பறவை ஒன்று வானில் பறந்து வட்டமிடுகிறது. அதன் கால்களில் அணைத்துப் போகும் குஞ்சொன்று கீய் கீய்ன்னு குரலிடுகிறது.கூட்டிலேயே விட்டுட்டு வருவதற்கு மனமில்லாததால்,
அது இரைத் தேடிப் போகும்போதெல்லம்
தன்னுடன் அழைத்துப்போகிறது.
இன்னும் இறகு முளைக்காத குஞ்சு அது.
ஈரப் பிசுபிசுப்பும், காயாத உடலை,
அணைத்துப்போகும் தாய்ப்பறவைக்கோ, மெய் வருத்துகிறது.
கீய் கீய்ன்னு குரலிட்டு கத்தும்
குருவிக்கோ, பசி வாட்டுகிறது போல.
தாய்ப் பறவை அறிகிறது அதன் பசியை.
வந்த வழியெல்லாம் ஆற்றாமை பொங்கி வழிகிறது. யாரோ ஒரு யாசகனின்
பிச்சைப் பாத்திரம் ஆறுதலின்றி ஒடுங்குவது போலிருக்கிறது.
பறந்தலையும் பறவையை, வேடுவன் ஒருவன் பூமியிலிருந்து அம்பை குறிப் பார்க்கிறான். மிரண்டு கலங்குகிறது பறவை. குஞ்சு, தாய்ப் பறவையை
அரவணைத்து பதறிப் பற்றுகிறது.
பறவையின் குஞ்சு பசிக்குரல் அலறல் கேட்டு, கீழே அம்பை எறிகிறான் வேடுவன்.
அவனுக்கான பசியை அவன் ஒதுக்கி வைக்கத் தான் வேண்டும். ஒரு மழலை
அழும் குரலில், ஓர் மானுடத்தின் துயரை அவனும் அறிவான்.
தன் குஞ்சை பற்றிச் சென்ற பறவை
வேடுவனுக்கு கூக்குரலிட்டு நன்றி சொல்லி பறந்து போயிற்று.
அவற்றின் திசையை அவை தீர்மானிக்க
வேண்டும். இனியொரு கனவுக்காக.
ஆசு



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *