உரைச் சித்திரக் கவிதை 37: சுமையெனும் மலர்கள் – ஆசுசுமையெனும் மலர்கள்
*************************

குரு கேட்கிறார், “இந்த இடம் எப்படி?”

சீடர்கள் மெளனமாக இருந்தனர்.

மறுபடியும் குரு கேட்கிறார். “இந்த இடம் எப்படி?”

சீடர்கள் இப்போது தலையசைத்தனர். அவர்கள் தலையசைப்பு ஏதோ சொல்ல வருகின்றனர் என்று குருவுக்கு தோன்றவே, இந்த இடம் உங்களுக்கு பிடிக்கவில்லையா என்றார்.

சீடர்கள்,”சுற்றிலும் முள் காடாக இருக்கிறது. எப்படி உறங்குவது, புழுங்குவது”என்றனர்.குரு முட்கள் நிறைந்த பகுதியை பார்த்தார்.
மனதை பின் நோக்கி நகர்த்தினார்.

“இந்த வாழ்க்கை வலி நிறைந்தது, இதைக் கடந்து தான் ஒவ்வொரு நாளும் பயணிக்கிறோம். இந்த முள் செடிகளை அகற்றலாம், அதற்கு முன் உங்கள் வாழ்வின் சுமையை இறக்கி வையுங்கள்” என்றார் குரு.

சீடர்கள் ஒவ்வொருவரும் பிரச்னைகள் நிரம்பிய வாழ்வின் சுமையை இறக்கி வைக்க முயற்சித்தனர். மனம் கனத்தது.
மீண்டும் ஒரு பிரச்னை கூடுவது போலிருந்தது.

குரு கேட்டார், “வாழ்வின் சுமையை இறக்கி வைத்துவிட்டீர்களா?”.

“சீடர்கள் முடியவில்லை குருவே” என்றனர்.

“பிரச்னைகள் நிரம்பியவை எல்லாம் முட்காடு தான். மனதிலிருந்து அந்த சுமையை இறக்காதவரை வலிகள் தான் மிஞ்சும்” என்றார் குரு.

மீண்டும் குரு, “இந்த இடம் முட்செடிகள் நிறைந்தவை. இந்த முட்களுக்கும் அழகான மலர்கள் மலர்ந்திருக்கின்றன.
இந்த அற்புத மலரை பாதுகாக்கவே
முட்கள்” என்றார்.

அப்போது சீடர்கள் மனதில், பிரச்னைகளும் சுமைகளும் மலர்களாய்
மலர்ந்ததை கண்டு புன்னகைகளால்
வாரி இறைத்தனர்.

#ஆசு