உரைச் சித்திரத் தொடர் 3: நீர் வரிகள் – கவிஞர் ஆசுநீரை விழுங்கிக் கொண்டிருக்கிறது மீன். மீனை விழுங்கிக் கொண்டிருக்கிறது நீர்ப்பாம்பு. அலை மேலெழுந்து பார்க்கிறது, அந்த மீனை காப்பாற்றத் தான், அலைமேல் அலை அடிக்கிறது.
ஒரு துள்ளலில் கவ்வும் நீர்ப்பாம்புக்கு மீனின் பசி அறியுமா?.
ஒருவன் நீர் நிலையின் கரையிலிருந்து பார்க்கிறான். மீனை காப்பாற்றுவது தான் அவனின் எண்ணம். நீர்ப்பாம்பு விடுமா?.அதற்கும் பசியென்று அது மட்டுமே அறியும். பசித்துக் கிடப்பவர்களில் கீழோர் மேலோர் உண்டா?. முதலில் மீனை அதனின்று விடுவிக்க நினைத்தான்.
மீன் சொன்னது, என்னைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்.
நீர்ப்பாம்பு சொன்னது, என்னிலிருந்து எப்படி மீனை காப்பாற்ற முடியும்.
நீர் தான் எவ்வுயிர்க்கும் சமன். வறண்ட நீர் நிலையில், வாழ்வதின் சக்தியற்று போகையில், நீரின் கடைசித் துளி கண்ணீராகிறது.
மீன்கள் நீரைக் கண்டுத் துள்ளுகின்றன.
நீர்ப்பாம்புகள் அவற்றை விழுங்குகின்றன. மனிதன் அவன் கண்ணீரை அவனே துடைக்க முடியாதபோது,எவ்வுயிர்க்குமான துயரங்களில், அவன் எப்படி பங்கேற்க முடியும்.
நீர் உயிர்த் தண்ணீர் வார்க்கும்.
உயிர் எனும் தோழமையின் பிரபஞ்சத்தை அணைத்துச் செல்லும்,
நீரைத் தவிர வேறெதுவாக இருக்கும்.
ஆசு