உரைச் சித்திரக் கவிதை 38: வட்டத்தை மீறிய மணித்துளிகள் – ஆசு



கடிகார வட்டத்துக்குள் மூன்று முட்கள். ஒரே பாதை ஒரே நகர்வு. அதற்குள் நேரம் என்கிற எண்ணற்ற சிறகுகள் படபடக்கின்றன.

இந்த மூன்று முட்களே
இந்த மனிதர்களை பதற்றமடையச் செய்கின்றன. பணி செய்பவன், கூலியாளன்,பாடகன், நடிகன், சொற்பொழிவாளன், நெடுந்தூரம் பயணிப்பவன் எல்லோருமே
வட்டத்திற்குள் இயங்கும் முட்களை கண்டு அச்சமடைகிறார்கள்.எண்கள் வட்டத்திற்குள் சுருங்கி, இந்த முட்களுக்கு
கட்டுப்படுகின்றன.

இந்த வட்டம் ஒரு பிரபஞ்சம், அதற்குள் கடல், மலை, தீவு, காடு,நதிகள் இருக்கின்றன. எல்லா உயிர்களும் இயங்குகின்றன. மகிழ்வு புன்னகை பிரச்னைகள் என்று நிரம்பித் தளும்புகின்றன. சூரியன் நிலவு நட்சத்திரங்கள் என கோள்களினால் அலங்கரித்து, அழகு மிளிர்கிறது.

கடிகார வட்டம் தாண்டாத முட்கள் சுற்றிச் சுற்றி நேரங்களை நகர்த்தும் அவற்றிற்கு தான். கால தேச வர்த்தக பரிமாற்றத்தின்
அற்புதம் நிகழ்த்துகிறது.

விடியலும் அந்தியும் ஒன்று கூடுமிடம்,
இந்த வட்டம் எனினும், புயல் மழை, நில நடுக்கங்களினால், தகர்ந்துவிடும் இந்த பூமியின் உருக்குலைவை, கடிகார வட்டமும் அவற்றின் முட்கள் என்ன செய்ய முடியும். ஆனால், நேரங்களை கடத்துவதின் மூலம், முழுமையான சிதைவிலிருந்து காப்பாற்றுவதற்கு,
வட்டத்தை மீறிய மணித்துளிகள்
மிக முக்கியமானவை. அதீ அற்புத கணம்
அவை.

ஆசு