உரைச் சித்திரக் கவிதை 19: இரு கரைகளுக்கு நடுவே ஒரு பயணம் – ஆசுஇந்த நதி இரு கரைகளுக்கு நடுவில் தான் ஓடுகிறது. அதன் பயணம் நீண்ட குறுகிய நெளிவும் சுளிவுமாக சுதாரித்து
கால நியதிக்குள் வரித்து பயணிக்கிறது.

இந்தப் பயணம் முடிவற்றது. மனிதர் போல், வாழ்வின் சிக்கல்கள் நிறைந்தது எனினும், அவற்றின் மேடு பள்ளங்களை
தன்னகத்தே நிறைத்து பயணிக்கிறது.
நீரின் அளவுபோல, அதன் ஆன்மா மனிதத்தின் உயிர்ப்பில் கலந்து பயணிக்க அதனால் மட்டுமே முடிகிறது.

காடு கழனியெல்லாம் பச்சையமிக்க அன்பில் கரைகையில், மானுடத் தடங்களில் பிணைத்து பயணிக்கு நதியோ, தான் வேறில்லை என்பதை உணர்த்துகிறது.

ஒரு பறவை இறகாய் மெல்லியம் கொண்ட அதன் வழிகள்
காலம் தாண்டியும் நீண்டு, மானுட உயிரில் தன்னை அர்ப்பணிக்கிறது.

தான் ஒரு நீரின் சேர்மமானாலும், மூல இரகசியங்கள் அதற்கு மட்டுமே தெரிந்தும் எவரிடமும் சொல்வதில்லை.
வந்தவழியும் போகும் வழியும் திகைத்து நிற்காமல், ஓர் உவகையில் அதன் ஓட்டம்
களைப்பின்றி பயணமெல்லாம், எவ்வுயிர்க்குமானதே.

நாளையின் நாளையில், இன்றைய சுவடுகள் அலைகளாக எழுந்து ஆர்ப்பரித்து நகரும் இந்த நதிக்கோ,
ஒரு கனவு உண்டு. ஒரு திசை உண்டு. ஓர் இலக்கு உண்டு.

நதி இரு கரைகளுக்கு இடையில் தான் ஓடுகிறது எனினும், தோழமையெல்லாம்
கரைகளே அதற்கு.

ஒரு நாளும் தன் பயணத்தை நிறுத்தாமல், தொடர்தலே அதன் முடிவும்
முடிவற்றதுமாக நீளும், அதன் ஆன்மா
இந்த பிரபஞ்சத்தின் இன்னுமொரு சுவாச வெளி.

ஆசு