அந்த அறை உத்தரத்தில் மின் விசிறி ஒன்று தொங்குகிறது. சுற்றும் போதெல்லாம் பேயாட்டம் போடுகிறது. அதன் சுழற்சிக்கு ஏற்ப ஆட்டம் கூடுகிறது. அவன் அந்த மின் விசிறிக்கு கீழே தான் கட்டிலில் படுத்திருக்கிறான்.
விசிறியின் சுழற்சி காற்றில், புழுக்கம் வியர்வை ஆற்றுகிறது. உள்ளத்தின் அயர்ச்சியை தணிக்க, அந்த காற்றுக்கு தான், மெல்லிதய அன்பொன்று துளிர்க்கக் கூடும்.
அவனை சூழ்ந்திருக்கும் நட்பெல்லாம்.
கள்ளத்தின் கூர்கத்தி கொண்0 இறுக்குகையில்,
நெஞ்சம் அணைத்து நேசிக்கும் அந்த மின் விசிறி காற்றுக்கு, பிறிதொன்றின்
கைமாறாக என்ன செய்ய முடியும்.
அந்த அறை முழுதும், மணக்கும் காதலின் வாசனையாக வாரி இறைக்கும் அந்த காற்றோ, மனிதத்தின் பேரன்பை கடத்துகிறது. அவன் காதலியை கைத்தலம் பற்றும் கனாவின்
இன்னுமோர் மெல்லிதய துளிர்ப்பு.
சன்னல் காட்சியின் தொலைதூர காடொன்று, அந்த அறையை முத்தமிட்டு,
மின் விசிறியின் காற்றில் இளைப்பாறுகிறது.
நாளை நகர்த்தும் மணித்துளிகள். விசிறிக் காற்றின் இதத்தில், தனக்குத்தானே புத்துயிர் பெறுகிறது.
அந்த அறை, சன்னல், கட்டில் அவனின்
உறவுகள் எனிலும், விசிறியும் காற்றுமே,
மூச்சின் அசைவு. ஒரு பொழுதின் முகம்.
உறக்கம் மேலிடுகையிலும், உள்ளத்தின்
பரிவர்த்தனைகள் அவையே.
உத்தரத்தில் தொங்கும் அந்த மின் விசிறியை அண்ணாந்து பார்த்தான்.
நாளை மலரும் மொட்டாக, காற்று அவிழ்ந்து கனியும் குரலில் அவனுடன் பேசிற்று. ஒரு தோழனின் அன்போடு.
ஆசு

