உரைச் சித்திரத் தொடர் 15: நடுநிசி காவல் ஆள் – கவிஞர் ஆசுநடுநிசி பேயரண்டுக் கிடக்கிறது. துளியின் துளி இருளாக சிதறிக் கிடக்கிறது நடுநிசி. அவன் கைக்கோலை தட்டி தெருவெங்கும் உலா வருகிறான்.தெருவின் ஆன்மா உறங்கும் நேரம். அவன் தனிமை இருளின் கருணையில், உன்மத்தம் கொள்கிறது.
உயிர் நீத்தவர்கள் ஏக்கமும் அன்பும் கொண்டு, அவரவர் வீட்டைப் பார்க்க
கால் தடம் பதித்து நடந்து வருகின்றனர்.
காவலாளி அவர்களின் தடம் பதிக்கும் கால்களைத் தொட்டு வணங்குகிறான்.
அவன் அந்தத் தெருவின் நடுநிசி காவல் ஆள். எல்லோரையும் பாதுகாப்பவன்
அவன்.எல்லோரும் உறங்குகையில், விழித்திருந்து அவர்களைக் காக்கிறான்.
முதிர் வயதின் தள்ளாமையிலும்,
அவன் கைக்கோலைத் தட்டி, இருள் அலற எச்சரிக்கிறான். இந்த நடுநிசி, வாழ்வின் மையத்தில் தன்னைப் பொருத்தி, குரலற்ற குரலாக தெருவெங்கும் வியாபித்து அவனுக்கானதாய் உயிர்ப் பெற்று எழுகிறது.
இந்த நடுநிசியில் ஒரு குழந்தை அழுகிறது. பசித்தக் குழந்தைக்கு பாலூட்டும் தாயின் அன்பும் மழலையின் அழுகையில் கரைகிறது.புதுமணத் தம்பதிகளின், ஊடலும் கூடலுமான உடல்
தவிப்புகள் சலங்கைகளாக நள்ளென்று ஒலிக்கிறது. கனவொன்றின் நீட்சியாக
அவரவர் உறக்கம் மேலிட, காவல் ஆளின்
கைக்கோல் ஒலியில் உள்வாங்கி மெளனமாகிறது.
அவனுக்கென்ற ஒரு வாழ்க்கை, இந்த நடுநிசி இருளாக, இன்னும் இன்னும் நீண்டுப் போகிறது.அவனுக்கான பந்தங்கள் வழி தவறி அறுந்துக் கிடக்கிறது. கனிவற்ற அவனுக்கானது என்று எதுவுமேயில்லை. இந்த நேரம், இந்த கணம், இந்த மணித்துளி …. அவ்வளவு தான்.
அவன் காவல் காக்கும் இந்தத் தெரு காலையில் விழிக்கக்கூடும். அவன் அப்போது உறங்குவான். அந்த மக்களின்
ஞாபகத்தில், அவன் இந்தத் தெருவில்
அவன் விழித்து காவல் காத்த கால் தடங்களும், கைக்கோல் ஒலியும் கேட்டுக் கொண்டுதானிருக்கும்.
மீண்டும் அவன் நாளை இரவின் காவலுக்காய் தன்னை தயார் படுத்துவான். நாளையின் நடுநிசியும்
அவனுக்கு பதற்றமானதாய்த் தானிருக்கும். எனினும் அவனின் பதற்றங்கள் இந்தத் தெருவின் தீயின் சுடராக ஒளிர்வதை அவன் மட்டுமே அறிவான்.
ஆசு