உரைச் சித்திரக் கவிதை 43: யாருமில்லாத அறை – ஆசுஅந்த அறையில் யாருமில்லை. இருள் கவிழ்ந்திருக்கிறது. மின்மினிகளின் சிறிது வெளிச்சம் அறை முழுவதும் படர்ந்து, தன்னைத்தானே ஒளிர முயற்ச்சிக்கிறது. ஆனால், யாருமே இல்லாத ஓர் அறையில், அறை மட்டுமே இருப்பது அறைக்கு வருத்தமாகத்தானிருக்கும்.

ஒரு நேரத்தில்,இந்த அறையில்,
பாட்டன் பாட்டி, அம்மா அப்பா,
அண்ணன் தங்கைகள் இருந்திருப்பார்கள். இப்போது அறை மட்டுமேஇருக்கிறது. அறைக்கு காற்றோட்டமாக சன்னல் இருக்கிறது.இந்த சன்னலை சுற்றி குளவிக்கூடும்,
சிலந்தி வலைகளும் இருக்கின்றன.

முன்பொரு நாளில் வாழ்வின் சிக்கல்கள்
கனத்த அறை. ஒவ்வொரு முடிச்சும், ஒவ்வொரு சிக்கலால் கோத்து இருக்கும் போது, மனிதனின் கண்ணீர்த் துளிகளில் நிரம்பி வழிகிறது.

அதன் ஆன்மாவில், ஒரு பாடல் எப்போதும் ஆற்றுப்படுத்துகிறது.

அறையே
உன் கவலையென்ன
அறையே
உன் காதலென்ன
அறையே
உன் ஆனந்தமென்ன

எல்லாமும் தொலைத்து ஏன்? தனிமையில் நிற்கிறாய், என மின்மினிகள் கேட்கின்றன. அறை என்னச் சொல்லும்.எல்லோரும் வெளியேறிவிட்டாலும், எனக்கான விடுதலை இந்த சன்னல் மட்டுமே.

அதன் அன்புபோதும் அறைக்கு. விடுதலையெல்லாம் சன்னலின் சதுரத்தினூடாக வெளியேறும் காற்றே,
ஒரு மனிதனின் விடுதலை மட்டுமல்ல.
அறையின் விடுதலையும்.

ஆசு