உரைச் சித்திரக் கவிதை 45: தினந்தோறும் – ஆசுகாலையிலேயே அந்த சின்னஞ்சிறு குருவி கூவி எழுப்புகிறது. இருள் மடங்கி புலருதலின் துலக்கம் அதற்கு தெரியும் போல.

ஒவ்வொரு நாளும் வெறுமையும் சந்தோசமும் அதற்குப் புரிந்திருக்கும்.
காலையின் அதன் குரல், போர்வை விலக்கி கேட்கையில், அதன் ஏக்கம்
சன்னமாய்த் தெறித்து விழுகிறது.

எத்தனையோ எல்லைத் தாண்டி,
தேடி வரும் காரணம் என்ன?. அதற்கும் குடும்பம் இருக்கும். குழந்தைகள் இருக்கும். பசி பாடுகள் இருக்கும்.
அதன் இனத்தில் ஒன்றி இருக்கும்.
கவலை இருக்கும்.

எல்லாமும், அந்த சின்னஞ்சிறு குருவிக்கு உண்டென்றாலும், அந்த மனிதனை காலை தூக்கம் கலைத்து எழுப்புகிறது. சின்னஞ்சிறு அலகில் சீண்டி,எழுப்பும் அதற்கு தான் விடியலின் பொருள் அறியும்.

“காற்று அறியும் வார்த்தையாக
கனல் சுடும் நாளாக
எழுக நின்!

காலை துயில் எழுப்பி
மாலையின் சேதி சொல்ல
எழுக நின்!

நேற்றை தூக்கி எறிந்து
இன்றென் புன்னகையுடன்
எழுக நின்!”

அந்த சின்னஞ்சிறு குருவியின் பாடலில் தான், எத்துணை பொருள் பொதிந்தது.
மனிதனின் விழிப்பைத் தேடும் அதற்கோ. தனக்கான விழிப்பையும் அறிந்து தான் இருக்கிறது.

அவன், அந்த சின்னஞ்சிறு குருவியின் பாடலில் விழிக்கிறான். மனிதனின் வாழ்வை இவ்வளவு எளிதாக சொல்லும்
அதற்கு தான் சுமை எதுவுமில்லை. பிறர்க்கென வாழும் அன்பில், சுமைகள்
இறகுகளாகிவிடுகின்றன.

ஆசு