உரைச் சித்திரக் கவிதை 46: இதற்கு முன்னால் – ஆசுஇதற்கு முன்னால்
*********************

இதற்கு முன்னால், இந்தப் பாதையில் யார் யாரோ வந்து போயிருக்கின்றனர்.
எளிய மனிதர்கள் வரும் பாதையில், பெரிய மனிதர்களின் பாசாங்குகள் உறைந்து கிடக்கின்றன.

யார் பெரிய மனிதன் என்கிற கேள்வியில், வறிய மனிதனின் கண்ணீரை எவன் சாறாய்ப் பருகுகிறானோ அவனே தான்.
அந்த பெரிய மனிதன் அற்பங்கள்
ஒரு நொடியில் வெளிறிகின்றன.

ஆனால், ஓர் எளியவனுக்கு தான் இந்தப் பாதை எனில், இதற்கு முன், அவன் தான்
இந்தப் பாதைக்கு அடித்தளம் இட்டவன்.
ஒவ்வொரு அடியிலும், வாழ்வின் பாடுகளாய் நகர்த்தியவன்.

இதற்கு முன்
இந்தப் பாதை எப்படியோ
இருந்தது
இதற்கு முன்
இந்த காலம் எப்படியோ
இருந்தது
இதற்கு முன்
இந்த வாழ்வு எப்படியோ
இருந்தது
இப்போது சரியாகிவிட்டது
இப்போது விடிந்துவிட்டது.

எப்படி பாடினாலும், இதற்கு முன்னால் அந்தப் பாதை எப்படி இருந்ததோ அப்படித்தான் இருக்கிறது. எளிய மனிதனுக்கும், பெரிய மனிதனுக்குமான
போராட்டம். பிரச்னைகளை முன்னெடுத்து அபத்தங்களை நெருப்பிடும் நேரம். வாழ்வு எனும்
சமூக எல்லையில் அவரவர்களுக்கான உரிமை மீட்பு.

தகர்க்கப்பட்டது, மீட்கப்பட்டதெல்லாம் மீண்டும், இதற்கு முன்னால் இருந்தது போலவே இருக்கிறது. எதைக் கொண்டும் சமன் செய்ய முடியவில்லை.
கை விலங்கு எப்போதோ உடைக்கப்பட்டுவிட்டது. இப்போதும் புதிய வடிவில், புதிய விலங்குகள்.

இதற்கு முன்னால் இருந்தன என்பது இப்போது, அதைவிட பூதாகரமாக உருவெடுக்கின்றன.

இந்தப் பொழுது விடிந்தது
நாளையும் விடியும்
நமக்கான பொழுதாக.

ஆசு