இது கவித்துவம் சொட்டுகிற உரைநடைச் சித்திரம்.
இதில் இலை உதிரலாம். விதை முளைக்கலாம்.
தென்றல் காற்றில் தேன் சொட்டலாம்.
ஆனால் மரம் அசைவதில் மனம் அசையக்கூடும். கவிஞன் செல்கிற திசைவழியில் நம் மனமும் செல்லக் கூடும்.
காற்றின் கைரேகை நம் கண்களுக்குப் புலப்படவும் கூடும்.
தொடர்வோம் வாருங்கள் நண்பர்களே.
இலையுதிர் கானம்
*********************
இலை உதிர்கிறது. இடை இடையே
ஒரு பாடல் அதைச் சீண்டுகிறது. நீ உதிர்வதற்கான நேரம் இல்லையே என்கிறது. இலை உதிர்வதற்கு நேரம் வேண்டுமா என்ன! காற்று அசைக்கிறது.
காம்பை ஒடிக்கிறது. ஒடிந்த இலை என்னச் செய்யும்.
பாடலில் மயங்கும் இலை. உன்மத்தமாகிச் சுற்றுகிறது. கீழே பூமி மேலே ஆகாயம். இடையில் மிதப்பது சுலபமில்லை.காற்றுத் தீண்டும், இறகுகள் உரசும்.
உதிரா இலை, உதிர்ந்த இலையைப் பார்த்து வருத்தமிடுகிறது. ஒரு நாள் உதிரும்போது, கிளையிலிருந்து பிரிவதற்கான வலியை எப்படித் தாங்குவேன்.. பிரிந்து தான் ஆக வேண்டும் எனில், கொம்பும் கொப்பும்
அந்தப் பிரிவை எப்படித் தாங்கிக் கொள்ளும்.
இடையில் ஒலிக்கும் பாடல், அதன் வலிக்கு மருந்தாகிறது. ஆகாயத்தின் ஓர்
அடுக்கில் பாடிப்போகும் ஒரு பறவையின்
கானமல்லவா?.
உதிரும் இலை அந்த கானத்தை முணுமுணத்து இறங்குகிறது.
சன்னத் தாலாட்டின் சேயின் அழுகையை
துடைக்கும் தாயின் அன்பு அது.
எனினும், இலைகள் உதிர்கின்றன.
அதன் பாடலை சுமந்தபடி.
ஆசு.
1 Comment