உரைச் சித்திரக் கவிதை 25: நீர் விளையாட்டில் உள்ளிழுக்கும் கால்கள் – ஆசுஅதுவொரு சதுர கிணறு. பெரிய சதுர நிலா போல காட்சியளிக்கிறது. அந்த
கரும் பச்சை நீரில் பாசிகள் ஓரம் ஒண்டிக் கிடக்கின்றன. வெயிலை உள்வாங்கி நீர் குடிக்கிறது. நீரை உண்டு வெயில் தாகம் தீர்க்கிறது.

வழிப்போக்கர்கள் அந்த கிணற்றில் நீர் அருந்துவதில்லை. மாறாக, குளித்து அழுக்கை நீக்கி மனதை சுத்தப்படுத்துகிறார்கள். விடலை பிள்ளைகள் கரை மீது நின்று கர்ணம் அடிக்கிறார்கள். அவர்கள் மகிழ்வை எண்ணி நீருக்கும் ஆனந்தம் தான்.

விடலைகள்,சதுரத்தை சுற்றிச் சுற்றி நீந்துகிறார்கள். ஓரி போடுகிறார்கள்.
ஒருவன் அலை மீது தவழ்கிறான். இன்னொருவன் அடி ஆழம் சென்று மண்ணை எடுக்க முயல்கிறான். இந்த விடலை பிள்ளைகளை, பெண் பிள்ளைகளும் பார்த்து கும்மாளிக்கிறார்கள். அவர்களும் தாவணியை கீழ்ப் பாய்ச்சிக் கட்டி கிணற்றுக்குள் இறங்கி நீந்துகிறார்கள்.

ஒருவர் இன்னொருவரின் கால்களை உள் இழுத்து மூச்சு திணற செய்கிறார்கள். நீர் அவர்கள் மூச்சு முட்ட
தளும்புகிறது.

விடலைகளின் நீர் விளையாட்டில், நீர் அலைகள் வட்டமாகின்றன. அந்த வட்டத்திற்குள் அவர்கள் சிறு பிறைகள் போல தோன்றுகிறார்கள். ஒவ்வொருவரின் பிறையிலும் ஆயிரம்
அதிசய கண்கள் முளைக்கின்றன.

விடலைகளின் கால்கள் உள்ளிழுக்க,
அவர்களின் மூச்சு குமிழ்கள் மேலெழுந்து உடைகின்றன.

நீரின் அடி ஆழத்தில் மண்ணை
எடுத்து வெளியேறிவன்,வெற்றியின் திளைப்பில் கெக்கலிக்கிறான்.

அந்த சதுர கிணறின் உள்ளமெல்லாம்,
விடலைகளின் மகிழ்வை கரைத்து,
அன்பின் தளும்புதல் நிகழ்த்துகிறது.

விடலைகளின் பேச்சும் சிரிப்பும் வானம் எதிரொலித்து, அவர்களின் முதல் விழிப்பை உருவாக்கும் தருணம் அது.

ஆசு