உரைச் சித்திரக் கவிதை 18: கண் தெரியாத பாடல் கலைஞன் – ஆசுஅவன் அந்த அங்காடித் தெருவில்
பிரபல பாடகன்.கண் தெரியாதவன்.
ஆனால், ஞானக்கண் வழியாக, இந்த உலக மக்களை நினைத்துப் பாடுகிறான்.
கையிலே ஒரு தகரப் பெட்டி. அந்தப்பெட்டியை வைத்து தாளம் தப்பாது இசைத்துப் பாடுகிறான்.பாட்டிலே
வாழ்வும் தாழ்வும் சுரம் கசிந்து வரிகளாக
கனிந்து வருகின்றன.
தீயென எழுக மனமே
திசைகள் உன்னிடமே
காதலினால் கசிக மனமே
அன்பெல்லாம் உன்னிடமே
விழிச் சிவக்க சுடர்க மனமே
கனவெல்லாம் உன்னிடமே
அவன் குரல் காற்றில் கரைந்து இன்னிசையாய்ப் பொழிகிறது.
கானக் குரலில் கண்ணீர்ச் சுரந்து உருண்டோடுகிறது அவன் பாடல்.
வருவோர் போவோரின் காதுகளும்,
அவன் பாடிய பாடலின் நம்பிக்கையும் வாழ்க்கையும் அவர்களுக்கும் இருப்பதை உணர்த்துகின்றன.
எட்டுத்திக்கும் நீயே
ஏனிந்த மெளனமே
சாட்டை வீசு
சதியை எதிர்க்கொள்
கோட்டை நமதென்று
கொட்டு முரசே!
அவனுக்கு இந்த உலகத்தின் மனிதர்கள் மீது அக்கறைக்கொண்டு பாடுகிறான்.
உலகத்தின் ஜீவனுக்கெல்லாம், இசையாலும் பாடலாலும் உணர்வைத் தட்டி எழுப்புகிறான்.
அவன் முன் விரித்த துண்டில் சில சல்லிக்காசுகள். மானுடப் பிச்சையாக
மீந்து கிடக்கின்றன.
அந்த அங்காடி தெருவில், அவன் இசைத்த பாடலும், இசையும் இறைந்திருக்கின்றன.
கொள்வாரில்லாத உலகத்தின், மானுடத்தின் கடைசி குரல்போல
தனித்து அழுகிறது அவன் குரல்.
ஆசு