உரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசுஒன்று
…………
முதல் கண்,
ஒரு பெண்ணின் ஊடலில் முகம் நாணுவதையும், நேசிப்பின் உரையாடலையும் அது உற்றுக் கவனிக்கிறது.ஒன்றைப் புரிந்து கொள்வதும், அது அர்த்தமின்றி பிறழ்வதும் அந்தக் கண்ணின் பார்வையில், பிடிபடாமல் போக முடியவில்லை.ஆணுக்கும் பெண்ணுக்குமான பார்வையில், பெண் பார்வையோ கனியின் சுவை. ஆண் பார்வையோ அச்சுவையின் அமிர்தத்தைப் பருகல்.

இரண்டு
……………
இரண்டாம் கண்,
ஓர் ஆணின் மதியை எண்ணி வியக்கிறது. அதோ தூர தேசப் பறவை ஒன்றின் சிறகுகள், அது கடந்தேகிய
எல்லையை துல்லிய கணக்கின் அளவீடுகளால், பார்வையின் இடைவெளியை குறைக்கிறது. எழுதிச் சென்ற விதியை பொய்யென்று உணர்கிறது. மேலும் பறந்தேகும் நாளையின் நம்பிக்கையில், ஆண் எப்போதும் விழித்திருக்கிறான். தூரமும்
எல்லையும் தாண்ட பறவைக்கு தான்
என்றில்லை. ஆணின் கடைக்கண்ணில்
தேங்கும் ஒரு துளி கண்ணீரும் உலகம் யாவையும் உயிர்த்துப் பறத்தலே.

மூன்று
…………..
மூன்றாம் கண்,
இந்த வாழ்க்கை சொல்லித்
தருவதையும், சொல்ல விழைவதையும்
உள்வாங்குகிறது. ஒன்றை சொல்லிவிட்டு பின் வாங்குவதில்லை.
சொல்ல நினைப்பதற்தற்கு முன்
அது என்னவாக இருந்ததோ, பின்னும் இருக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக எழும் குரல்கள் ஒடுக்கப்பட்டுச் சிதறுகையில்,
அறங்களின் முகங்களின் உள்ளே
போலி இதயம் ஒளிந்திருக்கையில்,
அந்தக் கண் பார்த்துக்கொண்டிருப்பதில்லை
எரியும் தழலில் பூக்கும் கங்குகளாக.

ஆசு