உரைச் சித்திரத் தொடர் 13: எதற்காக அழைக்கிறோம் – கவிஞர் ஆசுஒவ்வொருவரும் ஏதோ நிகழ்வுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அழைப்பெல்லாம் அன்பிற்காகவே எனினும், அன்பின் மீதான பிரியத்தின்
ஏக்கத்திற்கானதே அழைப்பு.

ஒருவரின் அழைப்பு அன்பின் அழைப்பெனில், அவர் எதைக் கடந்து உள் மனதில் நுழைகிறார். நுழைந்து வேரிடும் அவருக்கும், அழைத்துப் பரிவர்த்தனைச் செய்யும் அவருக்கும்
ஒரு சரடு இணைத்து இடையற்றுத்
தழுவலே.

எனில், ஒருவரை ஏன்? அழைக்காமல் புறக்கணிக்கிறீர்கள். அவரின் மீதான குற்றச்சாட்டென்ன.ஒரு காலத்தில், ஒரு நேரத்தில் மனதின் காயங்களுக்கு மருந்து தடவி ஆற்றியவர் அல்லவா.
சுக துக்கங்களில் உடனிருந்து கரைந்தவர் அல்லவா. பின் ஏன்? அவரை ஒதுக்கித் தள்ள வேண்டும். மீண்டும் அவரை அழைக்க வேண்டும் என்று அவர் மனம் இப்போதும், ஏங்கிக் கொண்டிருக்கும்.

அழைத்தவர்கள் எல்லாம் அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்களா? அழைத்தவர்கள் ஏற்பதுபோல பாவனை செய்து, தங்களை காட்சிப் பொருளாக்கி நிறைகிறார்கள்.

அந்த மேடை, அந்த ஒப்பனை, அந்த ஜொலிப்பு கண நேரம் மின்னலாய் ஒளிர்ந்து மறையும் நிகழ்வுக்காகவா அழைப்பு.

அந்த மலர்களைப் பாருங்கள் எவரின் அழைப்புக்காக காத்திருக்கவில்லை. தன்னில் மலர்ந்து, பிறரில் முகிழ்த்து
நிறையென கனிவு கொள்கிறது அவை.

அழையுங்கள்.
உள்ளுணர்வின் காந்தக் கவர்தல்போல்.
பிரியத்தின் விரல்கள் கண்ணீரைத் துடைப்பதுபோல்.
வாழ்ந்த சுவடின் தடங்களை காலம் ஏந்திக் கொள்வதுபோல்.

ஆசு