.. தலை வழுக்கை.. மொட்டை.. மீசை இல்லை பித்தான் இல்லாத ஒரு சட்டை .. ஆனால் அழகான சரிகை வேஷ்டி.. வண்டியை விட்டு இறங்கியவர் ..பங்களாவின் படிக்கட்டுகளில் ஏறி நேரே மாடிக்குப் போய்விட்டார்.. அவர் யார் என்பதை பார்க்க ஓடி வந்த அய்யங்கார் அசந்து போனார் அது பாரதி.. அப்போது பாரதி பெயரில் ஒருவாரண்ட் இருந்தது புதுச்சேரியில் அவரை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் போலீஸ் காரர்களுக்கும் அவரை நன்றாக அடையாளம் தெரியும் அப்படி இருந்தும் பாரதி எப்படியோ எல்லாருடைய கண்களிலும் மிளகாய் பொடியை தூவி மன்னார்குடி வந்திருக்கிறார்.
பாரதிக்கு தெரிந்திருந்தது பால கங்காதர திலகர் எழுதிய புத்தகத்தின் ஒரு பிரதி அப்போது அய்யங்காரிடம் இருந்தது.. இரவில் அந்த புத்தகத்தை முழுவதுமாய் வாசித்து குறிப்பெடுத்த பாரதி அதிகாலையில் அய்யங்கார் எழுந்திருப்பதற்கு முன்னமே அங்கிருந்து கிளம்பி போய்விட்டார்.. அடுத்த இரண்டாவது தினத்தில் சுதேசமித்திரன் பத்திரிகையில் திலகரின் புத்தகத்தை அறிமுகம் செய்தார் பாரதி.. அதற்காக இன்னொரு பிடிவாரண்டு அவருக்கு பிறப்பிக்கப்பட்டது என்றாலும் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கும் அதை தமிழ் அன்பர்களுக்கு அறிமுகம் செய்வதற்கும் பாரதி எடுத்துக்கொண்ட ஆபத்தான சோதனைகள் இதுபோல் எத்தனையோ..

பாரதி அறிமுகம் செய்த ஆங்கில மற்றும் அயல் கவிஞர்களில் பெரிய பட்டியல் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட பாரதி சிறந்தவன்.. வங்கக் கவிஞன் நஜரூல் எழுதும்போது பாரதி அற்புதமான ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறான்… பாரதி போலவே அவரூம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை.. நெருப்பு கவிஞன் என்று பெயர் பெற்றான் நஜரூல்.. ரபீந்திர சங்கீத் என்று தாகூரின் பாடல்களை சாந்திநிகேதனில் ஒளிபரப்புகிறார்கள்.. ஆனால் பெரிதாக இன்றைய தலைமுறை அதை பாடுவதில்லை ஆனால் நசுருலின் பாடல்களை வங்காளிகள் இன்றைக்கும் சத்தமாக பாடுகிறார்கள்.. அதேபோல ஆடுவோமே பள்ளு பாடுவோமே.. தாயின் மணிக்கொடி பாரீர் போன்ற பாடல்கள் இல்லாமல் ஒரு விடுதலை திருநாளையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழனுக்கு கொண்டாட தெரியாது.. என்பதுதான் உண்மை.
போராட்டம் மிகுந்த.. வறுமை மிகுந்த.. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய துயரம் மிக்க தன்னுடைய மிகக் குறுகிய வாழ்நாளில் கடுமையான தேடல்களில் ஈடுபட்டு தமிழனுக்கு உலகத்தையே கொண்டு வந்து கொட்டியதை நினைத்தால்… அங்க பாரதி நாம் நினைத்துப் பார்ப்பதற்கு எல்லாம் அப்பாற்பட்ட..
புத்தக வாசிப்பு வெறியனான வேறு ஒரு பாரதி.. என்றே சொல்ல தோன்றுகிறது.
எழுதியவர் :
✍️ – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இணையம் இல்லாத அந்த காலத்தில் வெளிநாட்டு கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நம் நாட்டு பிற மாநில எழுத்தாளர்கள் என்று ஒவ்வொருவரின் படைப்பையும் வாசித்து அவர்களது எழுத்தை அறிமுகம் செய்திருப்பது, அதிலும் காவல்துறை தன்னை தேடிக் கொண்டிருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் பிறர் எழுத்துக்களை கருத்துக்களை தன் வாழ்வை பணயம் வைத்து அறிமுகம் செய்திருக்கிறார் மகாகவி. அடித்தளத்தில் உண்மையான வாசகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனைத்துலக வாசகர்களுக்கு ஓர் அற்புத எடுத்துக்காட்டு நமது மகாகவி. மகாகவியின் இன்னொரு முகமான அசுரத்தனமான வாசிப்பை என் போன்ற சிறிய வாசகனுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக எங்களுக்கு தகவல்களை திரட்டி அளித்துள்ள தங்களுக்கு கோடானு கோடி நன்றி. இத்தனை அறிய தகவல்களை தங்கள் நேரத்தை ஒதுக்கி எப்படி திரட்டினீரோ? அதற்கு ஒரு கட்டுரை எழுதுவோர் யார்…?🙂
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
என் போன்ற வாசகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் தங்கள் கட்டுரை மிகப்பிரமாதம்… அருமை.👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐💐👍🏻
வணக்கம்
பாரதியை வேறு ஒரு பக்கம் பார்த்து அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்
நிறைவாக உணர்ந்தேன். வாழ்த்துக்கள்
எஸ்ஸார்சி
மிக அருமையான பதிவு.
பல புதிய தகவல்கள்.
தனித்துவம் வாய்ந்த உலகக் கவிஞர்கள் பலரின் கவிதைகளையும் வாழ்க்கைகளையும் ஒப்பிட்டு எழுதியுள்ள உங்கள் கட்டுரை வெகு சிறப்பு. மகாகவியின் புத்தக ஆர்வமும், மையக் கருத்துக்களை புரிந்துகொண்டு ஆராய்ந்து தமிழ்ப்படுத்திக் கொடுத்த திறமையும் அம்மாமனிதருக்கு நிகர் அவரேதான் என்பது தெளிவு.
அசாத்தியமான உழைப்பு அவரிடம் மட்டுமல்ல, உங்களிடமும்தான்