உரைச் சித்திரக் கவிதை 20: மலையருவின் நீர் வழிப்பாதை – ஆசுகாலம் காலமாய் அந்த மலையருவி வழிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வளவு செங்குத்தான் பாறைகளில்
அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து சலசலத்து கொட்டுகிறது.

அதன் மூலம் எங்கே? அதன் ஊற்று எங்கே? தேடுகையில், வானத்தை தவழும் மேகம் அந்த மலையையும் பிணைத்து தவழ்கிறது. மலைப் பெண்ணின் எச்சிலாக ஊறும் அருவிக்கு தான் எத்துணை காதல் அதன் மீது.

அருவி மலையிலிருந்து கீழே வழியும் போது, நான் இந்த பூமியின் உயிர்களின்
மூச்சு என்கிறது. மலையோ, அதனாலேயே என் நெஞ்சிலிருந்து இறக்கிவிடுகிறேன் என்கிறது.
அருவியின் பிறப்பு மூலாதாரம் மலை எனிலும், காடு கழனிகளின் வனப்புகள்
எல்லாம் அருவியின் தோழமைகளே.

அருவி அதன் பாதையில்,  உருண்டோடும் போது, ஒரு வாழ்வு அதனுள்ளும் அடங்கி இருக்கிறது.ஒரு எளிய விவசாயின்
மகிழ்வின் புன்னகைகளாக, அருவியின்
நுரைகளில் துள்ளுகின்றன.

மலையின் மொழியை அருவி தான் உச்சரிக்கிறது.ஒரு கவிதையாக, பொருள் பொதிந்ததாக இருப்பதை கண்டு, மலையே அதிசயிக்கிறது. மலைப் பெண்ணல்லவா? அதன் வெட்கத்தில் அருவியோ தன்னை இழக்கிறது. இழந்து மீண்டும் உயிர்ப் பெற்று எழுகிறது.

ஒரு காலம் முடிவுறவில்லை என்பதற்கான சாட்சியாக மலை மெளனித்து நிற்கிறது. மலையின் துடிப்பை உள்வாங்கிய அருவியோ,
நான் உன்னில் கரைந்து வனமெங்கும்
செழிக்கிறேன் என்கிறது.

ஆறும் நீருமான வழிகள் எல்லாம், அந்த அருவியின் கால் தடங்களில், நிரம்பி வழியும் மனதின் நிறைவாக ஓடிக் கொண்டிருக்கும், சில மணித்துளிகளின்
நம்பிக்கை தளிரில், அதனதன்பாதையை அவையே தேர்ந்தெடுக்கின்றன. இந்த
மலை அருவியும், பிறகொரு காலத்தின்
பொறுப்பை உணர்த்தி, அதன் இடையறாது அதற்கான வழியை தேர்ந்தெடுத்து நகர்வதை, அந்த மலையும் பார்த்து கொண்டுதானிருக்கிறது.

ஆசு