உரைச் சித்திரத் தொடர் 6: தற்குறியின் கொடிவழி – கவிஞர் ஆசுஅவனொரு தற்குறி. கொடி வழியில் போகிறான். அவன் தலைக்கு மேலே வானத்தின் நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஒரு நட்சத்திரம் அவனைப் பார்த்து கண்சிமிட்டுகிறது, “அவன் நான் வழி தவறி வந்துவிட்டேன். இந்த வழி எங்கே போகிறது” என்கிறான்.

அதுவொரு கொடி வழி, திகைத்கிறான். ஒற்றையடிப்பாதை சூரமுள்ளும், காரமுள்ளும் அவன் தேகத்தை தைக்கிறது. “இவ்வழி கனவு தேசம் போகிறது என்கிறது நட்சத்திரம்”.

“நானோ தற்குறி, ஒன்றும் அறியாதவன்
கனவுக்கு என்று ஒரு தேசம் இருக்கிறதா”
என வினவுகிறான் அவன். “தற்குறிகளின் புகலிடம் கனவு தேசம் என்கிறது” நட்சத்திரம்.

அவன், “நான் அந்த தேசத்தை கண்டடைவதே நல்லது” என்கிறான்.

நட்சித்திரம் “அதுவொரு பைத்தியக் கூடாரம் போலிருக்கும்”

“அதனால் என்ன அவ்வுலகத்தினர்
அன்பு நிறைந்தவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்”.

அவன் செல்லும் கொடிவழியை, ஊர்வன, நடப்பன, பறப்பன, இடை இடையே கன்னிகள், காடேறிகள், காட்டுத் தேவதைகள் எல்லோரும் வழிமறிக்கின்றது போல எண்ணுகிறான்.

நட்சத்திரம் அவனை அழைத்துக் கொண்டுச் செல்லுகிறது.கொடி வழியான
தனி வழியில் திகைப்பூண்டு மிதித்த மாதிரி, திகைத்து நிற்கிறான். அவன்
காணப்போகும் கனவு தேசம், கைகளில்
அகப்பட்டுவிட்டது. அவன் மகிழ்ச்சிக்கு அப்போது அளவே இல்லை.

அவனை அழைத்துப்போய் காட்டிய
கனவு தேசத்தில் அன்பைத் தவிர
வேறோன்றும் இல்லை.

“ஓ நட்சத்திரமே, உமக்கு என் நன்றி”
என்கிறான் அவன்.

ஆசு