உரைச் சித்திரக் கவிதை 39: நிழலை ஆட்டுவிப்பவன் – ஆசுநிழலை ஆட்டுவிக்க முடியுமா.
அவன் திரையில் விரல் வித்தையில்
ஆட்டுவிக்கிறான். ஒளிச் சேர்மானத்தில்
விரல்களை மடக்கி ஒடுக்கி பிம்பங்களை
உருவாக்குகிறான்.

“தானே தன தான
தந்தனத்தோம்
எனச் சொல்லியே
வருகிறான் கோமாளி
நாட்டுக்கு சேவை செய்ய
வருகிறான் நாகரிக கோமாளி”

அவன் கைவிரலில் நாகரிக
கோமாளியை உருவாக்குகிறான். கோமாளியின் சிரிப்பொலியில், பார்வையாளர்கள் கும்மாளிக்கின்றனர்.
ஆட்டுவிப்பவனின் முகபாவம்,
கோமாளியின் முகத்தில் பிரதிபலிக்கிறது. உரையாடல் காலத்தின் அறப் பிறழ்வுகள் குமைந்து உருகுகின்றன.

“காதல் பெண்ணே!
கண்ணீர் உனக்கு ஆகாது
ஆதல் கண்டே
காதல் செய்வீர்
காதல் பெண்ணே!”

திரையில் காதலர்கள் பாடுகின்றனர்.
விரலினால் நிழலை ஆட்டுவிப்பவன்
காதலர்களாகவே மாறுகிறான். உணர்வுகள் கட்டிப்போட்டு, அன்பெனும்
கடலில் காதலர்களை கரைச் சேர்க்கும்
தோணியாகிறான்.

மான் மயில் பறவைகள் என அவன் விரல்களின் பிம்பம் திரையில் சிறகு தளிர்த்து பறக்கின்றன. திரைக்குப் பின்னால், அவன் கை விரல்கள் முகம்
குரல், வாழ்வின் சாயல்களும் சமிக்ஞைகளும் அவன் கைக்கொண்டு
பிம்பங்களை தன் வசப்படுத்துகிறான்.

“ஈடில்லா மனிதப் பிறவி
இழிநிலை அடைந்ததேனோ!
கேவல வாழ்வகற்றி
இன்பந்தன்னை பெறுவது எக்காலம்?”

நிழல் மனிதர்கள் அவன் கைவிரல் அசைவில் பாடுகின்றனர். அவன் நிழல் பிம்பங்களில் கரையும் பார்வையாளர்கள்
நிழலாய் மாறி, அசலும் போலியும் எவையென அறியாமல் திகைக்கின்றனர்.

காலமும் நிழலை ஆட்டுவிப்பவனுக்கே
துணைபோகிறது.ஒரு நாள் நிழலும்
நிசமென உருவாகையில், ஆட்டுவிப்பவன் கைகளை நிழல் பதம் பார்த்துவிடும்.

ஆசு