உரைச் சித்திரத் தொடர் 10: காற்று பொம்மைக்குள் ஒளிந்து நடனமிடுபவன் – கவிஞர் ஆசுதிருமணக் கூடத்தில் வாசலில் வரவேற்கும் காற்றடைத்த பொம்மைக்குள் ஒளிந்து நடனமிட்டு எல்லோரையும் வரவேற்கிறான். வார்ப்பட புன்னகைகளை எல்லோர் மீதும் படர விடுகிறான். அவன் நடனத்தை காற்று ரசிக்கிறது. சூஃபிக்கள் தன்னைச் சுற்றி எரியும் வட்ட வடிவ நெருப்பு பிழம்புக்குள் நடனமிட்டு சந்தோசிப்பது போல, ஒரு வாழ்க்கை அவனை எரிப்பது அவன் மட்டுமே அறிவான்.
அவனின் வார்ப்பட புன்னகைக்குள் எத்தனை கேலிகள், கிண்டல்கள். களிக்கூறும் உவகைள் அவனை
அண்டுவதேயில்லை. சில நேர ஒளிதலில், அவன் வாழ்க்கை ஏன்?
மிரள்கிறது.
பரிசுகள் பூங்கொத்துகளோடு வருகிறவர்களை வரவேற்கிறான். வருகிறவர்கள் எல்லோருமே, தன் துயரங்களை, இன்னல்களை நடுத்தெருவிலே நிறுத்திவிட்டு, பிரியங்களை நேசங்களை மட்டுமே எப்படி கைக்கொண்டு வருகிறார்கள் என்பதை எண்ணும் போது, அவனுக்குள்
ஆச்சர்யங்கள் குமிழியிடும்.
கைக்கூப்பி அவன் வணங்குகையில், ஆயிரங்கால திருமண பந்தம், அவன் அன்பில் சிறு தளிராக அரும்பி நிற்கும்.
பொம்மைக்குள் புழுக்கம் வியர்வையுமாக புதைந்திருக்கும் அவனை நேசிப்பின் தூவிகள் விசிறிவிடும்.
திருமணக் கூடத்தின் உள்ளே மணமக்கள். வாசலில் காற்றடைத்த பொம்மைக்குள் அவன்.
அவன் நடனமிட்டுக் கொண்டிருக்கிறான்.
பொம்மையின் வார்ப்பட புன்னகைகளுடன், எல்லோரையும் வணங்கி வரவேற்கும் அவனுக்கென்றொரு பரிசினைக் கொடுங்கள். அவன் எல்லோரும்
மகிழ்வு கொள்ள நடனமிட்டுக் கொண்டேயிருப்பான்.
ஆசு