உரைச் சித்திரக் கவிதை 42: குரங்குகள் ஏன்? கேள்வி கேட்பதில்லை – ஆசுமலைப்பாதையில், அவன்
மூட்டை முடிச்சுகளுன் படியேறிக் கொண்டிருந்தான். மூட்டையில் அன்றைய தேவைக்கான உணவும் தண்ணீரும்
கையிலே ஒரு சிறிய கொம்பும் வைத்திருந்தான். குரங்குகள் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தன.

குரங்குகள் பசித்து சோர்வுடன் காணப்பட்டன. அவன் மூட்டையை பறிக்க
வேண்டுமென குரங்குகள் எண்ணின.
அவன் மூட்டையை கைப்பற்ற குரங்குகள் யோசனையிட்டன.
ஆனால், அவன் கையிலுள்ள கொம்பை
ஒவ்வொரு முறையும் தட்டத்தட்ட, குரங்குகள் பயந்தன. முகச் சீற்றத்தில்
கோபத்தை வெளிப்படுத்தினாலும், அவன் கொம்பைக் காட்டி எச்சரிக்கையில், குரங்குகள் அடங்கித்தான் போகின்றன.

அவன் மூட்டையை மறைந்திருந்துதான்
பறிக்க வேண்டும் என்று ஒரு குரங்கு யோசனை சொன்னது. அது சொன்னவாறே குரங்குகள் மறைந்து கொண்டு அவனை பின் தொடர்ந்து நோட்டமிட்டன.
அவன் அப்பாடியென நிம்மதி பெருமூச்சு விட்டு, படியேறிக்கொண்டிருந்தான்.

ஏறாத மலை மீது
ஏற்றிவிடும் ஈசனே
கூடாத வழியினை
கூட்டிவிடும் ஈசனே
ஏறு ஏறு என
ஏனிந்த பிழைப்போ

அவன் பாடல் மலைப் பாறையில் எதிரொலிக்க, ஏகாந்தமாய் போய்க் கொண்டிருந்தான். மூட்டையை கைச் சோர, ஒரு கையில் பற்றிக்கொண்டு நடக்கையில், ஒளிந்து மறைந்திருந்த
ஒரு குரங்கு, மூட்டையை சட்டென்று பறித்துக்கொண்டு ஓடிவிட்டது.

அப்போதும் மூட்டை பறிபோனதுபற்றி கவலைப்படாமல், அவன் ஏகாந்தமாய்
பாடல் பாடியும் ஆடியும் படியேறினான்.

குரங்குகள் மூட்டையை பிரித்துப் பார்த்தன.உணவை அவனே உண்டிருந்தான். பாட்டிலில் கொஞ்சம் நீரும், துணிமணிகளும் இருந்தன.
இதற்காகவா அவன் ஒரு கொம்பை
வைத்து மிரட்டினான் குரங்குகள் யோசனையிட்டன.

குரங்குகள் ஒன்று சேர்ந்து படியேற விடாமல் அவனை வழிமறித்தன. மீண்டும் மலையிலிருந்து
கீழே இறங்கி சம தளத்திற்கு வந்தான்.
மேலே பார்த்தான். குரங்குகள் அவனை
கோபப் பார்வையுடன் பார்த்தன.

கீழே இறங்கி வந்தேன்
மேலொரு பொருள் தேடி
மேலே தேடிப் போனேன்
கீழொரு பொருள் காண

அவன் பாடலை கேட்டு குரங்குகள் நகைத்தன. அப்போதும் அவன் விளாசிய
கொம்பு கையில் இருந்தது.

ஆசு