உரைச் சித்திரக் கவிதை 26: தேநீர் கோப்பையுடன் ஒரு உரையாடல் – ஆசுதேநீர் கோப்பை, தேநீர் அருந்துபவருடன் உரையாடத் தான் செய்கிறது. தேநீர் நிரம்பி வழியும் அந்த கணத்தை, தேநீர் கோப்பை நினைத்து பார்க்கிறது. நுரை தளும்பும், அந்தத் தருணம் மகிழ்ச்சியின்
எல்லைவரை செல்கிறது.

தேநீர் பருகுபவன் அதனுடன் பேச எண்ணுகிறான். மனைவி மக்கள் காதலன் காதலி நட்பு தோழமை, அனைவரிடமும் பேசியாயிற்று. அவர்களுடனான உரையாடலில், வாழ்க்கை ஒரு குகை இருளின் பயணமாகத் தான் அவனுக்கு இருந்திருக்கிறது. சில வேளை புன்னகைகள் பூத்தாலும், அந்த இருளின்
மிகச் சிறிய சுடர் ஒன்றின் கவிதையென
ஒளிர்ந்தாலும், மிக மிகச் சிறிய சிறு துளி அது.

தேநீர் நிரம்பிய கோப்பை மனிதருடன்
உரையாடுகையில், அதன் தனிமையை
தவிர்த்து, மகிழ்வதாய் சொல்கிறது.ஒரு காலத்தில் தவறவிட்ட மனித அன்பை மீண்டும் பருகத் தருவதாய் சொல்கிறது.

மனிதன் வெறுமனே தேநீரை பருகவில்லை. அந்த கோப்பைக்குள் ஆயிரம் கண்ணீர்த் துளிகள்,கனவுகளின் மிச்சங்கள், இலக்குகளின் புதிய திசைகள்,
அவன் கானல்களாய் அந்த கோப்பையில் வழிவதை காண்கிறான்.

தேநீரின் ஆவி, பருகும் மனிதனின்
கோப்பைக்கும் அவனுக்குமான,
அந்தரங்கத்தை சொல்லி, அவன் வெறுமையை நிறைவாக்குகிறது.

உரையாடும் ஒவ்வொரு மனிதரிலும்,
தேநீர்க் கோப்பைகள் கடலென நிறைந்திருக்கின்றன.
இரத்தம் பீறிடும் இதயம் ஒன்று துடித்திருப்பது, தேநீர் அருந்துபவர்கள்
அனைவருமே அறிந்திருக்கின்றனர்.

ஆசு