உரைச் சித்திரக் கவிதை 40: காகிதத்தில் ஒரு மனம் – ஆசுகாகிதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறான் அவன். எழுதி மீளாத ஒரு வாழ்வை எழுதுகிறான்.
இந்த வாழ்வின் கடைசி எல்லைவரை
அவன் அடைய வேண்டும். ஆனால், காகிதம் கனக்கிறது. கண்ணீர் மிகும் காலத் துளிகளை கன கச்சிதமாக எழுதுகிறான்.

காகிதம் வெறும் காகிதமில்லை என்று அவன் அறிவான். அவன் மனதை அதில் ஒரு குழந்தையைபோல் இறக்கி வைக்கிறான். எச்சிலால் களங்கப்படாத
குழந்தையின் புன்னகைகள் பூக்களாக
மலர்கின்றன.

இந்த காகிதம் முன்புவரை வெண்மையாக இருந்தது. எழுத்தின் துளிகள் இறங்கும்போது, மாபெரும் கடல் காடு மலை ஊர்கள் என அதிலே குவிந்து கிடக்கின்றன. மனிதர் பறப்பன ஊர்வன எல்லாமும் உயிர்ப்பெற்று உலவுகின்றன.

காகிதம் காகிதமில்லை
கருத்தின் பாதையில்,
நடந்தேகும் சொற்கள்
கூடவே வரும்
தேற்றுதல் சொல்லும்
தாய்மையாக
அந்தக் கணங்கள்

எழுத்தெல்லாம் உறவுகள். சொல்லெல்லாம் மானுடம். எங்கே வேரிட்டாலும், பூவாக பிஞ்சாக கனியாக,
அன்பெனும் நெஞ்சில் கலந்து கரைகிறது.

எழுதிச் செல்லும் கைகளில்,
மானுட விதியை தகர்க்கும் அந்த தருணம் எல்லோர்க்குமான விடியலாய்
ஒளிரும்.

காகிதத்தில் கனிந்த மனம் சிறகுகளாய்
பறக்கிறது. காலச் சுமையை சுமக்கும்,கவிதையின் குரலாக.

ஆசு