உரைச் சித்திரக் கவிதை 48: தூண்டில் முள்ளில் சிக்கிய மீன் – ஆசுதூண்டிலின் தக்கை நீரில் மிதக்கிறது. நீரே பூமியின் மீது மிதக்கையில், இந்த தக்கை அதன் மீது மிதக்கிறது.தூண்டில்
முள்ளில் சொருகப்பட்ட மண் புழு நெளிகிறது. அதன் வலியை நீர் அறியும்.
சில துடிப்புகளில் உயிர் பிரிந்துவிடும்.
ஆனால், கரைமீது நிற்கும் தூண்டில்காரனுக்கு மீன் சிக்க வேண்டும் என்பது தான் கவலையாய் இருக்கும்.

மண் புழுவை மீன் தொட்டு இழுக்கிறது.
அதன் பசி அதற்கு. பசித்த வயிறுக்கு
துளியான சந்தோசம். நீரின் மீதுள்ள தக்கை அசைகிறது. தூண்டில்காரனுக்கு
தூண்டிலில் சொருகிய மண்புழு இரையை மீன் முழுமையாக பற்றும் கணங்கள் அவனுக்குத் தெரியும்.

நீர் அசைவில், தாய்மை பாலூட்டும் உணர்வின் மனம் தளும்பும் அலையின் அந்த தருணம், மீன் மயக்கம் கொண்டு இரையை கவ்வும். தூண்டில்காரன் அவன் கண்
இமைகளின் துடிப்புகளில்
சந்தோச புன்னகைகள் புரண்டு நெளியும்.

நீர் நிலையின் மேல் வட்டமிடும் மீன்கொத்திகளுக்கு, மீன் தூண்டிலில்
சிக்கித் தவிக்கும் அதன் துடிப்புகள்
அறியும். அவற்றின் அலகுகள் தூண்டிலுக்கு ஒப்பானாலும், வலியாகி
துடிப்பதற்குள், உள்ளே அனுப்பி ஜீரணித்துவிடுகிறது.

மனிதன் தான், ஒவ்வொருவரின் வலியின் கடைசி துடிப்பையும், ரசித்து மகிழ்கிறான். தூண்டில்காரனுக்கு,
மீன் தூண்டில் சிக்கியதும், கரைமேல் போடுகிறான். அதன் கடைசி துடிப்பும்
வலியும், அவன் ருசிக்கானது.

மானுடத்தின் வலி, தூண்டில் முள்ளில் சிக்கிய மீன் வலியின் துயரான காலத்தில் வாழ்வது எவ்வளவு கொடுந்துயர்.
இந்த துயரம், தூண்டில் முள்ளை
அறுத்து எறியும்வரை நீண்டு கொண்டுதானிருக்கும்.

ஆசு

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)