உரைச் சித்திரக் கவிதை 21: நினைவுகளில் சல சலக்கும் கண்ணீர் – ஆசுகண்ணீர் எல்லா காலத்திலேயும்
ஊறிக் கொண்டேயிருக்கிறது. அதன் மூல ஊற்று எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அன்பென்றாலும், ஆற்றாமையென்றாலும் ஓடி வந்து
எதையாவது பேசிக் கொண்டே ஊறுகிறது.

இந்த வாழ்க்கை கொடுத்த மிக அற்புத கொடை கண்ணீரைத் தான் சொல்ல வேண்டும். ஒருவர் தேம்பி அழுவதை உற்றுப் பாருங்கள். எவ்வளவோ சொல்வன்மை உள்ளவர் அவர். இந்த உலகத்தின் உள்ளங்கவர் அன்பை பெற்றவர் அவர். எத்தனையோ மாளிகைகளுக்கு உரிமை உள்ளவர் அவர். அவர் ஏன்? தேம்பி அழ வேண்டும்.
அவரின் அழுகையில் தான், முழுமை அடைகிறார். வாழ்வின் தோழமையுடன்
கலத்தலின் தருணம் அது.

ஆனால், மழலையின் அழுகை மட்டும்,
கண்ணீரை நீங்கியே இருக்கிறது. அதில்
புன்னகைகள் வாரி இறைத்து கவிதைகளின் ஊற்றாகிறது. நினைவு தப்பி செல்லும், கடந்ததையோ நிகழ்வதையோ பொருட்படுத்தாமல்,
அன்பில் சல சலக்கும் பிரவாகம் அது.

கண்ணீர் ஒரு காதலி போன்றதுதான். அதில் அவள் மனம் துள்ளுவதை பார்க்க முடிகிறது. அவளின் இதயத்துடிப்பு பிரபஞ்சத்தில் அதிர்ந்து, மானுடத்தின்
பேரன்பை உச்சரிக்கிறது.

மனித வாழ்க்கை முழுமையும்
கண்ணீர்த்துளிகள் பேசுகின்றன.
பேசாத தருணங்களில் இழப்பின் கணங்காளின்றன.

சல சலத்து ஓடும் நதியாக.
கண்ணீர்என்றுமே கால பிரளயமாக.

ஆசு