உரைச் சித்திரக் கவிதை 24: குயில் பாட்டின் பரி பாஷைகள் – ஆசு



வசந்த காலம் வந்துவிட்டது.
குயில்கள் பாடுகின்றன. அதன் பாடல்கள் வான் முழுவதும் எதிரொலிக்கின்றன.

சங்கப் புலவன் போல், தொகையறாவில்
தொடங்கி, முடிப்பில் ஏதோ செய்தியை சொல்லிவிட்டு முடிக்கிறது. பெண் குயில் தான் பாடுகிறது. பாடிப் பாடி தொண்டை கமறல் எடுக்கிறது. மரம் கிளை இலை பூக்களுக்கு கூட அதன் ஆதங்கம் புரியும்போல இருக்கிறது.
ஆனால், இந்த ஆண் குயிலுக்கு தான் புரிய மாட்டேன்கிறது என்பதாய் வருத்தம்
கொள்கிறது பெண் குயில்.

பெண்ணே! நிலம் பெண்ணே! இயற்கை,
பெண்ணே! பாற்கடல், உணர்வுகள் பிழிந்த கவிச் சாறு அவள். அவள் என்பது
மானுடம் மட்டுமில்லை. பெண் குயிலும்
மானுடத்தின் இன்னுமொரு தோழமையாக அதன் பாடலை பறை சாற்றுகிறது.

ஆண் குயில் எங்கோ இரை தேட சென்றிருக்கும். பெண் குயில் கூவி அதை அழைக்கிறது. அதன் பாடல்
வான் முழுக்க எதிரொலித்து, ஏதோ சொல்ல துடிக்கிறது. அதன் பரிபாஷை
ஆற்றொண்ணா பசலையாக, துயர் மிகுந்து கரைகிறது.

வசந்த காலத்தின் பூப்பெல்லாம், அவற்றின் கூடலின்,
இச்சையும் தாகிப்பும் யார் மீது முறையிடக்கூடும்?.ஆணுக்கும் பெண்ணுக்குமான மறைந்திருக்கும்
உணர்வுகள், இந்த வசந்த காலம் ஏன்?
உசுப்பிவிடுகிறது.

பெண் குயிலின் ஆண் குயிலிடம், சொல்லத் துடிப்பது என்னவாயிருக்கும்.
ஊடல் நிகழ்த்தி, கூடலில் கலப்பது தான்,
பருவ நாடகம் எனில்,

அதன் பரிபாஷையை உணர்ந்து கொள்ளும் ஆண் குயிலுக்கு தான்,
காமம் எனும் அமிர்தம் பருக கிடைக்கிறது. பெண் என்ற பாற்கடல்
அமிர்த பாகுவின் தித்திப்பு. பாடலோசையாக உலகமெல்லாம் கரைந்து, தன்னை மீட்டு, ஆனந்த களிப்பையே அது சொல்ல துடிப்பதும்,
அதன் பாடலின் மூலமே.

ஆசு