நிலைக் கண்ணாடியில் முகங்கள் அழகாய் இருக்கின்றன. அவளின் நேர்வகிடும் பக்கவாட்டில் புரளும் கூந்தலும், நெற்றித் திலகமும், கண்ணாடியில் பார்க்கும்போது, ஒரு வனம் அசைந்து புன்னகைக்கிறது.
ஒவ்வொருவரையும் காட்டும் கண்ணாடி,
கவிதை போல் சுண்டி ஈர்க்கும் அதற்கு தான் உணர்வின் தெளிவை மகிழ்வை
கொப்பளிக்கின்றன. அதனுடன் பேசுகிறாள். தன்னைத் தானே ரசிக்கும்
மனதின் தும்பிகள் அவளை சீண்டி பறக்கின்றன. அதன் இறகு கிழிந்துவிடுவது போலிருக்கிறது.
இந்த கண்ணாடி முகம் காட்டுகிறது.
முகத்திற்குள் மறைந்திருக்கும் மனம் காட்டுகிறது.
ரசமுள்ள கண்ணாடி ஓர் ஆண் மகன் தான்.எத்தனை முகங்கள், எத்தனை பாவங்கள் அத்தனையும் எதிர்கொண்டு அவன் எல்லோர்க்குமாய் வெளிப்படுத்துகிறான். தாய் தந்தை காதலன் காதலி, கண்ணீர், புன்னகை எல்லாமும் தனக்குள் புதைத்து, தன்முன் தோன்றுபவரை தாங்குகிறான்.
கண்ணாடியான ஆண், தனக்கு எதிரில் உள்ள அவளிடம் பேசுகிறான். பேசிப் பேசி வாழ்வின் முடிவுறாத பயணத்தை, சில துளிகளில் கரைத்து, அந்த கணத்தில் அவனும் அவளும் கூடிக் கலந்து அன்பென்ற பெருஞ்சுடரை ஏற்றுகின்றனர்.
கண்ணாடிக்குள் சுடரும் தீபத்தில்,
இரு முகங்கள் தெரிகின்றன். ஒன்று காலம், இன்னொன்று வாழ்வு. அவனும்
அவளுக்குமாய் இடையில் கண்ணாடி எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கிறது.

