உரைச் சித்திரக் கவிதை 49: நான் ஏன்? எழுதுகிறேன் – ஆசுஎன்னைச் செல்வதெல்லாம் உங்களுக்காக தான். உங்களுடனான நானில், நான் ஒன்றும் பெரியதில்லை. காடுகளாய் அடர்ந்து கிடக்கும் அநுபவத்தில்
என்னை எழுதிச் செல்கிறது. சிறியதின் சிறியதான பொறி.

என் எழுதுகோல், வாழ்வின் இருள் அகற்றும் சிறு சுடரின் நம்பிக்கை.
இந்தச் சுடரில் தெரிவதெல்லாம்.கண்ணீர்த் துளிர்த்த
பெருந்துயரின் தீரா மெளனம். மெளனத்தை வெளியேற்றுவது அத்தனை எளிதானது இல்லை. ஒன்று
கரையேறும்போது, இன்னொன்று கூடி விடுகிறது.

எழுதிச் செல்கிறது
ஒரு காலம்
எழுதிக் கனக்கிறது
ஒரு மனம்
எழுதாத வேளையில்
வெப்பச் சலனமாய்
பொழிகிறது மழை.
மழைத் தேங்கிய பள்ளத்தில்
மற்றுமோர் சகதி
அகற்றும் கணத்தில்
எழுத்தெல்லாம் குமிழிகளின்
தாரகை.

திரும்பத் திரும்ப, எழுதிய தாள்களில்
குவிகின்றன. கடந்ததின் முன் கரைந்து மீளும் நினைவுகள். நினைவுகள் பாயாய்
சுருட்டி வைக்கையில், அதன் மடிப்புகளில்
சிக்கித் தவிக்கிறது எழுதிக் குவித்தவை.

எழுதி மாளாத வாழ்வில், இந்தப் பொழுது எப்போது விடியும் ?. விடியும் எனிலும்
எல்லோருக்குமாய் விடிய வேண்டும்.

எழுதுக
எனச் சொல்லும் உள்ளத்தில்
அதோ
பிறையாகிய கனவுகள்
எதிரே நிற்கின்றன
ஒரு கவிதையாய் ஏந்துகிறேன்
கனவுகளில்
என் திசை காண.

எழுதுகோலின் முள்ளில்,
சொற்களின் தீராத நேசத்தை அள்ளித் தெளிக்கையில், வாசலின் முன் வந்து இறங்கும் மேகத்தில், சிறகுகள் வானமாக விரிகிறது.

அப்போது எல்லோருக்குமான சிறகுகள் பொருத்திப் பறக்க எத்தனிக்கையில்,
எழுத்துகள் பேரன்பின் ஆவணமாக,
உங்களுக்காகவே எழுதுகிறேன்.
எழுதி முடியாத ஒரு வாழ்க்கையாக.

ஆசு

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)