உரைச் சித்திரக் கவிதை 36: சிலைகளின் மெளனம் – ஆசுசிலைகள் மெளனமாக இருக்கின்றன. அவை முன்னொரு காலத்தில் உயிரோடு உலவியவை. மனிதர் மனிதரோடு பேசியவை. உயிர்த்தளும்பும் காலத்தின்
கண்ணீராக நிரம்பியவை. இன்றோ
மெளனமாகிவிட்டன.

பூமித்தாயின் வயிறுகளில், கருவாகி உயிர்க்கொண்டதெல்லாம், கருத்தின் வேர்களாய் நீண்டு, ஆழத்தின் விரிவாய்
பெருமிதங்களாய் சிலைகள்.

புனைவின் மிச்சத்தில், கைத்தொழும் கடவுளர்கள் சிலைகளாய் காட்சியளிக்கின்றனர். அவர் மனிதர் போலவே எவ்வுயிர்க்குமான அன்பின் வடிவிலே திளைத்து, அன்பென்ற மூச்சில்
கலந்து திளைக்கும் அரிதினும்
பெரியதாய் ஆட்கொள்பவர் எனினும்
சிலைகளாய் ஏன்? ஆனார்.

அன்றொரு நாள் ஆசனாக, தலைவனாக
வழி நடத்தியவர், இன்றோ சிலைகளின் வடிவில். அவரின் உரையும் கருத்தும் கோட்பாடும், காற்றினில் கரையாமல்
சிலையாக திரண்டிருக்கிறது. காலச் சீற்றத்தில், அழிந்து போகாமல் கம்பீரமாக உருக்கொள்ளும் அறிவுச்சுடர்
சிலைகளில் ஒளிர்கிறது.

சிலைகள் மெளனமில்லை. அவற்றின்
வாழ்ந்த காலத்தின் நினைவுகள் இப்போதும் பேசுகின்றன வாழ்வின் எச்சங்கள் அழுக்காய்ப் புடைத்து.

சிலைகளின் வழியே, மனம் படைத்த மனிதர் வணங்குவது, வெளியே பேச முடியாததை தனக்கும் அவற்றிற்குமாய்
பேசிப் பேசி, வாழும் காலத்தின் மெளனத்தை உடைப்பதற்கே.

ஆசு