உரைச் சித்திரத் தொடர் 17: வளையத்திற்குள் நெளியும் ஒரு வாழ்க்கை – கவிஞர் ஆசுதெரு முக்கில், அவள் ஒரு மேளத்தை வைத்துக்கொண்டு தட்டுகிறாள் அவள். கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்து ஓடுவது போல ஓர் ரீங்காரம். அவளின்
மேள ஓசைக்கு ஏற்றாற்போல சிறுமி கையிலே ஓர் இரும்பு வளையத்தைப் பற்றிக் கொண்டு வளைந்து நெளிந்து ஆடுகிறாள்.

மேளத்தை உரசி ஒலிக்கும், அவளின் கைக் கம்புகள் சாட்டையாக விளாசுகின்றன. சிறுமி இரும்பு வளையத்திற்குள் புதைகிறாள். இடுப்பு கீழேயும் மேலேயும் வளையத்தை நகர்த்தும் போதில், ஒரு வாழ்வு கண்ணீர்ச் சொருகி தைக்கிறது.

சிறுமி இடை இடையே பல்டி அடிக்கிறாள்.அவளின்
மேள ஓசை, சிறுமியின் பல்டிக்கு வளைந்து கொடுக்கிறது.
தெருவிலே வருவோர், போவோரின்
கேளிக்கையாக ஒரு வாழ்க்கை நடுத்தெருவில் காட்சியாக விரிகிறது.

அவளின் மேள ஒலி அடங்கி, ஒடுங்குபோது, மீள்வதெல்லாம் எதன் பொருட்டு எனும் கேள்வியினூடே, சிறுமி
விளிம்பு ஒடுங்கிய அலுமினிய தட்டை
கையிலேந்தி வேடிக்கைப் பார்ப்பவர்களிடம் நீட்டுகிறாள்.

அவளின் மேள ஒலி, சிறுமியின் இரும்பு வளையம், அந்தத் தெரு மனிதர்களின் காட்சிப் பொருளாக, அலுமினிய தட்டில்
மீந்த நாணயங்களின் ஓசை, அவலக் குரலாக தழு தழுக்கிறது மானுடத் தழும்புகளாக அந்தத் தெருவை நிறைத்து.

ஆசு