உரைச் சித்திரக் கவிதை 28: சாலையை குறுக்காக கடப்பவர் – ஆசுஒருவர் சாலையை குறுக்காக கடக்கும்போது, சற்று ஒதுங்கிப் போங்கள். அவர் வயதானராக இருக்கலாம். கையிலே ஊன்றுகோல் வைத்துக்கொண்டு, குறுக்காக கடக்கும்
அவரைப் பார்க்கையில் …. அவர் தேகச் சுருக்கங்களில் கண்ணீர்த் துளிகள் உறைந்திருக்கும்.

ஒரு துளி காதலை காதலினால் செய்ததால், அவர் இளமையின் ஞாபக வடுவாக இருக்கும். இன்னொரு துளி
வாழ்வை வாழ்வாக எண்ணி, வாழ்வை
பின்னகர்த்திய நாட்களாக இருக்கும்.
இன்னொரு துளி மூதாதையரின் நினைவுகள் மூண்டு எரியும் பிழம்பில்,
தணிந்த சாம்பலாக இருக்கும்.

துளிகளாக சேமித்து, துயரங்கள் நிரம்பிய அநுபவங்கள் தோள்பற்றி சாலையின் குறுக்காகக் கடக்கும் முதியவர் அந்த சாலையின் விளிம்பைத் தொடும்வரை, சற்றே ஒதுங்கி இருங்கள்.

அவர் கால்கள் இடறினால், அவரின் கைப்பிடித்து சாலையின் அந்தப் பக்கம்வரை கொண்டுபோய் சேருங்கள்.
அவரின் உடல் நடுங்குகிறது. உள்ளம் நிலைகுலைய செய்கிறது.ஊன்றுகோல் அவரின் பிடிக்கு ஈடு கொடுக்காமல் தள்ளாடுகிறது.

கவனமாக பாருங்கள். அவர் சாலையை கடந்துவிட்ட பின்னரும், அவர் கடந்துவிட்டாரா என்பதை அவதானியுங்கள்.

இருப்பினும்,
அவர் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம்
சாலைகள் குறுக்கிடத்தான் செய்யும்.
அந்த சாலைகளை அவர் கடந்து தான் செல்ல வேண்டும். முற்றுபெறாத பயணத்தில், சாலைகள் முன்னே நகருகையில், பின்னே அதனூடே எல்லோரும் சென்று கொண்டிருக்கிறோம்.

ஆசு