உரைச் சித்திரக் கவிதை 50: சிறகுகளின் பாடல் – ஆசுபறவைகளின் சிறகுகள் வானத்தின் வரிகளை கோர்த்துப் பாடுகின்றன. பறவைகளின் காடாகிய வானத்தில், பறந்த சுவடுகளின் ஈரத்தை மேகம் ஈர்த்து,அதன் பாடல்களில் மழையாக
சூல் கொள்கிறது. பறவைக்கும், மனிதனுக்குமான தூர எல்லையில்,
பறவையின் வாழ்வு மகிழ்வு நிறைந்தது.

பறவைகளின் சிறகுகள் வானத்தின் மீட்சிக்காக,
தன் எல்லையைக் கடக்கும்போது,
ஒரு மனிதன் குறுக்கிடுவதில்லை.
அன்பென்ற பெருங்கடலின் மேல்
ஒரு வானம். இந்த வானத்தில் மேகம் மட்டுமில்லை. ஆயிரமாயிரம் புனைவுத் தேவதைகள் நடமிடுகின்றனர். அந்த புனைவுத் தேவதைகள், பூமியின் ரணங்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

பறவைகளின் சிறகுகள் பிரபஞ்சத்தின் எல்லாவற்றையும் கிரகித்து தனக்கான
உலகத்தை படைக்கிறது. பூமியும் அவற்றின் இயக்கத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை அதற்கு.

பறவைகளின் சிறகுகள்
வானத்தை அளக்கின்றன
ஒவ்வொரு தடத்திலும்
தீராத அன்பின் பாடலை விட்டுச் செல்கிறது.

எதற்கெடுத்தாலும் கண்ணீரைச் சிந்தும்
மனிதனுக்கு, பறவைகளின் சிறகுகள்
நம்பிக்கேயே பாடலாக கொள்கின்றன.

பகைமூண்டு
வேர் அறுக்கும்
இனத்தை, மொழியை,நாட்டை
அவற்றின் பாடலால்
நேசமிகு நெருக்கம் கொள்கிறது.

வானத்தின் பறவைகளின் சிறகுகள்.மீட்சிக்கான அதன் பாடலை நாள்தோறும் பாடுகின்றன. பூமியின் கீழேயுள்ள எல்லாவற்றுக்குமான மீட்சிக்கான பாடலாகவும் இருக்கிறது.

சிறகுகளுக்குள்,ஒவ்வொரு இறகாக அடுக்கப்பட்ட வரிகளில், பாடலாகும் நேசத்தின் உயிர்த் துளிகளாய் சிறகடிக்கிறது காலம்.

ஆசு

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)