உரைச் சித்திரக் கவிதை 34: பாலத்தின் கீழே – ஆசுபாலம் கீழே மக்கள் வசிக்கின்றனர். காற்றைப் போல் சுதந்திரமாக. ஆனால் கண்ணீரின் வலியாக.

கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் உள்ளனர். இவர்கள் யாருக்குமே துயரம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. உறவு பிரிவு எதுவும் நிகழ்வதில்லை.

அவர்கள் இந்த தேசத்தின் கடைசி நம்பிக்கைகள். அவர்கள் அரசு ஆவணத்தில் பெயர் இல்லை. இந்த பூமி
எவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறது. கால வியர்வைக்குள்
உலர்ந்து அடையாளமில்லாமல் ஆகும்
கானல் அவர்கள்.

அவர்கள் குப்பைகள் சேகரிக்கின்றனர்.
ஒவ்வொரு குப்பையிலும் அவர்களின்
வயிறுகளின் பசிப் புழுக்கள் நெளிகின்றன. ஒவ்வொரு புழுவும் இந்த தேசத்தின் அவமானமாக நெளிகிறது.

பாலத்தின் மீது யார் யாரோ செல்கின்றனர். பாசாங்கு, பம்மாத்து
ஜோடனை ஒப்பனைகளால், நெடிதுயர்ர்ந்து நிமிர்ந்து செல்லும் அவர்களை பார்க்கையில், இந்த தேசம்
வெட்கி தலை குனிந்து நிற்கிறது.

பாலத்தின் கீழே அந்த ஜீவன்கள், வாழ்க்கை எனும் அம்சங்களை அவர்களின் கனவுகளின் காட்சிகளிலும்
காணாது, ஆண்டு பலவாயினும்,
நிழற் படங்களாக உறையும்
இவ்வாறாய் ஒரு வாழ்க்கை.

அந்தப் பாலம், இரண்டு சாலையை இணைக்கிறது. மனிதர்களை இணைக்கிறது. வாகனங்களை சுமக்கிறது. காலைச் சூரியனையும் அந்தியைும் சந்திக்கிறது. இருவு பகல் என்று தோழமையோடு கைக்கோர்க்கிறது.

அந்தப் பாலத்தின் கீழுள்ள மனிதர்களின்
வாழ்வு, சீற்றத்தின் எல்லா இழிவுகளும்
அவர்களுக்கென்று விதிக்கப்பட்டது என்று சுதந்திரத்தின் மூச்சும் திணறத் தான் செய்கிறது.

ஆசு